முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம்  லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள் சுய உதவிக்குழு

முருங்கை தேன்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்  
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார்கள் பெண்கள் சுய உதவிக் குழுவினர்.  

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழை செல்லும் வழியில் உள்ளது முதலூர் கிராமம்.

இது வறட்சி மிகுந்த பகுதி என்பதால், இப்பகுதி விவசாயிகள் வறட்சியைத் தாங்கி நிற்கும் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்.

முருங்கைப் பூ, கீரை, காய் உள்ளிட்டவை இந்த சாகுபடியில் இருந்து கிடைக்கும் வழக்கமான விளைபொருள்கள் ஆகும். இது தவிர, இந்த முருங்கைத் தோட்டங்களில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு ‘முருங்கைத் தேன்’  என்ற ஒன்றையும் உற்பத்தி செய்து பெரிய அளவில் லாபம் ஈட்டுவதாக சொல்கிறார்கள் இப்பகுதியில் செயல்படும் பெண்கள் சுய உதவிக் குழு ஒன்றை சேர்ந்தவர்கள்.

முருங்கை பூ தேன் உற்பத்தி செய்வது எப்படி?

தேன்

முதலூர்  பகுதியில் பி.கே.தானியல் ரக முருங்கை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

இந்த வகை  முருங்கை மரத்தின் துண்டுகளை வெட்டி மூன்று வாரங்கள் பதியன் செய்து வைத்து பிறகு அதை எடுத்து மற்ற இடங்களில் நடவு செய்கிறார்கள். இவை மூன்று மாதங்களில் வளர்ந்து பூக்கள் பூக்கும். முருங்கை மரங்களை வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது என்கிறார்கள் விவசாயிகள்.

 

ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி சுலபமாக வளர்த்துவிடுகின்றனர். இந்த தோட்டங்களில் பூக்கும்.

முருங்கைப் பூக்களில்  இருந்துதேனீக்கள் அதிக அளவில் தேன் சேகரிக்கின்றன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஏழு மாதங்கள் முருங்கை பூ தேன் எடுக்கலாம்.  சீசனுக்கு ஏற்ப ராணி தேனீ ஆண் தேனீக்கள் வேலைக்கார தேனீக்கள் என தேனீக்கள் அடங்கிய பெட்டியை முருங்கை மரத்துக்கு அருகே வைத்து தேன் சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு மாதத்தில் இத்தனை லட்சம் லாபமா?

தேன் சேகரிப்பு
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முதலூரில் 1991 ஆம் ஆண்டு வீட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் ஒன்று  முதலூர் பகுதி பெண்களை ஒன்றிணைத்து பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் ஒன்றைத் தொடங்கியது.

அதன் மூலம் 2011 ஆம் ஆண்டு ‘விடியல் மகளிர் தேன் உற்பத்தி கூட்டமைப்பு’ என்ற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டு முதலூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 300க்கும் அதிகமான பெண்கள் கடந்த 13 ஆண்டுகளாக முருங்கை பூ தேன் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஏழு மாதங்கள் முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முருங்கை பூ தேன்  ஆகியவற்றின்  மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 1 லட்சத்தி 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறுகின்றனர்.

முதலூர் பெண்கள் தேக்கு, புங்கன் ஆகிய மரங்களின் பலகைகளால் தேன் பெட்டிகள் செய்கின்றனர். முருங்கை பூ தேன் உற்பத்தி செய்வதற்காக அந்தப் பெட்டிக்குள் ராணி தேனீ, ஆண் தேனீ மற்றும் வேலைக்கார தேனீ ஆகியவற்றை வைத்து அடைத்து தேன் பெட்டிகளை தங்களுக்கு சொந்தமான முருங்கை தோட்டம் அல்லது குத்தகைக்கு எடுத்த தோட்டம் ஆகியவற்றில் ஏக்கருக்கு 25 வீதம் வைக்கின்றனர். விடியல் மகளிர் தேன் உற்பத்தி கூட்டமைப்பின் கீழ் உள்ள சுய உதவி குழு பெண்கள்  300 பேர் மொத்தம் 3 ஆயிரம் தேன் பெட்டிகள் வைத்துள்ளனர்.

தேன் பெட்டி எப்படி இருக்க வேண்டும்?

முருங்கை

தேனீக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு அந்த தேன் பெட்டிக்குள் ஆறு தனித்தனி அடைகளும் தேன் உற்பத்தி செய்வதற்கான சூப்பர் அடைகள் ஐந்தும் இருக்குமாறு வடிவமைத்துக் கொள்கின்றனர்.

வேலைக்கார தேனீக்கள் ஒன்றரை மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழும். ராணி தேனீ மூணு  ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது.

தேன் பெட்டியில் புதிதாக உருவாகும் ராணி தேனீயை பிரித்து எடுத்து மற்ற பெட்டிகளுக்கு மாற்றி விட்டுவிட்டு  பழைய ராணித் தேனீயை கொன்று விடுகின்றனர். பிறகு புதிய இளம் தேனீக்கள் மூலம் அதிக தேன் உற்பத்தி செய்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு ஒரு தேன் பெட்டியில் இருந்து இரண்டு முறை தேன் எடுக்கின்றனர்.  ஒரு முறை ஒரு லிட்டர் வீதம் மாதம் ஒரு பெட்டியில் இருந்து குறைந்தது இரண்டு லிட்டர் தேன் எடுக்கின்றனர்.

முதலூர் பெண்கள் உற்பத்தி செய்யும் முருங்கைப் பூ தேன் ஒரு லிட்டர் ரூ.500 முதல்  ரூ.650 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. முதலூர்  சுய உதவி குழு பெண்களிடம் மொத்தமாக உள்ள 3 ஆயிரம் தேன்  பெட்டிகள் உள்ளன. அதிலிருந்து கிடைக்கும்   தேனில்    இருந்து லட்சக் கணக்கில் பணம் ஈட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு லிட்டர் தேன் விலை என்ன?

தேன்

எந்த விதத்திலும் பதப்படுத்தாமல் முருங்கைப் பூ தேனை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம்.

அதிக கெட்டியாகவும் கூடுதல் சுவையுடனும், நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளதால்  முருங்கை பூ தேனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  சிங்கப்பூர், மலேசியா, துபாய், இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்த தேன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தேனீக்களால் முருங்கைப் பூக்களின் மகரந்த சேர்க்கை அதிகரிப்பதால் முருங்கை காய் மகசூல் அதிகரிப்பதுடன், மற்ற செடிகள் மரங்களிலும் மகரந்த சேர்க்கை அதிகரித்து மகசூல் அதிகரித்துள்ளது என்கிறார்கள் இந்த சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள்.

“முதலூர் பகுதி வறட்சியான பகுதி என்பதால் எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்யலாம் என முடிவு செய்து அதிக மகசூல் கொடுக்கும் பி.கே.தானியல் வகை முருங்கை செடிகள் வாங்கி தோட்டத்தில் இரண்டு அடி ஆழத்திற்கு தோண்டி நட்டு வைத்தேன்.

பின்னர் முருங்கை பூவில் இருந்து கிடைக்கும் தேனை சேகரித்து விற்பனை செய்வதற்காக செடி அருகே பெட்டிகள் வைத்து தேன் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறேன். ஒருபுறம் முருங்கை மரம் நல்ல மகசூல் தருவதுடன்  முருங்கை பூ தேன் மூலமும் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது” என்று கூறுகிறார் சித்ரா.

தேனீ

“எனது தோட்டத்தில் 10 தேன் பெட்டிகள் வைத்துள்ளேன். அதிலிருந்து கிடைக்கும் தேனை நாங்கள் சேகரித்து விற்பனை செய்கிறோம்.

தேன் கூட்டில் இருந்து தேன் எடுக்கும் போது தேனீக்கள் தாக்காமல்  இருக்க முக கவசம், கையுறை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான முறையில் தேன் எடுக்கிறோம். தேன் கூட்டு ராணித் தேனீக்கள் போல முதலூர்ப் பகுதி சுய உதவிக் குழுப் பெண்கள் தேன் மூலம் சாதிக்கிறோம்,”என்றார் விஜயராணி.

குடும்பச் செலவுக்கு உதவும் தேன் வருவாய்

“முதலூரில் முருங்கையில் இருந்து கிடைக்கும் முருங்கைக்காய் மற்றும் கீரையை வைத்து வருமானம் ஈட்டி வந்த சூழ்நிலையில் வீட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் பெண்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு வருமானம் ஈட்டி தரக்கூடிய முருங்கை பூ தேன் உற்பத்தி பயிற்சி வழங்கினர்.

பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இப்பகுதி பெண்கள் முருங்கை பூ தேன் உற்பத்தியில் நல்ல வருமானம் கிடைப்பதால் வீட்டின் செலவுக்காக கணவரை எதிர்பார்த்து இருப்பதில்லை.  முருங்கை பூ தேன் உற்பத்தியில் பெண்களுக்கு எந்த அளவு வருமானம் கிடைக்கிறதோ அதே அளவு இப்பகுதி விவசாயிகளுக்கு நல்ல மகசூலும் வருவாயும் கிடைக்கிறது,” என்கிறார் வேதா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: