புத்தாண்டு தினத்தில் காலி சூட்கேஸுடன் நடக்கும் மக்கள் - இது என்ன பழக்கம்?

பட மூலாதாரம், Getty Images
அடுத்த 24 மணி நேரத்துக்குப் பிறகு புத்தாண்டு வரப்போகிறது. உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதை போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்கள் இந்த புத்தாண்டு தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பட்டாசுகள் வெடிப்பது
இது பொதுவாக எல்லா நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றுதான். இந்தியாவிலும் நள்ளிரவில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வது வழக்கம்.
சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இம்மாதிரியான வாண வேடிக்கைகளை நிகழ்த்தி அதை மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்க்கும் பழக்கம் உண்டு.
நியூசிலாந்தின் ஆக்லாந்து ஸ்கை டவரில், ஆச்சரியம் மிக்க பல வண்ணமயமான வெடிகளை வெடிப்பது வழக்கம்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகத்தில் இம்மாதிரியாக பட்டாசுகளை வெடிப்பர்.
கனடாவில் நாதன் ஃபிலிப்ஸ் ஸ்கொயர் என்ற இடத்திலும் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவிலும் இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற கோபாகாபனா கடற்கரையில் வெடியால் வானம் பகல் போல மின்னும்.

பட மூலாதாரம், Getty Images
உடைந்த தட்டை பார்க்க வேண்டும்
டென்மார்க்கில் ஒரு விநோதமான பழக்கம் உண்டு. அதாவது புத்தாண்டன்று வீட்டின் கதவை திறந்தவுடன் நீங்கள் ஒரு உடைந்த தட்டை பார்க்க வேண்டும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
உடைந்த தட்டிற்கு எங்கு போவது என நீங்கள் கேட்கலாம்.
அதாவது டென்மார்க்கில் தனது நண்பர்களின் வீட்டு வாசலுக்கு சென்று அங்கு தட்டுகளை உடைத்து விட்டு வந்துவிடுவது வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம்.
பருப்பு உண்ணும் பழக்கம்
பிரேசிலில் நம்மூரில் மைசூர் பருப்பு போன்ற ஒரு வகை பருப்பை புத்தாண்டன்று உண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இது வருடம் முழுவதும் அவர்களுக்கு நன்மையை வழங்கும் எனவும், வரக்கூடிய ஆண்டு பணரீதியாக சிறப்பான ஆண்டாக அமையும் எனவும் பிரேசில் மக்கள் நம்புகின்றனர்.
பொருட்களை கீழே தள்ளுவது
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயரில் புத்தாண்டிற்கான கவுண்ட் டவுன் நடக்கும். அங்கு கம்பம் ஒன்றில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய பந்தை மேலிருந்து கீழே தள்ளுவார்கள் இது புத்தாண்டு பிறந்துவிட்டது என்பதை குறிக்கும்.
இதனால் அமெரிக்காவில் உள்ள பிற நகரங்களில் வெவ்வேறு பொருட்களை கீழே போட்டு புத்தாண்டு கொண்டாடும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
இந்தியானா மாகாணத்தின் வின்சென்னெஸில் மக்கள் தர்பூசணி பழத்தை மேலிருந்து கீழே போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திராட்சையை உண்பது
நீங்கள் ஒருவேளை புத்தாண்டன்று ஸ்பெயினில் இருந்தால் அங்கு மக்கள் நள்ளிரவில் திராட்சையை தேடி செல்வதை நீங்கள் பார்க்க நேரலாம்.
புத்தாண்டு நள்ளிரவில் திராட்சை உண்டால் அடுத்த 12 மாதத்திற்கும் அதிர்ஷ்டம் வரும் என ஸ்பெயின் மக்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கரடி வேடத்தில் கொண்டாட்டம்
ருமேனியாவில் புத்தாண்டன்று கரடியை போல வேடமணிவதை ஒரு வழக்கமாக அந்நாட்டு மக்கள் கடைப்பிடிக்கின்றனர். கரடியைப் போல வேடமணிந்து நடனம் ஆடினால் தீய சக்திகள் நீங்கிவிடும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.
ரோமானியாவின் பாரம்பரிய கதைகளின்படி கரடிகள் மக்களை பாதுகாக்க வல்லது.
மணியின் ஒலி
ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மணி அடித்து புத்தாண்டை தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஜப்பானில் சரியாக 108 முறை மணி அடிப்பார்கள்.
நாற்காலியை வீசி எறிந்து...
தென் ஆப்ரிக்காவில் புத்தாண்டை தேவையற்ற பொருட்கள் அல்லாத நிகழ்வாக கொண்டாட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எனவே பழைய பொருட்களை வீசியெறிந்து புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
அதுவும் ஜன்னலின் வெளியே இருந்து பழைய நாற்காலிகளை தூக்கி எறிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
சூட் கேஸ் வாக்
தென் அமெரிக்க நாடுகளில் புத்தாண்டன்று ஒரு விநோதமான பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
அங்கு மக்கள் காலியான சூட்கேஸ்களை கொண்டு நடப்பது வழக்கமாகவுள்ளது. இவ்வாறு செய்தால் அந்த வருடம் முழுக்க சாகசங்கள் நிறைந்த ஒரு வருடமாக இருக்கும் என அந்த மக்கள் நம்புகின்றனர்.
தமிழ்நாட்டில் என்ன கட்டுப்பாடுகள்?
இந்தியாவில் இம்மாதிரியாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பழக்கம் என்று எதுவும் இல்லை. இருப்பினும் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லாத நிலையில், இந்த வருடம் பல்வேறு விதமான கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நியூ இயர் பார்ட்டி, சினிமா என பல்வேறு திட்டங்களை வைத்திருக்கும் இளைஞர்கள், கொரோனா, சொல்லப்பட்ட வேகத்தில் வாகனத்தை செலுத்துவது ஆகியவற்றையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். குடும்பங்கள், பெரும்பாலும் வழிபாட்டு தலங்களுக்கு செல்வது, ஒன்றாக உணவு உண்பது போன்ற திட்டங்களை வைத்திருப்பர்.

பட மூலாதாரம், Getty Images
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில் சில,
- நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
- முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.
- அதிகவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
- கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
- பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் களையிழந்த புத்தாண்டு
இலங்கையில் புதுவருட பிறப்பு நிகழ்வுகள், ஏனைய வருடங்களை போன்றே, இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பின் காலி முகத்திடல் பகுதியில் வழமை போன்று, இம்முறையும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
களியாட்ட நிகழ்வுகள், தொடர் இசை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், அலங்காரங்கள் என காலி முகத்திடல் இம்முறையும் கலைக்காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
காலி முகத்திடல் மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதுவருட பிறப்பை வரவேற்பதற்கான பல்வேறு விதமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த வருடங்களில் புதுவருட பிறப்பு பெரிதாக கொண்டாடப்படாத நிலையில், இம்முறை சற்று பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், புதுவருட பிறப்பை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மக்கள் முன்னெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்























