பாலத்தீனத்தை நாடாக அங்கீகரித்த பிரிட்டன்; துணை நிற்கும் நாடுகள்
பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் வரவிருக்கும் நாட்களில் பாலத்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
பாலத்தீனத்தை அங்கீகரிப்பது என்றால் என்ன, அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
நடைமுறையில் பாலத்தீனம் என்ற நாடு இருக்கிறது அல்லது இல்லை என்றும் கூறலாம்.
பாலத்தீனத்திக்கு பெரிய சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் ராஜீய திட்டங்கள், ஒலிம்பிக் உட்பட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளும் உள்ளன.
ஆனால் இஸ்ரேலுடன் நீண்டகாலமாக நிலவும் மோதல் காரணமாக, பாலத்தீனத்துக்கு சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைகளோ, தலைநகரமோ, ராணுவமோ இல்லை.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் அளிப்பதாக உறுதியளித்த நாடுகளில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இருப்பதால், விரைவில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் நான்கு பேரின் ஆதரவை பெற்றதாக பாலத்தீனம் மாற உள்ளது. சீனாவும் ரஷ்யாவும் 1988-லேயே பாலத்தீனத்தை அங்கீகரித்தன. அப்படியெனில், ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் பாலத்தீனத்தை அங்கீகரிக்காத ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே.















