You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
75,000 ஆண்டுகள் முன் இறந்த நியாண்டர்தால் பெண் - எப்படி? ரகசியத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க வகையில் உருவகப்படுத்தி உள்ளனர். இது மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன. அவை "நன்கு குழம்பிய பிஸ்கட்" எப்படி இருக்குமோ அந்த நிலைத்தன்மையைக் கொண்டிருந்தன.
ஆராய்ச்சியாளர்கள் அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்த வேண்டியிருந்தது. அதன் பின்னர், வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள் (paleo artists) நியாண்டர்தால் பெண்ணின் 3D மாதிரியை உருவாக்கினர்.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில், பிபிசி ஸ்டுடியோஸ் உருவாக்கிய புதிய ஆவணப்படத்தில் இந்த உருவ அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. "நியாண்டர்தால்களின் ரகசியங்கள்” (Secrets of the Neanderthals) என்னும் இந்த ஆவணப்படத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன நமது மனித இனத்தின் பரிணாம உறவுகளைப் பற்றி இதுவரை கண்டறிந்த உண்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
நியாண்டர்தால் பெண்ணின் முகத்தைச் சித்தரித்த சிற்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பழங்கால மானுடவியல் நிபுணரான டாக்டர் எம்மா பொமரோய் பிபிசியிடம் கூறுகையில், "நியாண்டர்தால் இனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் பெண்ணின் முகம் எங்களுக்கு உதவும் என்று நான் நினைக்கிறேன்."
"பழங்கால மனிதனின் எச்சங்களுடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமானது. இது பெரிய பாக்கியமும்கூட, குறிப்பாக இந்தப் பெண் எங்களின் ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமானவர்," என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)