காணொளி: ஆப்கனுக்கு ஆதரவாக ஒன்றுகூடிய நாடுகள் - டிரம்புக்கு எச்சரிக்கையா?
ஆப்கானிஸ்தானிலோ அல்லது அதன் அண்டை நாடுகளிலோ எந்தவொரு நாடும் ராணுவ உட்கட்டமைப்புகளை நிலைநிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை அடங்கிய அமைப்பு ஒன்றின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
அதற்கு தாலிபன் அரசு கடுமையாக எதிர்வினையாற்றியது.
இது போன்ற ஒரு சமயத்தில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
மாஸ்கோவில் நடந்த சந்திப்பு
'மாஸ்கோ ஃபார்மட் கன்சல்டேஷன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான்' (Moscow Format Consultations on Afghanistan ) என்ற அமைப்பின் 7-வது சந்திப்பு செவ்வாய்க்கிழமை ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது.
இது ஆப்கானிஸ்தானில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இந்த சந்திப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொண்டன. ஐரோப்பாவின் பிரதிநிதியும் இந்த கூட்டத்தில் விருந்தினராக பங்கெடுத்தார்.
முதல் முறையாக இந்த அமைப்பின் கூட்டத்தில் ஆப்கானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியும் இடம்பெற்றார்.
இதன்பிறகு, இந்த அமைப்பில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அறிக்கையில் கூறப்பட்டது என்ன?
ஆப்கானிஸ்தானை ஒரு சுதந்திரமான, ஒன்றுபட்ட மற்றும் அமைதியான நாடாக நிறுவுவதற்கு தங்கள் அசைக்க முடியாத ஆதரவை இந்த நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தியதாக அந்த அமைப்பு வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டது.
பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானுக்கும் உலகின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்த நாடுகள் குறிப்பிட்டன.
ஆப்கானிஸ்தானில் நிலையான ஆட்சி அமைய பொருளாதாரம், சுகாதாரம், வறுமை ஒழிப்பு, விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளிலும் உதவுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.
"இருதரப்பு மற்றும் பலதர மட்டத்திலும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பு அண்டை நாடுகளுக்கும் அதற்கு அப்பாலான அச்சுறுத்தலுக்கும் பயன்படுத்தக்கூடாது" எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பக்ராம் விமான தளத்தை கட்டுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
டிரம்ப் கூறியது என்ன?
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், கடந்த மே மாதம் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப் பக்ராம் விமான தளம் சீனா கைப்பற்றியதாகவும், அது சீனாவின் அணு ஆயுத தளங்களுக்கு மிக அருகில் உள்ளதாகவும் கூறினார். சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்தது.
கடந்த மாதம் பிரிட்டன் சென்ற போது டிரம்ப் மீண்டும் பக்ராம் தளத்தைப் பற்றி பேசினார். பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமருடன் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி செய்தியாளரைச் சந்தித்த டிரம்ப், "தாலிபன்களுக்கு எங்களிடம் இருந்து பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதனால், பக்ராம் தளத்தை மீண்டும் நாங்கள் பெற முயற்சி செய்கிறோம்" என்றார்.
எந்த வெளிநாட்டு ராணுவ இருப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தாலிபன்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தாலிபன்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், பக்ராம் விமான தளத்தை திரும்பப் பெறுவது பற்றி தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதை அவர்கள் திரும்பக் கொடுக்காவிடில் நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் எனவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த தாலிபன் ராணுவத்தின் தளபதியாக உள்ள காரி ஃபசீஹுதீன் அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு அங்குல நிலத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனதெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



