You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடைசி ஓவரில் ‘மரண பயம்’ காட்டிய அர்ஷ்தீப்; மைதானத்தை மூழ்கடித்த ‘ரிங்கு சிங்’ முழக்கம்
- எழுதியவர், க போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
ரிங்கு சிங் கடைசிப்பந்தில் அடித்த பவுண்டரி, ரஸலின் அற்புதமான ஃபினிஷிங் ஆட்டம் ஆகியவற்றால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த ஐபிஎல் சீசனில் 50 ஆட்டங்கள் முடிந்தபின் நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவையும் கடைசிப்பந்துவரை கணிக்க முடியாமல்தான் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டம் உச்சக் கட்ட திருப்பத்தில் முடிந்தநிலையில், நேற்றைய கொல்கத்தா, பஞ்சாப் இடையிலான ஆட்டம் ரசிகர்களின் இதயத்துடிப்பை கடைசிப்பந்துவரை எகிறச் செய்தது.
கடைசி 2 ஓவர்கள்
கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடந்த இந்த ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் இருந்தது.
கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றிக்கு, 26 ரன்கள் தேவைப்பட்டது.களத்தில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல் இருவரும் இருந்தனர். சாம் கரன் வீசிய 19-வது ஓவரில் ரஸல் தனது மஸுல் வலிமையை வெளிப்படுத்தினார்.
2வது பந்தில் மிட்விக்கெட் திசையில் ரஸல் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார், 3வது பந்தில், மீண்டும் மிட்விக்கெட் திசையில் 2வது சிக்ஸரை ரஸல் விளாசினார். 4வது பந்தில் ரன் சேர்க்காத ரஸல், 5வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசி 20 ரன்களைச் சேர்த்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
திக் திக் கடைசி ஓவர்
கடைசி ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஸ்ட்ரைக்கரில் இருந்த ரஸல் முதல் பந்தில் ரன் ஏதும் சேர்க்கவில்லை. 2வது பந்தில் ரஸல் ஒரு ரன்னும், 3வது பந்தில் ரிங்கு சிங் ஒரு ரன்னும் எடுத்தனர்.
கடைசி 3 பந்தில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. 139 கி.மீ வேகத்தில் அர்ஷ்தீப் வீசிய 4-வது பந்தில் ரஸல் ஸ்வீப்பர் கவரில் அடித்து ரஸல் 2 ரன்கள் சேர்த்தார்.
5-வது பந்தை அர்ஷ்தீப் வீசியபோது, ரஸல் பேட்டில் பந்து படாமல் பீட்டன் ஆனது. ஆனாலும், ரஸலும், ரிங்கு சிங்கும் ரன் ஓட முயன்றனர். ஆனால், ஜிதேஷ் சர்மா பந்தை எறிய அர்ஷ்தீப் அதை லாவகமாகப் பிடித்து ரஸலை ரன் அவுட் செய்தார்.
செட்டில் ஆன பேட்ஸ்மேன், ரஸல் 42ரன்களில் (23பந்து, 3சிக்ஸர், 3பவுண்டரி) ஆட்டமிழந்து சென்றதால், ஆட்டத்தின் முடிவு என்னாகுமோ என்று ரசிகர்கள் தலையில் கைவைத்தனர்.
கடைசிப்பந்தை ரிங்கு சிங் எதிர்கொண்டார். அர்ஷ்தீப் வீசிய பந்தை ரிங்கு சிங் டீப் பைன் லெக் திசையில் தட்டி பவுண்டரி அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பரபரப்பான வெற்றியைப் பெற்றுக்க கொடுத்தார்.
ரிங்கு சிங் 10 பந்துகளில் 21 ரன்கள்(ஒருசிக்ஸர், 2பவுண்டரி) என சூப்பரான கேமியோ ஆடி வெற்றிக்கு துணையாக அமைந்தார்.
ரிங்கு சிங்கின் சாகசம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு வீரர் ஹீரோவாவது எளிதான செயல் அல்ல. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங் களமிறங்கியபோது, ரசிகர்கள் அனைவரும் ரிங்கு,ரிங்கு என்று சத்தமிட்டனர். போட்டி முடிந்தபின்பும், ரிங்கு சிங் பெயரைக் கூறி சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் அதில் 10 ஆட்டங்களில் ரிங்கு சிங் அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். இரு போட்டிகளில் மட்டுமே ரிங்கு சின் 30 ரன்கள் சேர்த்துள்ளார், மற்ற 8 ஆட்டங்களிலும் 40 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார், இதில் 2 அரைசதங்களும் அடங்கும்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை இக்கட்டான நிலையில் இருந்து வெற்றிக்கு வழிநடத்திய ஆந்த்ரே ரஸல் ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் கொல்கத்தா மக்களின் ஹீரோக்களாக ரஸலும், ரிங்கும் நேற்று ஜொலித்தனர்
10 புள்ளிகளில் 5 அணிகள்
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் 5 வெற்றி, 6 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 6வதுஇடத்துக்கு சரிந்துள்ளது.
தற்போது 10 புள்ளிகளுடன் ஆர்சிபி, கேகேஆர், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 5 அணிகள் கடும் நெரிசலில் உள்ளன. இதில் இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி இடையிலான ஹைபிரஷர் ஆட்டத்தில் வெல்லும் அணி அடுத்த கட்டத்துக்கு உயரும். இதனால் இந்த ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் 7ஆட்டங்களில் 2 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்தது. அடுத்த 4 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
சென்னை அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 13 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நாளை நடைபெறும் போட்டியில் அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும். எல்லா அணிகளும் மொத்தம் 14 ஆட்டங்களில் ஆட வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 ரன்களை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங் இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 5 பந்துகளில் 4 ரன்களை வழங்கி, ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார், ஆனால், கடைசிப்பந்தில் அடித்தபவுண்டரி, அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது. தோல்வியின் விரக்தியில் அர்ஷ்தீப் சிங் மைதானத்தில் சோர்ந்து அமர்ந்துவிட்டார். அவரை நடுவர் தேற்றி எழுப்பி அனுப்பி வைத்தார்.
மைதானத்தில் 'ரிங்கு சிங்' முழக்கம்
வெற்றிக்குப்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் “ கடைசிப் பந்தில் வெற்றி கிடைக்கும் என நான்நினைக்கவில்லை. நான் 5 சிக்ஸர்களை விளாசும்போதுகூட, கடைசிபந்து வெற்றி குறித்து நினைக்கவில்லை. நானாக இருந்தால் கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஆட்டத்தை டையில் முடிக்கவே முயன்றிருப்பேன். ஆனால், ரிங்கு உண்மையில் ஹீரோ. கொல்கத்தா மைதானமே ரிங்கு, ரிங்கு என்று முழங்கியது எனக்குப் பெருமையாக இருந்தது” எனத் தெரிவித்தார்
தமிழக வீரர் வருணின் மாயஜாலப் பந்துவீச்சு
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்களிப்பாக இருந்தனர். அதிலும் குறிப்பாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய குடைச்சலாக இருந்து, முக்கிய விக்கெட்டுகளை இழக்க காரணமாக இருந்தது.
ஆகச்சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து, லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரிஷி தவண் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்ற இரு சுழற்பந்துவீச்சாளர்களான சுயாஷ் சர்மா 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். சுனில் நரேன் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்தார்.
இந்த ஆட்டத்தில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள், ராணா என 4 பேரும் சேர்ந்து 13 ஓவர்களை வீசி பஞ்சாப் ரன் குவிப்பை பெருமளவு கட்டுப்படுத்தினர். இந்த 4 பேரின் ஓவர்களிலும் சேர்த்து 88 ரன்கள்தான் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 35 டாட் பந்துகள் அதாவது, 6 ஓவர்களை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியதே, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
ராணா, ஜேஸன் ராய் கூட்டணி
180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஜேஸன் ராய், குர்பாஸ் களமிறங்கினார். இருவரும் அதிரடியாகத் தொடங்கி பவுண்டரிகள், சிக்ஸர்களை விளாசி ரன்களைக் குவித்தனர். நாதன் எல்லீஸ் வீசிய ஸ்லோவர் பந்தில் கால்காப்பில் வாங்கி, குர்பாஸ் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.
அடுத்துவந்த கேப்டன் ராணா, ராயுடன் சேர்ந்தார். கேப்டன் ராணா களத்துக்கு வந்தது முதல் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். ஜேஸன் ராய் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக லிவிங்ஸ்டன் வீசிய 2 ஓவர்களிலும், ராணா, ராய் இருவரும் சேர்ந்து 5 பவுண்டரிகளை வெளுத்துனர்.
அருமையாக ஆடிய ஜேஸன் ராய் 38 ரன்கள் சேர்த்தநிலையில் ஹர்பிரீத் பிரார் பந்துவீச்சில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வெங்கடேஷ் நீண்டநேரம் நிலைக்கவில்லை. வெங்கடேஷ் 11 ரன்கள் சேர்த்த நிலையில், சஹர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று லிவிங்ஸ்டனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு ராய், ராணா கூட்டணி 51 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
கடைசி 10 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 104 ரன்கள் தேவைப்பட்டது. நடுப்பகுதியில் ராகுல் சாஹர் வீசிய 4 ஓவர்கள் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தி, நெருக்கடியளித்தது. இதனால், 12 ஓவர்களில்தான் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது.
5வது விக்கெட்டுக்கு ரஸல் களமிறங்கி, ராணாவுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ராணா 37 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 51 ரன்னில் ராகுல் சஹர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 51ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ரிங்கு சிங், ரஸல் இருவரும் இருந்தனர். எல்லீஸ் வீசிய 17-வது ஓவரை குறிவைத்த ரஸல் பவுண்டரியும் , ரிங்கு சிங் ஒரு சிக்ஸரும் விளாசி 15ரன்களைச் சேர்த்தனர்.
ஆட்டத்தை மாற்றிய 19-வது ஓவர்
அர்ஷ்தீப் வீசிய 18-வது ஓவரிலும் ரிங்குசிங், ரஸல் தலா ஒருபவுண்டரி அடித்து 10 ரன்களைச் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. சாம் கரன்வீசிய 19-வது ஓவரை ரஸல் வெளுத்து வாங்கினார், 3 சிக்ஸர் உள்ளிட்ட 20 ரன்களை ரஸல் விளாசி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்.
கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ரஸலையும்,ரிங்கு சிங்கையும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் அர்ஷ்தீப் கட்டுப்படுத்தியதால் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
5வது பந்தை எதிர்கொண்ட ரஸல், அடிக்கமுடியாமல் ரன்ஓடி ரன்அவுட் செய்யப்பட்டதால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசிப்பந்தில் கொல்கத்தா வெற்றிக்கு2 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய கடைசிப்பந்தை டீப் பைன்லெக் திசையில் தட்டிவிட்டு, ரிங்கு சிங் பவுண்டரியுடன் வெற்றி பெற வைத்தார். 6-வது விக்கெட்டுக்கு ரஸல், ரிங்கு சிங் 54 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
“கிரேட் ஃபினிஷர் ரிங்கு”
ஆட்டநாயகன் விருது வென்ற ஆந்த்ரே ரஸல் கூறுகையில் “ ரிங்குவை நினைத்து பெருமையாக இருக்கிறது. 5வது பந்தை எதிர்கொள்ளும் முன் என்னிடம் வந்துபேசிய ரிங்கு, 5வது பந்து பீட்டன் ஆகிவிட்டால்கூட நாம் ரன் ஓட வேண்டும்என்றார்.
அதற்கு நானும் சம்மதித்தேன். அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் சிறந்த ஃபினிஷர் ரிங்கு. அனைத்து அழுத்தங்களையும் ரிங்கு தனது கடைசி ஷாட்டால் குறைத்துவிட்டார். களத்துக்கு உள்ளேயேயும், வெளியேயும் ரிங்கு எனக்குச் சிறந்த நண்பர். பயிற்சியிலும் இருவரும் ஒன்றாகவே இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்
தவானின் தவறான முடிவுகள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 214 ரன்கள் சேர்த்தும் அதை பஞ்சாப் கிங்ஸ் அணியால் டிபெண்ட் செய்ய முடியாததற்கு முக்கியக் காரணம் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தாததே காரணம். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்ப்ரீத் பிரார், சஹர் இருவருக்கும் முழுமையாக ஓவர்களை வழங்கவில்லை. ஆனால் அந்த ஆட்டத்தில் இருவர் மட்டும்தான் கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.
இந்த ஆட்டத்தில் ஹர்ப்ரீத் பிராருக்கு ஒரு ஓவர் மட்டுமே தவன் வழங்கினார். பிரார் தான் வீசிய ஒரு ஓவரில் 4 ரன்கள் கொடுத்து ஜேஸன் ராய் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். ஆனால் தொடர்ந்து ஹர்ப்ரீத் பிராருக்கு ஏன் ஓவர்களை தவான் வழங்கவில்லை என்பது குழப்பமாக இருக்கிறது. ஒருவேளை 3 ஓவர்களை பிராருக்கு வழங்கியிருந்தால், கொல்கத்தா அணியின் ரன் சேர்ப்பை இன்னும் கட்டுப்படுத்தி நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கலாம்.
ஆனால், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ரன்களை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங், சாம் கரனுக்குத்தான் தொடர்ந்து ஓவர்களை தவண் வழங்கியது தவானின் தவறான முடிவு. கொல்கக்தா ஆடுகளம் வேகம்குறைந்த பந்துவீச்சாளர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துழைக்கிறது எனத் தெரிந்தும் ஏன் வேகப்பந்துவீச்சுக்கு தவண் முக்கியத்துவம் அளித்தார் என்பது தெரியவில்லை.
இந்த ஆட்டத்தில் ரிஷி தவான் நன்றாகப் பந்துவீசினார், அவருக்கு முழுமையாக ஓவர்களை வழங்கவில்லை. ஆனால், லிவிங்ஸ்டன் ஓவர்களை வெளுக்கிறார்கள் எனத் தெரிந்தும் அவருக்கு தவான் ஓவர்களை வழங்கினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அதை கேப்டன் ஷிகர் தவண் சரியாகப் பயன்படுத்திவில்லை. பந்துவீச்சாளர்களை எப்படிப் பயன்படுத்துவது, ரொட்டேட் செய்வது எப்படி எனத் தெரியாமல், களத்தில் கோட்டைவிட்டதே தோல்விக்கு இட்டுச் சென்றது.
குறிப்பாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதுவரை சாம் கரன் அணியின் வெற்றிக்காக பெரிதாக பங்களிப்பு ஏதும் செய்யவில்லை. சிக்கந்தர் ராசா 2 ஆட்டங்களில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தார் அந்தஅளவுகூட சாம் கரன் ஆடவில்லை. லிவிங்ஸ்டோன், சாம் கரன், ரபாடா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருந்தும் முறையாகப் பயன்படுத்தவில்லை.
பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையும் பலமாக இருந்தும் இந்த ஆட்டத்தில் முக்கிய வீரர்கள் ரன் சேர்க்கத் தவறவிட்டனர். கேப்டன் ஷிகர் தவண் 57 ரன்கள்(47பந்துகள்) சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் லிவிங்ஸ்டோன்(15), ஜிதேஷ் சர்மா(21), சாம் கரன்(4) ராஜபக்ச(0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தது ஸ்கோரின் வேகத்தைக் குறைத்தது. இந்த 4 பேட்ஸ்மேன்களும் ஓரளவுக்கு ஸ்கோர் செய்திருந்தால், பஞ்சாப் அணி கூடுதலாக 40 ரன்களைச் சேர்த்திருக்கும்.
கடைசி நேரத்தில் தமிழக வீரர் ஷாருக்கான், ஹர்பிரீத் பிரார் இருவரும் சேர்ந்து ஆடிய கேமியோவால் ரன்கள் வேகமாகச் சேர்ந்தது.
18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால், கடைசி இருஓவர்களில் ஷாருக்கான், பிரார் அதிரடியில் இறங்கி ரன் சேர்த்ததே ஸ்கோர் 179 ரன்களை எட்டியது. அரோரா வீசிய 19-வது ஓவரில் ஷாருக்கான் இரு பவுண்டரி, பிரார் ஒரு பவுண்டரி என 15ரன்கள் சேர்த்தனர்.
ஹர்சித் ராணா வீசிய கடைசி ஓவரில் ஷாருக்கான் ஒரு சிக்ஸர், 2பவுண்டரியும், பிரார் ஒரு பவுண்டரியும் என 21 ரன்கள் சேர்த்தனர். இருவரும் சேர்ந்து இரு ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்தனர். இவர்களும் சொதப்பி இருந்தால், பஞ்சாப் ஸ்கோர் 160 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.
சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை
தோல்விக்குப்பின் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவண் கூறுகையில் “ எனக்கு மகிழ்ச்சியில்லை. வெற்றியை இழந்துவி்ட்டோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை, நல்ல ஸ்கோரை இலக்காக வைத்தும் எங்களால் டிபெண்ட் செய்ய முடியவில்லை.
கடந்த ஆட்டத்தில் இருந்துமீண்டு வந்து அர்ஷ்தீப் சிறப்பாகப் பந்துவீசினார். கடைசி ஓவர்வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றார் அர்ஷ்தீப். “எங்களிடம் நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள்இல்லை என்று நினைக்கிறேன், எங்களிடம் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் இருந்தாலும் லெக்ஸ்பின்னர் இல்லை. இதனால்தான் அதிகமாக ரன்களை வழங்கினோம்” எனத் தெரிவி்த்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்