You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் சட்டசபை தேர்தல்: 89 தொகுதிகளில் 57% வாக்குப்பதிவு
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்ட 89 தொகுதிகளில் சுமார் 57 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிய வந்துள்ளது.
கட்ச், சவுராஷ்டிரா மற்றும் குஜராத்தின் தெற்குப் பகுதிகளின் 19 மாவட்டங்கள் இதில் அடங்கும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குபதிவு நடைபெற்றது.
இன்றைய வாக்குப்பதிவில் ஜாம்நகர் வடக்கு, மோர்பி ஆகியவை மிக முக்கியமான தொகுதிகளாக உள்ளன. ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது.
அதேநேரத்தில், அக்டோபர் 30ஆம் தேதியன்று பாலம் இடிந்து விழுந்ததால் நடந்த பயங்கர விபத்து காரணமாக மோர்பி தொகுதியும் விவாதத்தில் உள்ளது. இந்த விபத்தில் சுமார் 130 பேர் உயிரிழந்தனர்.
மூத்த தலைவர்களின் நிலை
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி துராவகா மாவட்டத்திலுள்ள கம்பாலியா தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் கோபால் இடாலியா சூரத்தில் இருக்கும் கதிர்காம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம்நகர்(வடக்கு) தொகுதியில் நிற்கிறார்.
பாவ்நகர்(கிராமப்புறம்) தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த புருஷோத்தம் சோலங்கியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
படிதார் சமூகத் தலைவர் அல்பேஷ் கதிரியா சூரத்தின் வராச்சா சாலையில் வேட்பாளராக உள்ளார்.
ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழங்குடியின மூத்த தலைவரான சோட்டு வாசவா, பரூச்சில் ஜகாடியாவில் நிற்கிறார்.
பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 88 இடங்களில் களத்தில் உள்ளனர். மறுபுறம், ஆம் ஆத்மி வேட்பாளர் சூரத் கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
குஜராத்தில் 1995 முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 5ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலியை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பரேஷ் தனானி, சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.
செய்தி நிறுவனமான ஏஎன்ஐ இந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கவனத்தில் கொள்ளவே இந்த முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக பரேஷ் தனானி கூறுகிறார். குஜராத் முழுவதும் இந்தப் பிரச்
அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கவனத்தில் கொள்ளவே இந்த முறையை தேர்ந்தெடுத்துள்ளதாக பரேஷ் தனானி கூறுகிறார். குஜராத் முழுவதும் இந்தப் பிரச்னையில் வாக்களிக்கும் என்பதில் உறுதியாக உள்ளதாக அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்