You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - கனடா உறவைப் பாதித்த நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது - என்ன நடக்கிறது?
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்களை கனடா காவல்துறை கைது செய்துள்ளது.
காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இந்தியாவோ தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்து விட்டது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் கைது செய்ததாக கனடாவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். மேலும் கைதான மூன்று நபர்களின் பெயர்களையும் அறிவித்தார்.
நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் கைது செய்ததாக கனடாவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். மேலும் கைதான மூன்று நபர்களின் பெயர்களையும் அறிவித்தார் -கரன் ப்ரார் (22), கமல் ப்ரீத் சிங் (22), மற்றும் கரண் ப்ரீத் சிங் (28) என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் எட்மன்டனில் வசித்து வந்ததாக அவர் கூறினார். அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கில் "இந்திய அரசாங்கத்துக்கு தொடர்புகள்" உள்ளனவா என்பது உட்படப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் டேவிட் டெபுல் கூறுகையில், "இந்த வழக்கில் கைதானவர்களிடம் தனித்தனியாக மற்றும் பிரத்யேக விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிச்சயமாக இன்று கைது செய்யப்பட்டவர்களின் ஈடுபாடு மட்டுமின்றி அவர்களைத் தாண்டியும் விசாரணை நடத்தப்படும்,” என்று கூறினார்.
முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)