காஸாவில் அமைதி திரும்புகிறதா? - அமெரிக்காவின் புதிய திட்டத்திற்கு ஹமாஸின் பதில் என்ன?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், ஜான் சுட்வொர்த்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு பதிலளித்த ஹமாஸ், "டிரம்பின் திட்டத்தில் உள்ள கைதிகள் பரிமாற்ற விதிகளின்படி, பரிமாற்றத்துக்கு தேவையான நிலைகள் பூர்த்தியாக வேண்டும். அப்படி நடந்தால், உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் உள்ளடக்கிய அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிப்போம்" எனத் தெரிவித்தது.
டிரம்ப் இந்த வாரம் வெள்ளை மாளிகையில் அறிவித்த அந்த திட்டம், மோதலை உடனடியாக நிறுத்தி, ஹமாஸிடம் உயிருடன் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் 72 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும் என்கிறது. இதற்கு பதிலாக, நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர்.
தற்போது பாலத்தீன பிரதேசத்தில் ஹமாஸிடம் 48 இஸ்ரேலியர்கள் இன்னும் கைதிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்தில் ஹமாஸ் ஏற்றுக்கொண்ட மற்றொரு முக்கிய அம்சம், காஸா பகுதியின் நிர்வாகத்தை சார்பில்லாத, திறன் கொண்ட பாலத்தீன வல்லுநர்களிடம் ஒப்படைப்பதாகும்.
அமெரிக்கா முன்வைத்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.
குறிப்பாக, ஹமாஸ் தனது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற நிபந்தனை குறித்துத் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
இஸ்ரேல் அரசு, ஹமாஸின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து, அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது. இது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை உண்மையான நல்லெண்ணத்துடன் ஏற்கும் முயற்சியா, அல்லது நேரம் கடத்தி, நீண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் அரசியல் உத்தியா என்பதை அது தெரிந்துகொள்ள வேண்டும்.

ஞாயிறு மாலைக்குள் இந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் 'பெரும் அழிவு' உண்டாகும் என்று டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களில் ஹமாஸின் அறிக்கை வந்ததால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமைச்சரவையில் சிலர் இதை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.
காஸா மீது நடைபெறும் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
"ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தபோது, அவர்கள் நீடித்த அமைதிக்குத் தயாராக உள்ளனர் என்று நம்புகிறேன்," என ஹமாஸ் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே டிரம்ப் கூறினார்.
மேலும், "பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்றுவதற்காக, இஸ்ரேல் உடனடியாக காஸா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும். தற்போது அதைச் செய்வது மிகவும் ஆபத்தானது" என்றும் அவர் சொன்னார்.
காஸாவின் எதிர்காலம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் பங்கு வகிக்கலாம் என அவரது அறிக்கையின் கடைசி பகுதி கூறுவது, இஸ்ரேலியர்களுக்கு பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஹமாஸின் அறிக்கை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
வெள்ளிக்கிழமை வெளியான வீடியோ செய்தியில், டிரம்ப் இதை ஒரு "முக்கிய நாள்" என்று கூறி, இந்த திட்டத்தை உருவாக்க உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இருப்பினும், பிராந்தியத்தில் அமைதி உருவாக, இன்னும் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு நிறைவுற்ற ஒப்பந்தம் இல்லை என்பதையும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அதேபோல் "இது எங்கு சென்று எப்படி முடியும் என்பதைப் பார்ப்போம். இறுதி முடிவை தெளிவாகவும் உறுதியாகவும் எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



















