விஜய் கூட்டத்தில் தாய், இரு மகள்கள் பலி - உடன் சென்ற உறவினர் கண்டது என்ன?

- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் தாய், இரு மகள்கள் என ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரியை சேர்ந்தவர் ஆனந்த்ஜோதி. இவர், ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா. இத்தம்பதியினரின் எட்டு வயது மகள் சாய் லக்ஷனா, 4 வயது மகள் சாய் ஜீவா.
இவர்கள் நான்கு பேரும் குடும்பமாக சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரையை காண சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நான்கு பேரும் தனித்தனியாக பிரிந்துவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். அதில் ஹேமலதாவும், இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளனர்.
மூவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கு இன்று காலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இந்த சம்பவம் பற்றி தான் பேசும் நிலையில் இல்லை என ஆனந்த்ஜோதி தெரிவித்தார். அவர்களின் உறவினர் சிலர் நடந்தது என்ன என்பது குறித்து பிபிசியிடம் கூறினர்.
அவரின் உறவினர் சோளன் என்பவர், "விஜய் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் மின்கம்பத்தின் மீது ஏறியதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால், இருட்டாகிவிட்டதால், திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதில் நால்வரும் பிரிந்துள்ளனர். மனைவியை ஓரிடத்தில் இருக்க வைத்துவிட்டு மகள்களை காண ஆனந்த்ஜோதி சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் ஹேமலதாவும் தொலைந்துள்ளார். கூட்டம் கலைந்த பின்பே மூவரும் வெவ்வேறு இடங்களில் சடலங்களாக கிடந்துள்ளனர்." என்றார்.

'உயிர் போனாலும் பரவாயில்லை என காப்பாற்றியிருப்பேன்'
ஆனந்த் ஜோதியின் உறவினர் பாஸ்கர் என்பவர் கூறுகையில், "அந்த பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது, மின்விளக்கு ஒருபகுதியில் எரிகிறது, மற்றொரு பகுதியில் எரியவில்லை. மைக் சரியாக கேட்கவில்லை. விஜய்யின் வாகனத்தை நோக்கி ஏராளமானோர் அலைமோதினர்." என்றார்.
பாஸ்கரும் அந்த பரப்புரையை காண சென்றுள்ளார். "எனக்கு தெரிந்து நான் சிலரை காப்பாற்றினேன். என் அண்ணி (ஹேமலதா), குழந்தைகளை என்னால் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தால் என் உயிர் போனாலும் பரவாயில்லை என காப்பாற்றியிருப்பேன்." என்றார்.
பரப்புரை நடந்த இடம் மிகவும் குறுகிய இடம் எனக்கூறிய அவர், விஜய் அப்பகுதிக்கு வருவதற்கு தாமதமானதால் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்ததாக தெரிவித்தார்.
"இருளில் எந்தப் பக்கம் செல்வதென தெரியாமல் பலரும் கீழே விழுந்துள்ளனர். குழந்தைகள், பெண்களை அருகிலுள்ள கடைகளின் கூரைகளின் மீது ஏற்றி காப்பாற்றினோம். ஆனால், அண்ணியையும் குழந்தைகளையும் பார்க்க முடியவில்லை. போலீஸ் பாதுகாப்பும் அங்கு இல்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நெரிசல் இருந்தது." என தெரிவித்தார் பாஸ்கர்.

பட மூலாதாரம், Sam Daniel/BBC
ஆனந்த்ஜோதியின் சித்தப்பா மனோகர், "இதை எல்லோரும் ஓர் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பரப்புரையை நேரடியாக பார்க்க வேண்டும் என புறப்பட்டதால் இப்படியொரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சியிலேயே பார்த்திருக்கலாம். நம் உயிருக்கு நாம் தான் பாதுகாப்பு. பரப்புரைக்கு குழந்தைகள், முதியவர்கள் வரவேண்டாம் என கூறுகின்றனர். அதை நாம் கேட்க வேண்டும். இப்போது உயிர் போய்விட்டது, இனி வருமா? மூன்று பேர் இறந்துவிட்டனர், ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது. குழந்தைகளை பார்த்தால் கண்ணீர் வருகிறது." என வேதனையுடன் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























