குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீன கொடி, திமுகவை விமர்சிக்கும் பாஜக – என்ன நடக்கிறது? - காணொளி

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீன கொடி, திமுகவை விமர்சிக்கும் பாஜக – என்ன நடக்கிறது? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவுக்காக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களில் அளித்த விளம்பரத்தில் சீன தேசியக் கொடி இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. இதற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார். திமுகவோ, விளம்பரம் அச்சிடுவதில் சிறு தவறு நடந்துவிட்டதாக கூறுகிறது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஃபிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, தமிழ்நாடு மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை அளித்திருந்தார்.

இதில், சில ராக்கெட்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் பிரதானமாக இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனக் கொடியும் மற்றொரு ராக்கெட்டில் சீன எழுத்துகளும் இடம்பெற்றிருந்தன.

இது குறித்து பேசிய பிரதமர் மோதி, "திமுகவின் இன்றைய விளம்பரம் நகைப்புக்குரியதாக உள்ளது. அவர்கள் இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலளித்த தி.மு.கவைச் சேர்ந்த தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, " ஆர்ட் ஒர்க் செய்தவர்கள் இந்தப் படத்தை போட்டிருக்கிறார்கள். சீனப் பிரதமர் இங்கே வருகிறார். அவரை பிரதமர் வரவேற்று மகாபலிபுரத்தில் வாக்கிங் சென்றார்கள். அதை எதிரி நாடு என யாரும் அறிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

நாளிதழ்களில் அந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அளித்திருந்த தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது என்றும் அதில் எந்த நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சர்ச்சைக்குள்ளான இந்த விளம்பரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு வடிவமைப்பு நிறுவனத்தில் தயார் செய்யப்பட்டு, பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

எப்படி இந்தத் தவறு நேர்ந்தது என்பது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொலைபேசியிலும் நேரிலும் தொடர்புகொண்டு விளக்கம் பெற பிபிசி தமிழ் முயற்சி மேற்கொண்டது. ஆனால், அவர்கள் தரப்பில் யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)