சந்திர கிரகணம் - சூரிய கிரகணம் ஆகிய இரண்டில் அதிக நேரம் நீடிப்பது எது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று இரவில் தோன்றிய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. முழுமையான கிரகணம் 82 நிமிடங்களுக்கு நீடித்தது. பொதுவாக சூரிய கிரகணத்தைவிட சந்திர கிரகணம் அதிக நேரம் நீடிப்பது ஏன்?
சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலா
இந்தியாவைப் பொருத்தவரை, செப்டம்பர் ஏழாம் தேதி இரவு 9.57 மணியளவில் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழ ஆரம்பித்தது. 11.01 மணியளவில் பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்தது. இந்தத் தருணத்தில்தான் நிலவு, ரத்தத்தில் தோய்த்து எடுத்த பந்தைப் போல தாமிரச் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இந்த நிலை 12.23வரை நீடித்தது. அதாவது 82 நிமிடங்கள் பூமியின் நிழலால் சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டது. அதிகாலை1.26 மணியளவில் கிரகணம் முழுமையாக முடிவுக்கு வந்தது.
இந்த சந்திர கிரகணத்தின்போது பூமியால் நிலவு முழுமையாக மறைக்கப்பட்டாலும், தாமிரச் சிவப்பு நிறத்தில் தெரிந்ததற்கு காரணம் இருக்கிறது. பூமியை கடந்து செல்லும் போது சூரிய ஒளி சிதறுவதே இதற்குக் காரணம்.
உலகின் பல நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலும் தொலைநோக்கிகள் மூலமும் கண்டு ரசித்தனர்.
2022ஆம் ஆண்டிற்குப் பிறகு, இவ்வளவு நீண்ட நேரத்திற்கு சந்திர கிரகணம் இந்தியாவில் காணக் கிடைத்தது இதுவே முதல் முறை. இதற்கடுத்த முழுமையான சந்திர கிரகணம் 2028ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இந்தியாவில் தெரியும்.

பட மூலாதாரம், Getty Images
சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணம் அதிக நேரம் நீடிக்கும்
முழுமையான சந்திர கிரகணத்தை ஆசியா முழுவதிலும் பார்க்க முடிந்தது. அதேபோல, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் தென்பட்டது. அதேபோல, முழுமையான கிரகணம் கிட்டத்தட்ட 82 நிமிடங்களுக்கு நீடித்தது. வழக்கமாக முழுமையான சூரிய கிரகணங்கள் மிகச் சில நிமிடங்களே நீடிக்கும் நிலையில், இந்த சந்திர கிரகணம் ஒப்பீட்டளவில் மிக அதிக நேரம் நீடித்தது.
சூரிய கிரகணத்தைவிட சந்திர கிரகணங்கள் பொதுவாகவே கூடுதல் நேரம் நீடிக்கின்றன. இதற்குக் காரணம் என்ன?
பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும்போது சந்திர கிரகணமும் சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும்போது சூரிய கிரகணமும் காணக் கிடைக்கின்றன. அடிப்படையில் சந்திரனின் நிழலைவிட பூமியின் நிழல் பெரிதாக இருக்கும் என்பது, சந்திர கிரகணம் கூடுதல் நேரம் நீடிக்க முக்கியமான காரணம். ஆனால், வேறு சில முக்கியமான அம்சங்களும் இதில் பங்கு வகிக்கின்றன என்கிறார் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள்.

பட மூலாதாரம், Getty Images
சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணம் அதிக நேரம் நீடிப்பது ஏன்?
பிபிசி தமிழிடம் பேசிய சவுந்தரராஜ பெருமாள் "சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், அதில் சில நுணுக்கமான விஷயங்களும் இருக்கின்றன. சந்திர கிரகணம் ஏற்பட்ட நேற்றைய தினத்தில் நிலவு, பூமியிலிருந்து சுமார் மூன்று லட்சத்து 74 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்தது. இந்த தூரத்தில் பூமியின் கூம்பு வடிவ கருநிழல் பகுதி (Umbral shadow) 9,000 கி.மீ. அகலத்திற்கு இருக்கும். இது சந்திரனின் விட்டத்தைப் போல 2.6 மடங்கு. சந்திரன் கிழக்கு திசையில் தன் விட்டத்தின் அளவு நகர்வதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ஆகவே, 2.6 மடங்கு நகர்வதற்கு அதிகபட்சம் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகலாம்.
நிலவு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வதைப் போல தோன்றினாலும் நிலவும் கிழக்கு திசையில்தான் நகரும். கிரகணம் ஏற்படும் நாட்களில் நிலவு இந்த நிழல் பகுதிக்குள் நுழைந்து வெளியேறும். மற்ற தருணங்களில் மேலேயோ, கீழேயோ சென்றுவிடும். கிரகண தருணத்தில் சந்திரனின் கிழக்குப் பகுதி அந்த நிழலுக்குள் முதலில் நுழையும். பிறகு முழு நிலவும் அந்த நிழலுக்குள் முழுமையாக நுழைந்து, பிறகு வெளியேறும். பூமியின் நிழலின் மையத்தில் சந்திரன் கடந்தால் அந்த கிரகணம் கூடுதல் நேரமும் விளம்புப் பகுதியில் கடந்தால் குறைவான நேரமும் நீடிக்கும்.
அதேபோல, கெப்ளர் விதிப்படி சந்திரன் அருகில் இருந்தால் வேகமாக நகரும். தொலைவில் இருந்தால் மெதுவாக நகரும். ஆகவே, சந்திரன் பூமியிலிருந்து தொலைவில் இருக்கும்போது நிகழ்ந்தால், சந்திர கிரகணம் நீண்ட நேரம் நிகழும். தற்போது சந்திரன் பூமிக்கு சற்று அருகில்தான் இருக்கிறது. அதாவது செப்டம்பர் 10ஆம் தேதியன்று 3,58,000 கி.மீ. தூரத்தில்தான் இருக்கும். இவ்வளவு அருகில் இருந்ததால், கிரகணம் 82 நிமிடங்களே நீடித்தது. 2018 ஜூலையில் இதேபோல கிரகணம் ஏற்பட்டபோது 1 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு நீடித்தது.
இதற்கடுத்த சந்திர கிரகணம் 2028 டிசம்பரில் வரும்போது 71 நிமிடங்கள்தான் நீடிக்கும். ஆகவே, சந்திர கிரகணம் நீடிக்கும் நேரம் என்பது, நிலவு பூமியின் நிழலின் ஓரத்தில் செல்கிறதா, மையத்தில் செல்கிறதா, நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் என பல காரணிகளைப் பொறுத்து மாறும்" என்கிறார் சவுந்தரராஜ பெருமாள்.
ஆனால், சூரிய கிரகணம் இவ்வளவு நேரம் நீடிப்பதில்லை. அதேபோல, சூரிய கிரகணம் ஏற்படும்போது, ஒப்பீட்டளவில் உலகின் சில பகுதிகளிலேயே பார்க்க முடியும். சந்திரனின் நிழல் பூமியின் மீது விழுவதே சூரிய கிரகணமாகப் பார்க்கப்படுகிறது என்றாலும், அது ஏற்படும் விதம், நேரம் போன்றவற்றை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன" என்கிறார் சவுந்தரராஜப் பெருமாள்.

"பூமியின் நிழல் 14 லட்சம் கி.மீ. தூரத்திற்கு நீண்டிருக்கும். ஆனால், சந்திரனின் நிழல் அவ்வளவு நீளமானதல்ல. பூமியிலிருந்து சந்திரன் வெகு தூரத்தில் இருக்கும்போது சந்திரனின் நிழல் பூமியை வந்தடைவதே இல்லை. ஆகவேதான் பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைக்கும். ஆனால், சந்திரனின் நிழல் பூமியில் சுமார் 100 முதல் 270 கி.மீ. தூரத்திற்கே முழுமையாக மறைக்கும். சந்திரனும் பூமியும் கிழக்கு நோக்கி சுழலக் கூடியவை. ஆனால், பூமி செல்லும் வேகம் அதிகம் என்பதால், ஒரு போதும் பூமி முழுவதும் சூரிய கிரகணம் ஏற்படாது. சூரிய கிரகணம் என்பது பூமியில் 100 முதல் 270 கி.மீ. விட்டத்திற்குள் (Solar eclipse strip) வரும் பகுதியில் மட்டுமே தெரியும்
பூமி வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதால் சூரிய கிரகணம் ஒரே இடத்தில் தெரிந்துகொண்டிருக்காது. ஒவ்வொரு ஊரிலும் மிகக் குறைவான நேரமே முழு கிரகணம் தெரியும். அதற்குப் பிறகு Solar eclipse stripல் உள்ள மற்ற பகுதிகளுக்கு கிரகணம் நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த பட்டையை ஒட்டி உள்ள பிராந்தியங்களில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். இந்த Solar eclipse stripலிருந்து வெகு தூரத்தில் உள்ளவர்களுக்கு சூரிய கிரகணமே இருக்காது.
சந்திரன் பூமியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. அந்தத் தருணத்தில் கங்கண கிரகணம் (annular eclipse) ஏற்படும். அந்த கங்கண கிரகண நேரத்தில் சூரியன் ஒரு வைர மோதிரத்தைப் போல காட்சியளிக்கும். ஆனால், இதெல்லாம் வெகு குறைவான நேரத்திற்கே நீடிக்கும்" என்கிறார் சவுந்தரராஜப் பெருமாள்.

'சந்திர கிரகணம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்படும்'
சந்திர கிரகணம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்படும். அந்தத் தருணத்தில் பூமியில் யாருக்கெல்லாம் இரவாக இருக்கிறதோ, அவர்களால் அதனை முழுமையாகப் பார்க்க முடியும். மற்றவர்களுக்குத் தெரியாது என்கிறார் அவர்.
இந்தியாவில் இதற்கு முந்தைய சூரிய கிரகணம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்டது. இது கங்கண கிரகணம் என்பதால் தென்னிந்தியப் பகுதிகளில் தீ வட்டத்தை (Ring of Fire) பார்க்க முடிந்தது. நாட்டின் பிற இடங்களில் பகுதி சூரிய கிரகணமே தென்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























