மூன்று பேரின் உயிரை பலி கொண்ட 'மதிய விருந்து மர்மம்' வெளிப்பட்டது எப்படி?

    • எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு, எரின் பேட்டர்சன் 2023-இல் மதிய உணவின் போது நச்சு கலந்த காளான்களைக் கொண்டு தனது உறவினர்களைக் கொன்றதாக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, எரின் வழங்கிய மதிய விருந்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான மர்மம் உலகையே உலுக்கியது.

2023 ஜூலை 29 அன்று, ஆஸ்திரேலியாவில் உள்ள எரினின் வீட்டில் ஐந்து பேர் மதிய உணவு சாப்பிட அமர்ந்தனர்.

ஒரு வாரத்திற்குள் மூவர் இறந்துவிட்டார்கள். நான்காவது ஒருவர் உயிர் பிழைக்க போராடிக் கொண்டிருந்தார். ஐந்தாவது நபர், தனது விருந்தினர்களுக்கு வேண்டுமென்றே காளான்களைப் பயன்படுத்தி விஷம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எரின் பேட்டர்சனின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன் (70), மாமியார் கெயில் பேட்டர்சன் (70) மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் (66) ஆகியோர் தான் உயிரிழந்த அந்த மூன்று பேர்.

சிறிய நகரமான மோர்வெல்லில் நடைபெற்ற , அதிக கவனத்தை ஈர்த்த விசாரணைக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எரின் மூன்று உறவினர்களைக் கொன்றதும் மற்றொருவரைக் கொல்ல முயன்றதும் நிரூபிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவையும் உலகின் பெரும்பகுதியையும் உலுக்கிய இந்த கொடிய காளான் வழக்கின் சுருக்கத்தை தெரிந்துகொள்ளலாம்.

ஆரஞ்சு தட்டு

தன்னை காளான் பிரியராகவும், காட்டுக்குள் பொழுதுபோக்குக்காக உணவுப் பொருட்களைத் தேடிச்செல்லும் ஒரு நபர் எனவும் விவரித்த எரின், இது ஒரு சோகமான விபத்து மட்டுமே என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், ஒன்பது வாரங்கள் நடந்த விசாரணையின் போது, அருகிலுள்ள நகரங்களில் காணப்பட்ட விஷக் காளான்களை (death cap mushrooms) அவர் தேடிச் சென்றதும், தனது உறவினர்களை அந்த கொடிய உணவிற்கு அழைத்தது தொடர்பான ஆதாரங்களும் நடுவர் குழுவிற்கு (ஜூரி) முன்வைக்கப்பட்டன. காவல்துறையிடம் பொய் சொல்வதன் மூலமும், ஆதாரங்களை அழிப்பதன் மூலமும் அவர் தனது குற்றங்களை மறைக்க முயன்றதாக தெரியவந்தது.

அந்த துரதிர்ஷ்டமான சனிக்கிழமை மதியம் கையில் ஒரு ஆரஞ்சு கேக்குடன் கெய்லும் டான் பேட்டர்சனும் எரினின் வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் ஹீதர், கெயிலின் சகோதரி மற்றும் அவரது கணவர் இயனும் இருந்தனர். உணவு விருந்துக்குப் பிறகு சில வாரங்கள் கோமாவில் இருந்த இயன், பின்னர் விழித்தபோது, உயிர் பிழைத்த ஒரே விருந்தாளி தான் மட்டுந்தான் என்பதை அறிந்தார்.

குறிப்பிடத்தக்க விதமாக, எரினைப் பிரிந்த கணவர் சைமன் பேட்டர்சன் அங்கு இல்லை. முன்னாள் தம்பதியான அவர்கள் இருவருக்கும் இடையேயான பதற்றத்தால், விருந்தில் கலந்துகொள்வது "சங்கடமாக" இருக்கும் எனக் கூறி, அவர் விருந்தில் இருந்து விலகி இருந்தார்.

அன்று காலை முழுவதும் எரின், நாட்டின் பிரபலமான ஒரு சமையல் நிபுணரின் செய்முறையைப் பின்பற்றி, அதில் சில மாற்றங்கள் செய்து, தனித்தனியாக பரிமாறக்கூடிய பீஃப் வெலிங்டன் தயாரிக்க உழைத்தார். விலையுயர்ந்த மாட்டிறைச்சித் துண்டுகளுக்கு காளான் பேஸ்ட் பூசி செய்வதே அந்தச் சிறப்பான உணவு.

பிறகு அந்த உணவு, நான்கு சாம்பல் நிறத் தட்டுகளில் வைக்கப்பட்டது, எரினுக்காக ஒரு ஆரஞ்சு நிறத் தட்டு வைக்கப்பட்டது. அவற்றுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை பீன்ஸ், கிரேவி ஆகியவை பக்கத்தில் குவிக்கப்பட்டிருந்தன என விசாரணையின் போது இயன் விவரித்தார்.

ஆறாவது உணவுத் தட்டு, சைமன் மனதை மாற்றி வந்து சேர்ந்தால், அவருக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது, அது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது. (எரின் முதலில் சைமனையும் பல சந்தர்ப்பங்களில் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அந்த குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு முன்பே கைவிடப்பட்டன. அவை விசாரணையின் போது முன்வைக்கப்படவும் இல்லை.)

அதன்பின், அனைவரும் பிரார்த்தனை செய்து உணவை உண்ணத் தொடங்கினர், அவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பது பற்றி "கேலியாக" பேசிக்கொண்டனர்.

வயிறு நிரம்பிய பிறகு, அவர்கள் சிறிது இனிப்பு சாப்பிட்டனர். பின்னர், எரின் தனக்கு புற்றுநோய் இருப்பதாக அறிவித்ததால், விருந்தினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

அது உண்மையல்ல என்பதை எரினின் தரப்பும் ஒப்புக்கொண்டது. ஆனால் அந்த நாளில், அங்கு வந்திருந்த இரண்டு மூத்த தம்பதிகளும் குழந்தைகளிடம் அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று எரினுக்கு அறிவுரை வழங்கினர். மதிய உணவு ஆரம்பித்தது போலவே, ஒரு பிரார்த்தனையுடன் நிறைவுற்றது.

தனக்கு எரினை நன்கு தெரியாது, ஆனால் "எல்லாம் நன்றாக இருந்தது"என்று இயன் நீதிமன்றத்தில் கூறினார்.

"அவர் எனக்கு ஒரு சாதாரண மனிதராகத் தோன்றினார்," என்றும் அவர் கூறினார்.

அந்த இரவில், விருந்தினர்கள் அனைவரும் மிகவும் நோய்வாய்ப்பட்டனர், அடுத்த நாள் நான்கு பேர் கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றனர். மதிய உணவின் ஒரு பகுதியையும், மனைவியின் பாதிப் பகுதியையும் சாப்பிட்ட டான், சில மணிநேர இடைவெளியில் 30 முறை வாந்தி எடுத்ததாக மருத்துவரிடம் கூறினார்.

அந்த மதிய உணவுக்குப் பிறகு சில நாட்களில் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இயன் மட்டும் உயிர் பிழைத்தார்.

இதுகுறித்த சந்தேகம் விரைவில் எழத் தொடங்கியது.

எரினை விட்டுப் பிரிந்த கணவர் சைமன், தனது மனைவி இவ்வாறான விருந்து நிகழ்ச்சிகளை நடத்துவது அரிது என்று குறிப்பிட்டார்.

தானும், மறைந்துவிட்ட தனது மனைவியும் இதற்கு முன் ஒருபோதும் எரின் வீட்டுக்கு சென்றதில்லை என்று இயனும் தெரிவித்தார்.

பின்னர் நினைத்துப் பார்க்கும்போது, எரின் ஏன் குடும்பத்தாருக்கு உணவை வேறு வகை தட்டில் பரிமாறினார் என்று விருந்தினர்களில் ஒருவர் ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், லியோங்கதாவில் உள்ள மருத்துவமனையில், எரினின் நோய்வாய்ப்பட்ட விருந்தினர்கள் எரினுக்கும் உடல்நலம் சரியில்லையா? என்று கேட்டனர். ஏனென்றால், அவர்கள் அனைவரும் ஒரே உணவைத் தான் உண்டனர் அல்லவா?

ஒரு ஆரஞ்சு கேக்

சாட்சி மேடையில் இருந்து, மதிய உணவைப் பற்றி முதல் முறையாக அனைவர் முன்னிலையிலும் விவரித்த எரின், ஒரு விளக்கத்தை அளித்தார்.

உறவினர்களை வழியனுப்பிய பிறகு, சமையலறையை சுத்தம் செய்ததாகவும், பின்னர் கெயில் கொண்டு வந்த ஆரஞ்சு கேக்கின் ஒரு துண்டை தனக்குப் பரிசாக எடுத்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

"ஒரு துண்டைச் சாப்பிட்ட பிறகு இன்னொரு துண்டு, அதற்குப் பிறகு இன்னொன்றும் சாப்பிட்டேன், எனக்குத் தெரியாமலே, கேக் முழுவதும் தீர்ந்து விட்டது. வயிறு நிறைந்து விட்டது" என்ற எரின்,

"அதனால், கழிப்பறைக்கு சென்று வாந்தி எடுத்தேன். அப்படிச் செய்தபின் நன்றாக உணர்ந்தேன்," என்று விசாரணையில் கூறினார்.

புலிமியா (bulimia) என்ற உடல்நலக் கோளாறுடன் தான் ரகசியமாக போராடியதை விசாரணையின் போது எரின் வெளிப்படுத்தினார். அதுவே அவருக்கு அறிகுறிகள் தெரியாததற்குக் காரணம் என அவரது தரப்பினர் வாதிட்டனர்.

மதிய உணவிற்கு இரண்டு நாட்கள் கழித்து உடல்நிலை சரியில்லையெனக் கூறி எரின் தானாகவே மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அவரையும், எஞ்சிய உணவை சாப்பிட்டதாக கூறிய அவரது குழந்தைகளுடன் சேர்ந்து உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் வேண்டுகோளை அவர் ஆரம்பத்தில் மறுத்துவிட்டார்.

ஆனால், மருத்துவர்கள் இறுதியாக எரினை சோதனைக்கு அழைத்தபோது, அவரிடமோ அவரது குழந்தைகளிடமோ விஷக்காளான் விஷத்தின் எந்த தடயமும் இல்லை என்பது தெரியவந்தது.

24 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு, எரின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

சந்தேகத்திற்கான காரணிகள்

ஆனால் எரினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் இடைவிடாத வயிற்றுப்போக்கும் வாந்தியும் உறுப்பு செயலிழக்கும் நிலைக்கு தள்ளியபோது, எரின் தனது தடயங்களை மறைத்துக்கொண்டிருந்தார் என்று வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மறுநாள், கண்காணிப்பு கேமரா காட்சிகளில், எரின் உள்ளூர் குப்பை கிடங்கில் சென்று, உணவைப் பதப்படுத்தும் ஒரு சாதனத்தை அப்புறப்படுத்தியிருப்பது பதிவாகியது. பின்னர் அதில் விஷ காளான்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் எரின் மூன்று தொலைபேசிகளைப் பயன்படுத்தியிருந்தார். அதில் இரண்டு சில நாட்களில் காணாமல் போனது. காவல்துறைக்கு அவர் ஒப்படைத்த ஒரே தொலைபேசி பலமுறை அழிக்கப்பட்டு இருந்தது. துப்பறியும் அதிகாரிகள் அவரது வீட்டைத் தேடிக்கொண்டிருந்த போதும் கூட அது நடந்தது.

இதனால் புலனாய்வாளர்களின் சந்தேகங்கள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின.

காளான்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு எரின் குழப்பமான பதில்களை அளித்தார். மெல்போர்னில் உள்ள ஒரு ஆசிய மளிகைக் கடையில் உலர்ந்த காளான்களை வாங்கியதாகச் சொன்னார், ஆனால் எந்தப் புறநகரில் என்பது நினைவில்லை என்றார். பிராண்ட் பெயர் அல்லது பரிவர்த்தனை பதிவுகளை கேட்டபோது, அவை சாதாரண பேக்கேஜில் இருந்ததாகவும், பணமாகச் செலுத்தியிருக்கலாம் என்றும் கூறினார்.

இதற்கிடையில், உணவு விருந்துக்கு சில வாரங்களுக்கு முன் அருகிலுள்ள இரண்டு நகரங்களில் விஷக் காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டதை துப்பறியும் அதிகாரிகள் அறிந்தனர். அங்கு வசித்தவர்கள், அவற்றின் படங்களையும் இடங்களையும் ஆன்லைன் தாவர தரவுத்தளமான iNaturalist இல் பதிவேற்றியிருந்தனர். எரினின் இணைய வரலாறு, அவர் அந்த இணையதளத்தில் விஷக் காளான் பற்றிய பதிவுகளை குறைந்தது ஒருமுறையாவது பார்த்திருப்பதை வெளிப்படுத்தியது.

அவரது மொபைல் போன் இருப்பிடத் தரவு, அவர் அந்த இரண்டு பகுதிகளுக்கும் சென்றதை காட்டியது. அதோடு, அந்தப் பயணங்களில் ஒன்றிலிருந்து வீடு திரும்பும் வழியில் அவர் உணவைப் பதப்படுத்தும் சாதனத்தை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

ஆனால், தனது சமையலறை டிராயரில் அந்தச் சாதனத்தின் கையேடு இருந்தபோதும், பேஸ்புக் குழுவில் அதைப் பயன்படுத்தியதாகப் பெருமையாக கூறி இருந்தபோதும், தன்னிடம் அத்தகைய சாதனம் ஒருபோதும் இல்லை என்று எரின் காவல்துறையிடம் தெரிவித்தார்.

அவரது மின்னணு சாதனங்களில் சில தரவுகளை மீட்டெடுத்த டிஜிட்டல் தடயவியல் நிபுணர்கள், சமையலறை தராசில் விஷக் காளான்கள் எடை போட வைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றும் புகைப்படங்களை கண்டுபிடித்தனர்.

தெளிவான நோக்கம் இல்லை

ஆனால், இச்செயலின் நோக்கம் குறித்த கேள்வி தான் காவல்துறையை மிக அதிகமாகக் குழப்பியது.

2015-இல் பிரிந்த பிறகு, தனக்கும் எரினுக்கும் இடையிலான உறவு நல்ல விதமாக இருந்ததாகவே சைமன் நீதிமன்றத்தில் சொன்னார். ஆனால் 2022-இல், பணம் தொடர்பான விஷயங்கள், குழந்தைப் பராமரிப்பு, பள்ளிகள், சொத்துகள் போன்றவற்றில் கருத்து வேறுபாடுகள் வந்த போது அது மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுபோல, தனது குடும்பத்தின் மீது எரினுக்கு எவ்வித விரோத உணர்வு இருந்ததாகவும் தோன்றவில்லை என்று சைமன் வலியுறுத்தினார்.

"அவர், குறிப்பாக அப்பாவுடன் நெருக்கமாக இருந்தார். இருவருக்கும் கற்றல் மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது," என்றார்.

ஆனால், தான் பேட்டர்சன் குடும்பத்திலிருந்து படிப்படியாக தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக நீதிமன்றத்தில் எரின் கூறினார்.

அதோடு, சைமனின் பெற்றோரைப் பற்றி, "இனி அவர்கள் மீது நம்பிக்கையில்லை" என்று கடுமையாக பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

அரசுத் தரப்பு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை முன்வைக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. ஆனால், விசாரணை முடிந்த பிறகும், எரினை கொலை செய்யத் தூண்டியது என்ன என்பதைப் பற்றி நடுவர் குழு (ஜூரி) இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

ஒரு தெளிவான நோக்கம் இல்லாதது, இந்த வழக்கில் எரினின் தற்காப்புக்கு முக்கியமான ஆயுதமாக இருந்தது.

மாமனார்-மாமியாரைப் பற்றிய விமர்சனச் செய்திகள் பாதிப்பில்லாத, வெறும் கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே என்று அவரது தரப்பு வாதிட்டது. எரின், புற்றுநோய் குறித்து கூறியது, உண்மையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சையை மறைப்பதற்காக மட்டுமே என்றும், அதை வெளிப்படையாகச் சொல்ல அவர் சங்கடப்பட்டதாகவும் அவரது தரப்பு தெரிவித்தது.

செல்போன் கண்காணிப்பு தரவு முழுமையாக துல்லியமானதல்ல. எனவே விஷக் காளான்கள் காணப்பட்ட நகரங்களுக்கு எரின் சென்றார் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

எரின் அந்த உணவு விருந்துக்குப் பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் மற்றவர்களைப் போல மோசமாக இல்லை, ஏனெனில் அவர் சாப்பிட்டதை வாந்தி எடுத்து விட்டார் என்று அவரது தரப்பு கூறியது. மருத்துவமனைகளை அவர் விரும்பாததால், மருத்துவர்களின் ஆலோசனைக்கு மாறாக அவர் தன்னை டிஸ்சார்ஜ் செய்து கொண்டதாகவும் விளக்கப்பட்டது.

ஆனால், எரின் பல பொய்களைச் சொன்னதாகவும், அவற்றைப் பின்தொடர்வதே கடினமாக இருந்தது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.

"இது ஒரு பயங்கரமான காளான் சேகரிப்பு விபத்து மட்டுமே" என்ற வாதத்தை நிராகரிப்பதில் "எந்த சிரமமும் இருக்காது" என்று வழக்கறிஞர் நானெட் ரோஜர்ஸ் குறிப்பிட்டார்.

இறுதியில், அரசுத் தரப்பின் வாதத்தையே நடுவர் குழு (ஜூரி) ஏற்றுக்கொண்டது.

பேட்டர்சன் மற்றும் வில்கின்சன் குடும்பங்கள் தங்களுக்கான தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு