You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிலி காட்டுத் தீயில் 51 பேர் பலி, பல ஆயிரம் வீடுகள் தீக்கிரை - சுற்றுலாப் பயணிகள் என்ன ஆயினர்?
சிலி நாட்டில் வல்பரைசோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாயின.
வெள்ளிக்கிழமை முதல் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு அவசர நிலையயும் அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக், பிரகடனப்படுத்தியுள்ளார்.
சிலி வரலாறு காணாத அளவு காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வல்பரைசோவில் மட்டும் சுமார் 7,000 ஹெக்டர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது
அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் சென்றடைவது மீட்புக் குழுவினருக்கு சவாலாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வல்பரைசோவுக்கு விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் பலர் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 116 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வல்பரைசோவுக்கு கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும்.
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
காட்டுத் தீயால் 3,000 முதல் 6,000 வீடுகள் வரை கடுமையாக சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள்து.
சுமார் 1,400 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவியது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிப்பது மிக மிக கடினமாக இருப்பதாக சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஊடகங்களிடம் தெஹ்ரிவித்தார்
கடந்த ஆண்டு இதே சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவத்தால் 27 பேர் உயிரிழந்ததாகவும் 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
கூடுதல் விவரங்கள் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)