'விண்வெளியில் தனது உடலையே ஆய்வுக்கு உட்படுத்தும்' இந்திய வம்சாவளி நாசா வீரர் - யார் இந்த அனில் மேனன்?

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி, ஆகியோரைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் நாசா விண்வெளி வீரருமான அனில் மேனன் இன்று (ஜூலை 14) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவுள்ளார். அவர் 8 மாதங்கள் விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

யார் இந்த அனில் மேனன்? அவர் விண்வெளியில் மேற்கொள்ளவுள்ள பணிகள் என்ன?

ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 (Soyuz MS-29) விண்கலம் இந்திய நேரப்படி இன்று இரவு 8:17 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். இதில் நாசாவின் அனில் மேனனோடு இணைந்து, ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸின் பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினாவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்கின்றனர்.

இந்திய மற்றும் யுக்ரேனிய பெற்றோருக்கு அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் 1976, அக்டோபர் 15ஆம் தேதி பிறந்தவர் அனில் மேனன்.

"அனில் மேனனின் தந்தை சங்கரன் மேனன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். அவர் தனது படிப்பிற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தார்" என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன்.

இந்தியாவில் களப்பணிகளில் ஈடுபட்டவர்

நாசாவின் கூற்றுப்படி, அனில் மேனன், விண்வெளி மருத்துவம் மற்றும் அவசரகால மருத்துவத்தில் அனுபவம் கொண்ட ஒரு மருத்துவர் ஆவார். அமெரிக்க விமானப்படையின் மருத்துவ நிபுணராக பணியாற்றியுள்ளார். 2010 ஹைட்டி நிலநடுக்கம், 2015 நேபாள நிலநடுக்கம் மற்றும் 2011 ரெனோ விமானக் கண்காட்சி விபத்து உள்ளிட்ட பேரழிவுச் சூழல்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.

அனில் மேனன் தனது மருத்துவக் கல்வியின் தொடக்கக் காலத்தில், ரோட்டரி தூதரக அறிஞராக இந்தியாவுக்கு வந்து ஓராண்டு காலம் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில், இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் போலியோ நோயை ஒழிப்பதற்கான முகாம்களில் நேரடியாகப் பங்கேற்று, களப்பணியாற்றினார் என நாசா குறிப்பிட்டுள்ளது.

தனது மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு, 'ஆபரேஷன் எண்ட்யூரிங் ஃப்ரீடம்' பணிகளுக்காக அவர் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார். பின்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கான 'இமயமலை மீட்புச் சங்கத்திலும்' அவர் பணியாற்றியுள்ளார்.

அனில் மேனன் 2021ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி வகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜனவரி 2022-இல் பணியில் இணைந்து, 2024 மார்ச்சில் பயிற்சியை முடித்தார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதல் விமான மருத்துவ நிபுணராகவும் அனில் மேனன் பணியாற்றியுள்ளார்.

பொதுவாக, விண்வெளிப் பயணத்திற்குத் வீரர்கள் தயாராகும் போது, ​அவர்களின் உடல்நலப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பயிற்சியை மேற்பார்வையிடுபவர்கள்தான் விமான மருத்துவ நிபுணர்கள் என நாசா கூறுகிறது.

விண்வெளிப் பயணத்திற்கு முன்னரோ, பயணத்தின் போதோ, அல்லது பயணத்திற்குப் பின்னரோ வீரர்களுக்கு ஏற்படும் மருத்துவப் பிரச்னைகளையும் இத்தகைய நிபுணர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்.

அனில் மேனனின் மனைவி அன்னா மேனனும் நாசாவில் பணிபுரிந்துவருகிறார்.

முதல் விண்வெளிப் பயணம்

அனில் மேனன் முதல்முறையாக ஜூலை 14ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து, அவர் விமானப் பொறியாளராகவும், எக்ஸ்பெடிஷன் 75 குழு உறுப்பினராகவும் செயல்படுவார்.

விண்வெளி நிலையத்திற்கு இரண்டு சுற்றுப்பாதைகள் கொண்ட மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, சோயுஸ் விண்கலம் டாக்கிங் முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில், இந்த மூவரும் நாசா விண்வெளி வீரர்களான ஜெசிகா மெய்ர், ஜாக் ஹாதவே மற்றும் கிறிஸ் வில்லியம்ஸ், ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீரர் சோஃபி அடெனாட், மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்யா) விண்வெளி வீரர்களான செர்ஜி குட்-ஸ்வெர்ச்கோவ், செர்ஜி மிகாயேவ் மற்றும் ஆண்ட்ரே ஃபெட்யாயேவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவார்கள்.

அனில் மேனன், துப்ரோவ் மற்றும் கிகினா ஆகியோர், விண்வெளியில் சுமார் எட்டு மாதங்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, ஏப்ரல் 2027-ல் பூமிக்குத் திரும்புவார்கள். துப்ரோவ் மற்றும் கிகினா இருவருக்கும் இது இரண்டாவது விண்வெளி பயணமாகும்.

"நான் இணையத்தில் அவ்வப்போது கேரளாவின் கடற்கரைகள் மற்றும் அதன் பசுமையான மலைகளைத் தேடிப் பார்ப்பேன். விண்வெளி நிலையத்திலிருந்து இந்தியாவைப் பார்ப்பதுதான் நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்றாகும்" என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அனில் மேனன் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல தனது மனைவியும் நாசாவில் பணிபுரிவதால், இருவரும் விண்வெளிக்கு செல்லும் தருணத்தை தான் எதிர்பார்ப்பதாகவும் கடந்த மார்ச் 2ஆம் தேதி ஒரு பாட்காஸ்டில் அவர் குறிப்பிட்டார்.

"நான் என்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் ஒரு பொருள், நாங்கள் வளர்த்த ஒரு கருப்பு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் சிறிய உருவ பொம்மை. துரதிர்ஷ்டவசமாக அது இப்போது உயிருடன் இல்லை. ஆனால் என் குழந்தைகள், என் மனைவி மற்றும் எனது வாழ்வில் அது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. எனவே, அதனை நினைவுகூரும் வகையில் அந்தப் பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லவிருக்கிறேன்" என்றும் அனில் மேனன் அந்த பாட்காஸ்டில் பேசியிருந்தார்.

சோயுஸ் எம்எஸ்-29

"சோயுஸ் எம்எஸ்-29 என்பது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஒரு விண்வெளிப் பயணத் திட்டமாகும். ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் மூலம் இயக்கப்படும் இந்த விண்கலம், சுழற்சி முறையில் நீண்டகாலப் பணிக்காக மூன்று சர்வதேச விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரு வாகனமாகச் செயல்படுகிறது" என்கிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன்.

இந்த விண்கலம் கஜகஸ்தான் நாட்டின் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள பைகோனூர் விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்படும்.

"ஸ்புட்னிக் 1 - உலகின் முதல் செயற்கைக்கோள் இங்கிருந்துதான் ஏவப்பட்டது. விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினமான லைகா என்ற நாய் ஸ்புட்னிக் 2 மூலம் இங்கிருந்து அனுப்பப்பட்டது. யூரி காகரின், விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர், பைகோனூரின் புகழ்பெற்ற ஏவுதளம் 1-இல் (தற்போது 'காகரின்ஸ் ஸ்டார்ட்' என்று அழைக்கப்படுகிறது) இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி வாலண்டினா தெரேஷ்கோவாவும் இத்தளத்திலிருந்துதான் ஏவப்பட்டார்" என்று குறிப்பிடுகிறார் இளங்கோவன்.

"இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா விண்வெளிக்கு ஏவப்பட்டதும் (ஏப்ரல் 3, 1984) இந்தத் தளத்தில் இருந்து தான். இஸ்ரோவின் தொடக்க காலங்களில் இந்தியாவின் பல செயற்கைக்கோள்களும் இங்கிருந்து ஏவப்பட்டன" என்கிறார் அவர்.

அனில் மேனன் விண்வெளியில் மேற்கொள்ளவுள்ள பணிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் 8 மாத காலத்தில் அனில் மேனன், மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவும், பூமியில் உள்ள மனித குலத்திற்குப் பயனளிக்கும் வகையிலுமான அறிவியல் ஆய்வுகளையும் தொழில்நுட்பச் சோதனைகளையும் மேற்கொள்வார் என நாசா குறிப்பிடுகிறது.

நாசாவின் கூற்றுப்படி,

  • அதிநவீன கணினிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவக் கருவிகள் தயாரிக்கத் தேவையான செமிகண்டக்டர் படிகங்களை விண்வெளியில் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார்.
  • எதிர்கால விண்வெளிப் பயணங்களின் போது பூமியிலிருந்து மருத்துவ உதவிகள் தேவைப்படுவதைத் தவிர்க்கும் வகையில், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளையும் அவர் செய்வார்.
  • எதிர்கால விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்காக, விண்வெளியில் மனிதர்களின் ரத்த ஓட்டம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ளத் தன்னைத்தானே ஒரு பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வார்.
  • அதுமட்டுமின்றி, புதிய மருத்துவச் சிகிச்சைகளை உருவாக்குவதற்காகவும், மனிதர்கள் முதுமையடையும் செயல்முறையைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதற்காகவும், நுண் ஈர்ப்பு விசையில் ரத்தக் குழாய் அமைப்புகளை உருவாக்கும் சோதனைகளையும் அவர் நடத்துவார்.

"அனில் மேனனின் மருத்துவப் பின்னணி காரணமாக, உயிரி-மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். விண்வெளியில் மனித நரம்பு மற்றும் இருதய அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வது அவரது முக்கிய பணியாக இருக்கும்" எனக் கூறுகிறார் இளங்கோவன்.

"விண்வெளியில் மனித உடல் திரவங்கள் தலைக்கு நகரும். இதய ரத்தக் குழாய் செயல்பாடு மாறும். அனில் மேனன் மேற்கொள்ளும் ஆய்வுகள் தமனி விறைப்பு, நரம்பு ஓட்டம், மூளை ரத்த ஓட்டம் மற்றும் உறைதல் காரணிகளை அளவிடும். இது பயிற்சி நெறிமுறைகள், மருந்துகள் அல்லது சாதனங்கள் மூலம் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும். பூமியில் உயர் ரத்த அழுத்தம் போன்ற நிலைகளுக்கும் இது ஆய்வின் தகவல்கள் பயன்படும்" என்று குறிப்பிடுகிறார் இளங்கோவன்.

கடந்த வருடம் ஓர் ஊடக நேர்காணலில், "விண்வெளியில் இருக்கும் அந்த எட்டு மாதங்களில், நாம் நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் செல்வதற்கும், விண்வெளியில் நமது அடுத்தகட்டப் பயணங்களை முன்னெடுப்பதற்கும் மிகவும் முக்கியமான அறிவியல் ஆய்வுகளை நான் மேற்கொள்வேன். பூமியில் உள்ள பல விஷயங்களைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் அந்த ஆய்வுகள் உதவும்" எனக் குறிப்பிட்டிருந்தார் அனில் மேனன்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு