பூமிக்குத் திரும்பியதும் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வெளியேறிய தருணம் - காணொளி

பூமிக்குத் திரும்பியதும் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வெளியேறிய தருணம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வெளியே அழைத்துவரப்பட்ட தருணம் இது.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.

விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் 9 மாதங்களுக்கு மேலாக அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது.

மார்ச் 18ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரை பூமிக்கு அழைத்துவரும் பணி தொடங்கியது.

இந்திய நேரப்படி மார்ச் 18ம் தேதி காலை 10.35 மணிக்கு சுனிதா உள்ளிட்டோர் பயணிக்கும் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது.

மார்ச் 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் பூமி திரும்பினர்.

ஃப்ளோரிடாவின் கடற்பரப்பில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது.

படகில் சென்ற மீட்புப் படையினர் விண்வெளி வீரர்கள் வந்த விண்கலத்தை மீட்டனர்.

பின்னர் மேகன் என பெயரிடப்பட்ட மீட்பு கப்பலில் விண்கலம் ஏற்றப்பட்டது.

விண்கலத்தில் 17 மணி நேரத்தை செலவிட்ட பின்னர், அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்துவரப்பட்டனர்.

9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் விரைவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு அவர்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவார்கள்.

நீண்ட கால விண்வெளி பயணங்கள் உடலை பாதிக்கின்றன, விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழந்து தசை இழப்பை சந்திக்கின்றனர். இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. கண் பார்வையும் பாதிக்கப்படலாம்.

உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம், எனவே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் உடலும் புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழகுவதால் அவர்களுக்கு விரிவான உடற்பயிற்சி முறை வழங்கப்படும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது அளித்த பேட்டிகளில், இருவருமே தாங்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் தங்குவதற்கு நன்கு தயாராக இருந்ததாகக் கூறியுள்ளனர் .

கடந்த மாதம் CBS இடம் பேசிய சுனிதா வில்லியம்ஸ், "என் குடும்பத்தினரையும், என் அன்புக்குரிய நாய்களையும் மீண்டும் பார்ப்பதுடன், கடலில் குதிப்பதையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பூமிக்குத் திரும்பி பூமியை உணருவது மிகவும் நன்றாக இருக்கும் ." என்றார்.