சஸ்பென்ஸ் திரில்லர் கதை, 'சிரிக்காத' உதயநிதி ஸ்டாலின் - 'கண்ணை நம்பாதே' சினிமா விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், twitter/RedGiantMovies_

பிரசுரிக்கப்பட்டது

உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஆத்மிகா, பூமிகா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ளது 'கண்ணை நம்பாதே' திரைப்படம். அருள்நிதி நடிப்பில் வெளிவந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரில்லர் படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ஒரு பேச்சுலர். அவருடன் ஒரே வீட்டில் வசிக்கிறார் அவரது நண்பரான பிரசன்னா. ஒர் இரவில் சாலையில் காரை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு மாட்டிக்கொண்ட பூமிகாவுக்கு உதயநிதி ஸ்டாலின் உதவி செய்கிறார்.

பூமிகாவின் காரை அவரது வீட்டிற்குக் கொண்டு செல்ல உதயநிதி உதவுகிறார். அதற்கு கைம்மாறாக அவரது காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுமாறு பூமிகா உதயநிதியிடம் கூறுகிறார்.

வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலையில் காரை திறந்து பார்க்கும் போது டிக்கியில் பூமிகா பிணமாக இருக்கிறார். அவரை யார் கொலை செய்தார்கள் எனத் தெரியாத நிலையில், அவரது உடலை மறைக்க உதயநிதிக்கு பிரசன்னா உதவுகிறார்.

இறுதியில் கொலையை செய்தது யார், இதில் சிக்கிய உதயநிதி எப்படி மீண்டார் என்பது கண்ணை நம்பாதே படத்தின் மீதிக் கதை.

உதயநிதியின் நடிப்பு எப்படி இருக்கிறது?

“படம் முழுக்க சிரிக்காமல், இறுக்கமான முகத்துடன் உதயநிதி வருகிறார் என தினமலர் இணையதளம் விமர்சனம் எழுதியுள்ளது. ஆரம்பம் முதலே ஒரு சராசரி இளைஞனாக வரும் உதயநிதி கிளைமாக்சில் திடீரென ஆக்சன் ஹீரோவாக மாறுவதை நம்ப முடியவில்லை,” என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது.

“செய்யாத குற்றத்திற்காகப் போராடும் இளைஞனாக நடித்து உதயநிதி மனதில் இடம் பிடிக்கிறார். காதல், பரிதவிப்பு எனக் கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்,” என்று மாலைமலர் இணையதளம் விமர்சனம் வழங்கியிருக்கிறது.

“உதயநிதியின் நடிப்பில் வழக்கம்போல எந்தவித மாற்றமும் இல்லை” என இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சனம் எழுதியுள்ளது.

“ஒரு கொலைக்கு இவ்வளவுதான் அதிர்ச்சியா என்று உதயநிதியின் நடிப்பைப் பார்க்கும்போது ஓரிரு இடங்களில் தோன்றுகிறது,” என நியூஸ் 18 தமிழ் விமர்சனம் கொடுத்துள்ளது.

'சஸ்பென்ஸ் திரில்லர்'

உதயநிதி ஸ்டாலின், சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், twitter/RedGiantMovies_

கண்ணை நம்பாதே படத்தின் பெரும்பலம் ‘சஸ்பென்ஸ்’ என இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளம் விமர்சனம் கொடுத்திருக்கிறது. மேலும், “ஒவ்வொரு காட்சியும் திரைக்கதை அமைப்பால் திரில்லிங்காக நகர்கிறது” என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரில்லர் பாணியில் வெளியாகியுள்ள இந்தப் படம் ‘‘Decent Thriller வகையில் சேர்கிறது’’ என நியூஸ் 18 இணையதளம் எழுதியுள்ளது.

“ஒரு மர்ம நாவல் படிப்பதைப் போல அடுத்தடுத்த திருப்பங்களுடன் படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதை அமைந்திருக்கிறது. கிளைமாக்சில் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார்” இயக்குனர் என தினமலர் இணையதளம் விமர்சனம் வழங்கியிருக்கிறது.

அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இறுதிக் காட்சி வரை ட்விஸ்ட் வைத்திருப்பது சிறப்பாக இருப்பதாக மாலைமலர் இணையதளம் வழங்கியுள்ள விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

கதாபாத்திரங்களின் பங்களிப்பு

உதயநிதி ஸ்டாலின், சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், twitter/RedGiantMovies_

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உதயநிதி ஸ்டாலின் இல்லாது, ஆத்மிகா, பிரசன்னா, பூமிகா, ஸ்ரீகாந்த், சதிஷ் எனப் பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

“அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். இது தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதையும் சொல்ல முடியாது,” என நியூஸ் 18 தமிழ் இணையதளம் விமர்சனம் வழங்கியிருக்கிறது.

“பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்” என இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. உதயநிதியின் நண்பனாக கூடவே வரும் பிரசன்னாவின் கதாபாத்திரம் நாம் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது என தினமலர் விமர்சனம் எழுதியுள்ளது.

பூமிகாவின் கதாபாத்திரம் முக்கியானதாக அமைக்கப்பட்டுள்ளது என தினமலர் தனது விமர்சனத்தில் எழுதியிருக்கிறது. “நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று பூமிகா நடித்திருக்கிறார்” என்று மாலைமலர் இணையதளம் விமர்சனம் வழங்கியுள்ளது.

கதாநாயகி ஆத்மிகா “சாதாரண காதலியாக வந்து செல்கிறார்” என இந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம் எழுதியுள்ளது. காதலியாக வரும் ஆத்மிகா, “அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என மாலைமலர் இணையதளம் எழுதியிருக்கிறது.

“படத்தில் கதாநாயகியாக வரவேண்டும் என ஆத்மிகா வருகிறார். ஒரு குட்டி பிளாஷ்பேக்கில் அவர் வந்து செல்கிறார்” என தினமலர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் பலம் - பலவீனம்

உதயநிதி ஸ்டாலின், சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், twitter/RedGiantMovies_

சித்துகுமார் இசையில் பாடல்கள் அனைத்து ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது, ஆனால் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருக்கிறது. ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியாக இருக்கிறது என்று மாலைமலர் விமர்சனம் வழங்கியிருக்கிறது.

சித்துகுமாரின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது என்று தினமலர் விமர்சனம் எழுதியுள்ளது. இரவு நேரக் காட்சிகள் ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவில் குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

“பாடல்கள் தேறாத நிலையில், பின்னணி இசையில் விட்டதை மொத்தமாகக் காண்பித்துவிட்டார் சித்துகுமார்” என்று இந்தப் படத்தின் பின்னணி இசை குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் எழுதியிருக்கிறது. படத்தொகுப்பு தேவையான அளவில் செய்யப்பட்டு இருக்கிறது என்றும் அந்த விமர்சனத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணை நம்பாதே படத்திற்கு ஒளிப்பதிவு, பின்னணி இசை பக்கபலமாக அமைந்து காட்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு கடத்த உதவுகிறது என நியூஸ் 18 இணையதளம் விமர்சனம் கொடுத்திருக்கிறது.

படம் சஸ்பென்ஸாக சென்றாலும், கதை அடுத்தடுத்து இழுத்துக்கொண்டே சென்றது சலிப்பைத் தருவதாக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் குறிப்பிட்டுள்ளது.

பூமிகாவின் உடலை காரில் வைத்துக் கொண்டு சென்னை முழுவதும் சிசிடிவியில் மாட்டாமல் உதயநிதி சுற்றுவது லாஜிக் மீறலாக இருப்பதைப் போன்ற ஒரு சில கேள்விகள் இந்தப் படத்தை பார்க்கும்போது எழுவதாக தினமலர் விமர்சனம் வழங்கியிருக்கிறது.

“மெடிக்கல் கிரைம் பாணியில் படமாக்கப்பட்டுள்ள 'கண்ணை நம்பாதே'வின் திரைக்கதையில் சில கேள்விகள் இருந்தாலும் பெரிதாகத் தெரியாத வகையில் இயக்குநர் மு.மாறன் படமாக்கியுள்ளார்” என மாலைமலர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

கண்ணை நம்பாதே படம் ‘ஏமாற்றவில்லை’ என்று தினமலரும் ‘நம்பலாம்’ என மாலை மலர் இணையதளமும் விமர்சனம் வழங்கியிருக்கிறது.

உதயநிதியின் நடிப்பில் வழக்கம் போல எந்தவித மாற்றமும் இல்லை. பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். நாயகி ஆத்மிகாவிற்கு சாதாரண காதலி கதாபாத்திரம் தான்.

காணொளிக் குறிப்பு, பிபிசியிடம் மனம் திறந்த முதுமலை யானை வளர்ப்பு தம்பதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: