அன்னூர் விவசாயிகள் - ஆ.ராசா பேச்சுவார்த்தை: என்ன முடிவு எட்டப்பட்டது?

கோவை அடுத்த அன்னூர் அருகே தொழிற்பூங்கா அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகள் போராட்டக் குழுவினரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவை அடுத்த குழியூர் மாரியம்மன் கோயிலில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த இடம் கோவையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த சந்திப்பின்போது அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர்கள், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3,864 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
தொழிற்பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 17 கிராமங்களில் போராட்டக் குழுவினர் அலுவலகங்கள் அமைத்துள்ளனர். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அன்னூர் தொழிற்பூங்கா திட்டம் தொடர்பாக கோவையில் டிசம்பர் 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு கம்பெனிக்கு சொந்தமான தரிசு நிலத்தில் மட்டும் தொழிற்பூங்கா அமையும் என்றும், விவசாயிகளின் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த உறுதிமொழியோடு தமிழ்நாடு அரசும் செய்தி வெளியிட்டது. ஆனால், தொழிற்பூங்கா அமைப்பதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
"நான்குநேரியில் உள்ள 2000 ஏக்கர் தொழிற்பூங்காவில் 20 ஆண்டுகளாக எந்த தொழிற்சாலையும் வரவில்லை. அன்னூரில் தொழிற்பூங்கா யாரும் கேட்கவில்லை. நாங்குநேரிக்கு போகாமல் அன்னூருக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவது நிலத்திற்காக அல்ல நீருக்காக தான். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பவானி அணையின் நீர்வளம் வேண்டும். அதற்காக தான் தமிழ்நாடு அரசு இங்கு தொழிற்பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது." என்று இந்த திட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்..
இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடக்கிறது.
ஆ.ராசா கூறியது என்ன...
குழியூரில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்த்தை நடத்திய பிறகு ஆ.ராசா விவசாயிகள் மத்தியில் பேசினார்.
அப்போது, "தொழிற்பூங்காவுக்காக வேளாண் நிலங்களை எடுக்க வேண்டாம் என நான் கோரிக்கை வைத்ததை ஏற்றுக் கொண்டு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன் பிறகு போராட்டக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பை பார்த்த பிறகு டிட்கோ சேர்மன், மாவட்ட ஆட்சியர், தொழிற்துறை அமைச்சர் என அனைத்து தரப்பினருடன் பேசினேன். கம்பெனி நிலங்கள் 2000 ஏக்கர் இல்லை எனக் கூறினார்கள். அது தொடர்பான ஆவணங்களையும் சரிபார்த்து ஆலோசனை நடத்தினோம். கம்பெனி நிலங்களும் தகுதியான நிலங்களாக இருந்தால் மட்டுமே எடுப்போம்.
போராட்டக் குழுவினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விவாதம் நடத்த உள்ளோம்.
விஸ்கோஸ், சாயப் பட்டறை போன்ற தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்துவிட்டு தான் விவசாயிகள் எதிர்க்கிறார்கள். காற்று மற்றும் தண்ணீர் மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.” என்றார்.
"15 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் "
மேலும் அவர், “போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர், அன்னூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தனபால், சேர்மன் மற்றும் நான் அடங்கிய 15 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்க உள்ளோம். குழுவை உருவாக்கிய பின்பு ஆட்சியர் தலைமையில் விவாதம் நடத்தலாம். இராணுவ தளவாட நிறுவனங்களில் கழிவு வராது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக நான் இருந்துள்ளேன். மாசு இல்லாத நிறுவனங்கள் பற்றி எனக்கு தெரியும்.
அன்னூரில் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென்றால் அதற்கான முன்மொழிவை அந்தக் குழுவில் வைத்து தான் அனுமதி வழங்கப்படும்.
ஆனால் நாம் விவசாயத்தை நம்பி மட்டும் இருக்க முடியாது. விவசாயமும் மாறி வருகிறது. வளர்ச்சிக்கு தேவையான தொழிற்சாலைகளும் நமக்கு அவசியம்." என்றார்
விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அது தொடர்பாக பேசியவர், 'பெரம்பலூரில் தொழிற்பேட்டை அமைந்த இடம் அரசு நிலம். அதனால் அங்கு விவசாயம் செய்து வந்த நரிக்குறவர்களுக்கு நிலம் வழங்க முடிந்தது. ஆனால் அன்னூரில் அரசு நிலம் இல்லை. கம்பெனி நிலங்களை நாங்கள் எடுத்து கொடுத்துவிட முடியாது. அதனால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது.
மேலும் அன்னூரில் அமையாவிருக்கும் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும். அதையும் நாம் உறுதி செய்வோம். விவசாயிகளுக்கு வேறு எந்த பிரச்சனை என்றாலும் நானும் வந்து போராடுவேன்." என்றார்.

விவசாயிகள் கூறியது என்ன?
ஆ.ராசா பேசிவிட்டு சென்ற பிறகு போராட்டக் குழுவின் தலைவர் குமார ரவிக்குமார் விவசாயிகள் மத்தியில் பேசினார்.
அப்போது, " நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நம்மை நேரில் வந்து உத்திரவாதம் அளித்தது மகிழ்ச்சி. இங்கு தொழிற்சாலைகள் வேண்டாம் என்கிற எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இங்கு தொழிற்சாலைகள் வர முடியாது என்பது தான் யதார்த்தம். 2000 ஏக்கர், 1200 ஏக்கர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் கம்பெனி நிலங்கள் 800 ஏக்கர் தான் உள்ளது தெரிய வந்துள்ளது. அதுவும் 96 இடங்களில் பிரிந்துள்ளது.
டிட்கோ சேர்மன் மற்றும் தாசில்தாரை நேரில் அழைத்து வந்து காண்பிக்க உள்ளோம். இங்கு தொழிற்சாலை அமைய 2 ஏக்கர் நிலம் கோரிக்கையை கைவிட முடியாது. டிட்கோ வெளியேறினால் எல்லோரும் வெளியேறி விடுவார்கள். நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தொழிற்பூங்கா வராது, தொழிற்சாலைகள் வராது என்பதை அவர்களே அறிவிக்க வேண்டும். அப்போது தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
இந்தப் போராட்டத்தை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. நமக்கு எந்த கட்சியும் வேண்டாம். எந்தக் கட்சியும் அமைப்பும் இயக்கமும் உரிமை கொண்டாட வேண்டாம்." என்றார்.
"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சாத்தியமில்லை"
அன்னூர் மட்டும் மேட்டுப்பாளையம் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அது பற்றி பேசிய குமார ரவிக்குமார், "வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றால் மூன்று போகம் விளைய வேண்டும். அதனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று ஆ.ராசா தெரிவித்தார். அதைப்பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்.
இங்கு தொழிற்சாலைகள் வேண்டாம் என்கிற கிராம சபை தீர்மானங்கள் உள்ளன. டிட்கோ ஒரு ரியல் எஸ்டேட் இடைத்தரகர் தான். இங்குள்ள நிலையை பார்த்தால் தொழிற்சாலை வராது. அதே சமயம் கம்பெனி நிலங்களை விவசாயிகள் யாரும் வாங்கக்கூடாது. இது வரை வாங்கியிருந்தால் பிரச்சனை இல்லை. இனிமேல் நிலங்கள் வாங்கினால் அது செல்லாது. அந்த நிலங்கள் நம்முடன் இணைந்து போராடிய விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தான் செல்ல வேண்டும்." என்றார்.
செந்தில் பாலாஜி ட்வீட்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
“அன்னூர் பகுதியில் விவசாயிகளின் விருப்பமின்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படாது என அறிவித்துள்ள தமிழக முதலமைச்சரின் உத்தரவை விவசாயிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றனர்.” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












