இரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும்? அமெரிக்காவும் போரில் இறங்குமா?
இஸ்ரேல் மீதான இரானின் திடீர் தாக்குதல் உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இரானால் ஒரே இரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை தங்கள் இலக்குகளைத் தாக்காதவாறு இடைமறித்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. அதேசமயம், ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் உள்ள இரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் தெரிவித்தது.
இந்தப் பிரச்னையில் அடுத்து என்ன நடக்கும் என்பது தற்போதைய கேள்வி. ஆனால் இது இரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கிறார் பிபிசியின் பாதுகாப்புச் செய்தியாளர் பிராங்க் காட்னர்.
இஸ்ரேல் கவனமாக செயல்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியிருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குறிப்பிடத்தக்க பதிலைக் கொடுப்போம் என இஸ்ரேல் ஏற்கனவே சபதம் செய்துள்ளது. தற்போதைய இஸ்ரேல் அரசாங்கம், இஸ்ரேலிய வரலாற்றில் மிகவும் கடுமையான மற்றும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத ஒரு அரசாகக் கருதப்படுகிறது.
எனவே இரானின் இந்த நேரடித் தாக்குதலுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட வாய்ப்பில்லை, இருப்பினும் களத்தில் அதற்கென சில வரம்புகள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?
இஸ்ரேல், பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளின் பேச்சைக் கேட்டு ‘மூலோபாய பொறுமையைக்’ கடைபிடிக்கலாம். இரானைத் தாக்குவதற்குப் பதிலாக லெபனானில் உள்ள ஹெஸ்புலா அல்லது சிரியாவில் உள்ள ராணுவத் தளங்கள் போன்ற இரானின் நண்பர்களை குறிவைப்பதைத் தொடரலாம். இதை இஸ்ரேல் பல ஆண்டுகளாக செய்து வருகிறது.
இரான் எந்த தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவியதோ, இஸ்ரேல் அதைக் குறிவைக்கலாம். நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களால் பதிலடி கொடுக்க முடியும்.
ஆனால் அவ்வாறு நடந்தால் இரான் அதை போரின் தொடக்கமாகப் பார்க்கும். ஏனெனில் இஸ்ரேல் நேரடியாக இரானைத் தாக்குவது அதுவே முதல் முறையாக இருக்கும். இதுவரை பிராந்தியத்தைச் சுற்றியுள்ள இரான் ஆதரவு போராளி அமைப்புகளை மட்டுமே இஸ்ரேல் தாக்கியுள்ளது.
அவ்வாறு இல்லையென்றால், இரானின் சக்தி வாய்ந்த புரட்சிகர காவலர் படைக்கு சொந்தமான தளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களைத் தாக்கி, இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம். இது விரிவான பதிலடி தாக்குதலாக இருக்கும்.
பிந்தைய இரண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை இஸ்ரேல் தேர்ந்தெடுத்தால், இரான் ஒரு புதிய தாக்குதலை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும்?
இங்கே முக்கிய கேள்வி என்னவென்றால், இவை அனைத்தும் இரான் - இஸ்ரேல் பிரச்னையில் அமெரிக்காவையும் இழுத்துவிடுமா என்பது தான்.
இரான் மீதான எந்தவொரு பதிலடி தாக்குதலிலும் அமெரிக்கா பங்கேற்காது என வெள்ளை மாளிகை இஸ்ரேலுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இரானின் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை மிகவும் பொறுமையாக மூலோபாய ரீதியாகவும் சிந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜான் கிர்பியும், அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாக்கும். ஆனால் இஸ்ரேலின் பதில் நடவடிக்கையில் பங்கேற்காது என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அந்நாட்டில் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. இது தவறான நிலைப்பாடு என்றும் அமெரிக்காவின் சில முன்னாள் அதிகாரிகள் விமர்சிக்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய ஜான் போல்டன், இரானின் அணுசக்தி திட்டத்தின் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் தொடுக்க நினைத்தால், அமெரிக்காவும் பெருமையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஊடகமான நியூஸ் நேஷனிடம் கூறியுள்ளார்.
ஒருவேளை அமெரிக்கா உள்ளே நுழைந்தால், இரானுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே முழு அளவிலான போருக்கு அது வழிவகுக்கும்
ஆறு வளைகுடா அரபு நாடுகளிலும், சிரியா, இராக் மற்றும் ஜோர்டானிலும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளன.
பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளை மீறி இரான் தயாரித்துள்ள பாலிஸ்டிக் மற்றும் பிற ஏவுகணைகளின் இலக்குகளாக இந்த அமெரிக்க ராணுவத் தளங்கள் மாறக்கூடும்.
ஒருவேளை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், இரான் நீண்ட காலமாக அச்சுறுத்தி வந்த ஒன்றைச் செய்யக்கூடும். அதாவது வெடிகுண்டுகள், ட்ரோன்கள் மற்றும் அதிவேக போர்க் கப்பல்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட இரான் முயற்சி செய்யலாம்.
அவ்வாறு நடந்தால் உலகின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியை இரான் துண்டித்துவிடும். அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளை பிராந்திய அளவிலான போருக்கு இழுத்துச் செல்லக்கூடிய ஒரு பயங்கர நிகழ்வாக இது அமைந்துவிடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



