அமைச்சரின் இலாகா மாற்றத்திற்கான காரணத்தை ஆளுநருக்கு சொல்ல வேண்டுமா? ஆளுநர் - அரசு மீண்டும் மோதல்

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கேள்விகளை எழுப்பியிருப்பதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது தி.மு.க. அரசு. மீண்டும் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், நெஞ்சு வலி ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் நீண்ட நாட்கள் செயல்பட முடியாது என்பதாலும் அவரது துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவுசெய்தார். அதன்படி மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துச்சாமிக்கும் அளிக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கான கடிதங்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டன.

வியாழக்கிழமை காலையிலிருந்தே அமைச்சர்கள் இலாகா மாற்றம் தொடர்பான அறிவிப்பு, ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ஏதும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பதோடு, முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தை ஆளுநர் ஏற்கவில்லையென்றும் தகவல்கள் வெளியாகத் துவங்கின.

இது தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் ஆளுநர் மாளிகையிலிருந்து சொல்லப்படவில்லை என்றாலும், பல தொலைக்காட்சிகள், செய்தி இணையதளங்கள் இதனைச் செய்தியாக வெளியிட்டன.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவில் முதலமைச்சரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடியும் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்முடி, "ஆளுநர் ஆர்.என். ரவி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "தமிழ்நாடு முதலமைச்சர் ஜப்பான் சென்று திரும்பிய தினத்தன்று, அதாவது மே 31ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு இருப்பதால் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கூறியிருந்தார். மறுநாளே தமிழக முதல்வர் ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பினார்."

"வழக்கு இருக்கும் காரணத்தாலேயே அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படியானால், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கிற அமித் ஷா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு இருக்கிற காரணத்தால் அமித் ஷா நீக்கப்பட்டாரா? அது மட்டுமல்ல, 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அவர்கள் நீக்கப்பட்டனரா?' என்று அந்த பதில் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்."

"ஆளுநர் கடிதத்தை எழுதியபோது, அமலாக்கத் துறை ரெய்டு போன்றவை நடக்கவில்லை. அப்போதே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார் என்றால் இதன் பின்னணி என்ன? ஆளுநர் ஒரு பா.ஜ.க. பிரமுகர் போல் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு."

"இதனிடையே, இன்று மதியம் (வியாழக்கிழமை) செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பதால் அவரிடம் இருந்த பொறுப்புகளை மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்கிறோம் என்று தமிழக முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்."

"முதல்வர் சொல்பவர்களை அமைச்சர்களாக நியமிக்கும் பணியே ஆளுநருடையது. அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்வதை எல்லாம் ஆளுநரிடம் சொல்லி ஒப்புதல் பெற வேண்டும் என்பதில்லை. மாற்றத்தை ஆளுநருக்கு தெரியப்படுத்தினால் போதுமானது. இதைப் பின்பற்றி ஆளுநருக்கு இலாகா மாற்றம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது."

ஸ்டாலின்

பட மூலாதாரம், STALIN

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"அரசியலமைப்பு சட்டம் தெரிந்த ஆளுநர் என்றால் உடனடியாக இதற்கு ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக, இன்று மாலை ஆளுநர் தரப்பில் இருந்து, 'நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் எல்லாம் 'misleading and incorrect' என்று குறிப்பிட்டு முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அப்படி எழுதுவது எந்த அளவுக்கு தவறானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆளுநரின் கடிதத்தை அடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு மீண்டும் காரணங்களை விளக்கி கடிதம் எழுதியுள்ளார்."

"ஆளுநர் இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம். தமிழக ஆளுநர் பா.ஜ.கவின் ஏஜென்ட்டாக செயல்படுவது இந்த கடிதங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

ஆளுநரைப் பொறுத்தவரை, செந்தில் பாலாஜியின் துறைகளை மாற்றிக் கொடுப்பதற்கு, உடல்நலக் குறைவைக் காரணம் காட்டாமல், அவர் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டதையே காரணமாகக் குறிப்பிட வேண்டுமெனக் கருதுகிறார். உடல்நலக் குறைவை காரணம் காட்டுவதையே 'misleading and incorrect' என ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர். என். ரவி

பட மூலாதாரம், RN RAVI

இலாகா மாற்றத்திற்கு சரியான காரணத்தைக் குறிப்பிட வேண்டுமா?

தற்போதைய தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்படுவது, இது முதல் முறையல்ல. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டபோது பல அமைச்சகர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன.

அதேபோல, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் குடும்பத்தினர் குறித்து பேசிய ஆடியோ ஒன்று வெளியான சமயத்தில் அவர் வசம் இருந்த நிதித் துறை மாற்றப்பட்டது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தொழில்துறையும் மாற்றப்பட்டது. குறிப்பாக, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பற்றி எழுந்த ஆடியோ சர்ச்சையே, அவரது பதவி மாற்றத்திற்குக் காரணம் என்பது வெளிப்படையானது என்றாலும்கூட, அந்தக் காரணத்தைக் குறிப்பிட்டு அவர் இலாகா மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனால், தற்போது செந்தில் பாலாஜியின் இலாகாவை மாற்றும்போது, அதற்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணங்கள் 'உண்மைக்கு மாறானவை, தவறானவை' என்று ஆளுநர் குறிப்பிட்டிருப்பதுதான் தற்போது ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 'பிரிவு 164' மாநில அமைச்சர்களின் நியமனம் குறித்துக் குறிப்பிடுகிறது. 164வது பிரிவின் முதல் விதி இதுதான்: முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார். மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் நியமிப்பார். ஆளுநரின் விருப்பமுள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும்

(The chief Minister shall be appointed by the Governor and the other Ministers shall be appointed by the Governor on the advice of the Chief Minister, and the Ministers shall hold office during the pleasure of the Governor.)

ஸ்டாலின்

பட மூலாதாரம், STALIN

இதில் ஆளுநரின் விருப்பம் என்பது முதலமைச்சரின் விருப்பம்தான். ஒருவர் ஒரு முறை அமைச்சரான பிறகு, ஐந்தாண்டுகளும் தான் அமைச்சராகத்தான் இருப்பேன் என சொல்ல முடியாது. முதல்வர் விரும்பும்வரையில்தான் இருக்க முடியும் என்பதை உணர்த்தத்தான் இந்த விதி இருக்கிறது. இங்கு pleasure of Governor என்பதை முதல்வரின் விருப்பம் அல்லது முதல்வரின் அதிகாரம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என பல வழக்குகளில் விளக்கப்பட்டுள்ளது.

Pleasure Doctrine எனக் குறிப்பிடப்படும் இந்த விருப்புரிமை ஆங்கில பொதுச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதன்படி, மன்னர் விரும்பினால், யாரையும் பணியிலிருந்து நீக்க முடியும். ஆனால், நடைமுறையில் அப்படிச் செய்ய முடியாது. வேறு பல சட்டங்களின் மூலம் பணியாளர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்தியாவிலும் மத்திய அரசு ஊழியர்கள் குடியரசுத் தலைவர் விரும்பும்வரையே பணியாற்ற முடியும் என்று குறிப்பிடப்படும். ஆனால், நடைமுறையில் குடியரசுத் தலைவர் தன் விருப்பப்படி யாரையும் பணிநீக்கம் செய்ய முடியாதவகையில், சட்டப் பாதுகாப்புகள் இருக்கும்.

பொன்முடி

பட மூலாதாரம், PONMUDI

Withdrawal of Pleasure-ஐ செயல்படுத்த விரும்பிய ஆளுநர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இதுபோன்ற ஒரு நிகழ்வை செய்துகாட்ட விரும்பினார். மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் பேசிய பேச்சு ஒன்றுக்காக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குறிப்பிட்டார்.

கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது குறித்து ஆளுநருக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையில் மோதல் நடந்து கொண்டிருந்த தருணம் அது. இந்த நிலையில், கேரள பல்கலைக்கழகத்தின் கார்யவட்டம் வளாகத்தில் நடந்த ஒரு விழாவில் இது குறித்துப் பேசிய மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால், "உத்தர பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு கேரளாவின் கல்வி அமைப்பு எப்படிச் செயல்படுகிறது எனத் தெரியாது" என்று கூறினார்.

சில வருடங்களுக்கு முன்னாள் உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு வன்முறையில் மாணவர்கள் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி இதுபோல பேசியிருந்தார் பாலகோபால்.

"யார் சுட்டது தெரியுமா? துணை வேந்தரின் பாதுகாவலர்தான் சுட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு 50 முதல் 100 பாதுகாவலர்கள் உண்டு. அங்கிருக்கும் பல பல்கலைக்கழகங்களில் அப்படித்தான். பல்கலைக்கழகங்கள் இதுபோல செயல்படும் மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வருபவர்களுக்கு இங்குள்ள நிலைமையைப் புரிந்துகொள்வது கடினம். கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜனநாயக அமைப்புகள். கல்வி ரீதியான விவாதங்களை நடத்தி, குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. இந்தியாவிலேயே மிகவும் வளர்ந்த பிராந்தியமான இந்த மாநிலம், கல்வியமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்றார் பாலகோபால்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், TNDIPR

இந்த விவகாரத்தில் பாலகோபாலின் பேச்சு இடம்பெற்ற பத்திரிகை செய்திகளைத் தொகுத்த ஆளுநர், "ஆளுநர் பதவியின் கண்ணியத்தையும் ஆளுநரின் நன்மதிப்பையும் சிதைக்கும் நோக்கம் கொண்ட பேச்சு அது" என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதினார்.

அந்தக் கடிதத்தில், "நிதியமைச்சர் பேசிய பேச்சு, கேரளாவுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான கல்வி அமைப்பைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டார். மேலும், தான் பதவியேற்கும்போது எடுத்துக்கொண்ட வாக்குறுதிக்கு மாறாக பாலகோபால் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார் ஆளுநர்.

ஆகவே, பாலகோபால் அமைச்சர் பதவியில் நீடிப்பது தொடர்பாக தனது "விருப்பத்தைத் திரும்பப்பெறுவதால்" (Withdrawn his pleasure) அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும்படி கோரியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை அப்படியே கைவிட்டார் ஆரிஃப் முகமது கான்.

தமிழ்நாடு அரசு தற்போது, மீண்டும் இலாகா மாற்றம் குறித்து ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்த சர்ச்சையை ஆளுநர் முடிவுக்குக் கொண்டுவரப் போகிறாரா அல்லது இதுவும் ஒரு அரசியல் மோதலாக மாறுமா என்பதை விரைவிலேயே தெரிந்துவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: