You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் என்ன நடக்கிறது?
மத்திய அரசை எதிர்த்து போராடி வரும் பஞ்சாப் – ஹரியாணா விவசாயிகள் மீது காவல்துறையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருதல், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி சலோ என்கிற பெயரில் டெல்லியை நோக்கி பிப்ரவரி 13 முதல் விவசாயிகள் பேரணியை தொடங்கினர்.
இவர்கள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதற்காக எல்லைகளில் பலத்த தடுப்புகள் அமைக்கப்ட்டுள்ளன. ஏராளமான காவலர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப்- ஹரியாணா எல்லையில் ஷாம்பு என்ற இடத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. பிடிஐ செய்தி முகமையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 4ம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் பருத்தி, பருப்பு வகைகள், சோளம் ஆகிய 3 விளைபொருட்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இது குறித்து பரிசீலிப்பதற்காக 2 நாட்களுக்கு போராட்டத்தை விவசாய சங்கங்கள் நிறுத்தி வைத்தன. ஆனால், மத்திய அரசு அளித்துள்ள உத்தரவாதம் தங்களுக்கு சாதகமாக இருக்காது எனக்கூறி மீண்டும் புதன்கிழமை காலை முதல் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.
ஏற்கனவே, 4 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார். அமைதியை நிலைநாட்டுவது அவசியம் என்றும் தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் செய்தியாளர்களிடம் கூறினார். எங்கள் முன்னாள் பாதுகாப்புப் படையினரால் போடப்பட்டுள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு டெல்லிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். நாங்கள் எந்த தாக்குதலில் ஈடுபடப்போவதில்லை. அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பிப்ரவரி 20ம் தேதி ஹரியானா மாநிலம் Manesar பகுதியில் இருந்து டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்லவிருந்த விவசாயிகள் ஹரியானா மாநில காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)