கத்தார் சிறையில் இருந்து இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலையானது எப்படி?

காணொளிக் குறிப்பு, கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலை
கத்தார் சிறையில் இருந்து இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலையானது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கத்தாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு இந்தியாவைச் சேர்ந்த  முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது, எட்டு பேரில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் திரும்ப அனுமதிக்க கத்தார் எமிர் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு, கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8  இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.

இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'கடும் குற்றவாளிகளைப்' போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று  இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரி அப்போது கூறினார்.

கத்தாரில் இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து இதுவரை இந்தியாவோ கத்தாரோ வெளிப்படையாக கூறவில்லை. அதேநேரம், இஸ்ரேலுக்காக அவர்கள் உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என ஃபினான்சியல் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் போன்றவை செய்தி வெளியிட்டன. 

கைது செய்யப்பட்ட இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கத்தார் நீதிமன்றம் அறிவித்தது. எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அப்போது கத்தார் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சி தருவதாக இந்தியா கூறியது. இதற்கான சட்ட வாய்ப்புகள் என்னவென்பது குறித்து ஆராயப்படும் என கூறியிருந்தது. பின்பு இந்த தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்தது. 

இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் இந்த 8 இந்தியர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் விடுவிக்க மத்திய மோதி அரசுக்கு பெரிய அழுத்தம் எழுந்தது. காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்த இந்தியர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

கடந்த ஆண்டு டிசம்பரில், துபாயில் நடைபெற்ற சிஓபி28 மாநாட்டின் போது, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹம்த் அல்தானியை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். அப்போது, கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலம் குறித்தும், இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோதி கேட்டறிந்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இருதரப்பு உறவுகள் குறித்து இருவருக்கும் இடையே நல்லமுறையில் விவாதம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்தியா 2028ஆம் ஆண்டு முதல் 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது. ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 6.5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலை

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)