'கணிதம் தெரியும், ஜாஸ் இசை பிடிக்கும்' - சுறாக்கள் பற்றிய 9 தகவல்கள்

பட மூலாதாரம், Hannes Klostermann/ Ocean Image Bank
- எழுதியவர், ஜோஸ்லின் டிம்பெர்லி, சோஃபியா குவாக்லியா, கேத்தரீன் லேத்தம் & ஸ்டீஃபன் டௌலிங்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
பலரும் நினைப்பதைவிட, சுறாக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே பல பொதுவான அம்சங்கள் உள்ளன.
இன்று பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதுகெலும்புள்ள வேட்டையாடி உயிரினங்களில் மிகவும் பழமையானவற்றில் சுறாக்களும் அடங்கும்.
அத்தகைய வியத்தகு உயிரினம் நம்மை விழிவிரிய வைக்கும் சுவாரஸ்யமான 9 தகவல்களை இங்கே பார்ப்போம்.
1. அனைத்துமே அழிந்தாலும், பூமியில் சுறாக்கள் பிழைத்திருக்கும்
பூமியில் நிகழ்ந்த ஐந்து முக்கியப் பேரழிவுக் காலங்களையும் சுறாக்களோ அல்லது அவற்றின் நெருங்கிய மூதாதைகளோ கடந்து பிழைத்திருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அவற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று 'பெர்மியன்-ட்ரையாசிக் பேரழிவு'. இது பெரும்பாலும் 'பெரும் பேரழிவு' (Great Extinction) என்று அழைக்கப்படுகிறது.
இது பூமியின் காலநிலையில் ஏற்பட்ட, இயற்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய, மிகவும் அழிவுகரமான பேரழிவு நிகழ்வு. புவி மீது வாழ்ந்த பெரும்பாலான உயிரினங்கள் அழிய வித்திட்ட இந்தப் பேரழிவில், சுமார் 90% கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிட்டன.
இத்தகைய பேரழிவுகரமான நிகழ்விலும்கூட தப்பிப் பிழைத்து, சுறாக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன.
இன்று, பல மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, உலகின் பெருங்கடல்கள் அனைத்திலும் சுறாக்கள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Reinhard Dirscherl/ullstein bild via Getty Images
2. சுறாக்களுக்கு கணிதம் தெரியும்
சுறாக்கள், வெறும் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படும், வேட்டையாடி உண்ணும் தீவிர வேட்கையை மட்டுமே கொண்ட சராசரி உயிரினம் என்று பலர் நினைக்கிறார்கள்.
இருப்பினும், இந்தப் பொதுவான கருத்து முற்றிலுமாக உண்மையில்லை என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுறாக்கள் புத்திசாலித்தனமான உயிரினங்கள் என்றும், அவற்றால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
ஒன்றுபோல இருக்கும், மிகவும் ஒத்த ஒலிகளுக்கு இடையிலான வேறுபாட்டை சுறாக்களால் அறிய முடியுமென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், பல்வேறு நுட்பமான அமைப்புகள் மற்றும் வண்ணமயமான வடிவியல் அம்சங்களை அவற்றால் அடையாளம் காண முடியும்.
நன்கு அறியப்பட்ட ஓர் அறிவியல் பரிசோதனையில், இளம் சாம்பல் நிற மூங்கில் சுறாக்களால் (gray bamboo sharks), வடிவங்கள் மற்றும் ஒளியியல் மாயத் தோற்றங்கள் தொடர்பான தகவல்களை ஏறக்குறைய ஓராண்டுக் காலம் வரை நினைவில் வைத்திருக்க முடிந்தது கண்டறியப்பட்டது.
சுறாக்களால் எளிய கணிதச் செயல்பாடுகளைக்கூட செய்ய முடியும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, மூன்று மற்றும் ஐந்து, அல்லது நான்கு மற்றும் ஏழு என்ற கணக்கில் பொருட்கள் இருந்தால், அவற்றுக்கு இடையிலான எண்ணிக்கை வேறுபாட்டை அவற்றால் அறிய முடியும்.
ஆனால், நான்கு மற்றும் ஐந்து, போன்ற மிக நெருக்கமான எண்களுக்கு இடையிலான வேறுபாட்டை அறிந்துகொள்வது சுறாக்களுக்கு மிகவும் கடினமாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Miguel MEDINA / AFP via Getty Images
3. சுறாக்களுக்கு ஜாஸ் இசை பிடிக்கும்
மற்றோர் அறிவியல் ஆய்வில், ஆஸ்திரேலியாவை சேர்ந்ததும் பொதுவாகக் கடல் தரையில் வாழக் கூடியதுமான போர்ட் ஜாக்சன் சுறாக்களின் கற்றல் திறன் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
அந்த சுறாக்களுக்கு ஓர் எளிய பணி வழங்கப்பட்டது. எப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகை இசை ஒலிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவை தமது தொட்டிக்குள் இருக்கும் குறிப்பிட்ட ஓரிடத்துக்கு நீந்திச் செல்ல வேண்டும். சரியான இடத்தை அடைந்தால், அவற்றுக்கு வெகுமதியாக உணவு அளிக்கப்பட்டது.
சிட்னியில் அமைந்துள்ள மெக்குவாரி பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், ஜாஸ் இசையைத் தங்களுக்கு உணவு கிடைக்கும் இடத்துடன் தொடர்புபடுத்திச் செயல்படுவதற்கு அந்த சுறாக்கள் வெற்றிகரமாகக் கற்றுக் கொண்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அந்த சுறாக்கள், ஜாஸ் இசை ஒலிபரப்பப்பட்ட நேரங்களில், அவை உணவு வழங்கப்படும் பகுதிக்கு நீந்திச் செல்வதை விரும்பின. ஆனால், கிளாசிக்கல் இசை ஒலிபரப்பு செய்யப்பட்டபோது அவற்றால் அத்தகைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆய்வாளர் குலம் பிரவுன், இந்த ஆய்வின் முடிவுகள் குறித்தான செய்தியறிக்கையில் விளக்கியுள்ளார்.
அதில் அவர், "கிளாசிக்கல் இசை ஒலிக்கும்போது தாங்கள் ஏதோவொன்றைச் செய்ய வேண்டும் என்பது அந்த சுறாக்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால், தாங்கள் வேறோர் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை அவற்றால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டார்.
எளிதாகக் கூறவேண்டுமெனில், கிளாசிக்கல் இசை ஒலிப்பது ஒரு பணியைச் செய்வதற்கான அறிகுறி என்பதை அந்த சுறாக்கள் புரிந்துகொண்டன. இருப்பினும், ஜாஸ் இசையைக் கேட்கும்போது அறிந்துகொள்ள முடிந்த அளவுக்கு, கிளாசிக்கல் இசையைக் கேட்கையில் அவற்றால் உணவு வெகுமதியைப் பெறுவதற்கு வேறோர் இடத்துக்கு நீந்திச் செல்ல வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியவில்லை.

பட மூலாதாரம், Jayne Jenkins/ Ocean Image Bank
4. சுறா உடலில் தொப்புள் இருக்கும்
சில வகை சுறாக்கள் முட்டையிட்டாலும், பல சுறா இனங்கள் மனிதர்களைப் போலவே குட்டிகளை நேரடியாகப் பெற்றெடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.
புல் சுறாக்கள் (bull sharks), சுத்தியல் தலை சுறாக்கள் (hammerhead sharks) போன்ற இனங்களில், குட்டிகள் தாயின் கருப்பையிலேயே வளர்கின்றன. மனித குழந்தைகள் பிறப்பதற்கு முன் தாயிடம் இருந்து தொப்புள் கொடி வழியாக ஊட்டச்சத்துகளைப் பெறுவதைப் போலவே, இந்த சுறாக் குட்டிகளும் ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன.
இதன் காரணமாக, பிறந்த பிறகு தொப்புள் கொடி இருந்த தழும்பு ஆறும் வரை, பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு இந்தக் குட்டிகளுக்குத் தொப்புள் அடையாளம் காணப்படுகிறது.
வேறு சில சுறா இனங்கள் மாறுபட்ட முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை உடலுக்கு வெளியே முட்டையிடுவதில்லை; அதேநேரம் இவற்றின் குட்டிகள் பாலூட்டிகளைப் போலவும் முழுமையாக வளர்வதில்லை. அதற்குப் பதிலாக, தாயின் உடலுக்கு உள்ளேயே இருக்கும் முட்டைகளுக்குள் கருக்கள் வளர்கின்றன. குட்டிகள் வெளியே வருவதற்கு முன்பே இந்த முட்டைகள் பொரிக்கின்றன.
இதன் விளைவாக, தாயின் உடலில் முட்டைகளின் உள்ளே பிறந்திருந்தாலும், அவை குட்டிகளாகவே பிறக்கின்றன.
இந்த வகையில் இனப்பெருக்கம் செய்யும் சுறாக்களுக்கு உதாரணமாக, ஸ்பைனி சுறாக்களை (spiny sharks) குறிப்பிடலாம். இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் நீண்டதாக இருக்கும், குட்டிகள் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகள்கூட ஆகக்கூடும்.

பட மூலாதாரம், Reinhard Dirscherl/ullstein bild via Getty Images
5. கருவிலேயே உடன்பிறப்புகளை சாப்பிட்டுவிடும் சுறாக் குட்டிகள்
சாண்ட் டைகர் சுறாக்களுக்கு (Sand tiger sharks) உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டம் அவை பிறப்பதற்கும் முன்பே தொடங்கி விடுகிறது.
பெண் சாண்ட் டைகர் சுறாக்களின் உடலில் இரண்டு கருப்பைகள் உள்ளன. ஒவ்வொரு கருப்பையிலும் ஐந்து குட்டிகள் வரை வளரக்கூடும். ஆயினும், இந்தக் குட்டிகள் அனைத்துமே உயிர் பிழைப்பதில்லை.
தாயின் உடலுக்குள் கருக்கள் வளரும்போதே தங்களுடன் கருப்பையில் வளரும் பிற குட்டிகளை உண்ணத் தொடங்குகின்றன. இதன் காரணமாக, வழக்கமாக ஒவ்வொரு கருப்பையிலும் இருந்து ஒரேயொரு குட்டி மட்டுமே பிழைத்திருந்து பிறக்கிறது.
இந்த விசித்திரமான நடத்தை 'கருப்பைக்குள் நடக்கும் சுய-இன உண்ணல்' (intrauterine cannibalism) என்று அழைக்கப்படுகிறது. இது அடெல்ஃபோபேகி (adelphophagy) என்றும் அறியப்படுகிறது. இதற்கு 'தன் உடன்பிறப்பை உண்ணுதல்' என்று பொருள்.
இப்படியாக, பிற குட்டிகளை உண்டு உயிர் பிழைத்திருக்கும் குட்டிகளுக்கு, இதன்மூலம் நன்மையும் கிடைக்கிறது.
கருப்பைகளில் குட்டிகளின் எண்ணிக்கை குறையும்போது, தாய் சுறா தொடர்ந்து கருவுறாத முட்டைகளை உற்பத்தி செய்கிறது. அவை எஞ்சியுள்ள குட்டிகளுக்குத் தொடர்ச்சியான உணவு மூலமாக அமைகின்றன.
இந்தக் கூடுதல் ஊட்டச்சத்து, கருவில் பிழைத்திருக்கும் சுறாக் குட்டி பிறக்கும் முன்பே அளவில் பெரியதாகவும், வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.

பட மூலாதாரம், Alexis Rosenfeld/Getty Images
6. இணைபிரியா நண்பர்களைக் கொண்டிருக்கும் சுறாக்கள்
சுறாக்கள் எப்போதும் தனியாகவே வாழ்ந்து வேட்டையாடுபவை எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், அனைத்து வகையான சுறாக்களுக்கும் இதே வாழ்வியல் முறை பொருந்தாது என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
சாம்பல் நிற ரீஃப் சுறாக்களை (grey reef sharks) இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவை குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரே சுறா குழுவுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றன.
அதற்குப் பிறகு, அவை பொதுவாகச் சிறிய குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்கின்றன. அப்படியிருந்தும், ஆண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் அவை மீண்டும் ஒன்றையொன்று சந்திக்கின்றன.
அதேபோல, இளம் லெமன் சுறாக்களும் (lemon sharks) குழுக்களாக வாழ்வதையே விரும்புகின்றன.
முக்கியமாக, இத்தகைய சமூகத் தொடர்புகளின்போது இளம் சுறாக்கள் ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக் கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உணவு தேடுவது, வேட்டையாடி உயிரினங்களிடம் இருந்து தப்புவது போன்ற பயனுள்ள திறன்களை அவை இதன் மூலம் கற்றுக்கொள்ள முடிகிறது.
தங்களைப் போன்றே உருவ அளவிலுள்ள, ஏற்கெனவே அறிமுகமான பிற லெமன் சுறாக்களுடன் நேரத்தைச் செலவிடவே இளம் லெமன் சுறாக்கள் விரும்புவதையும் ஆய்வாளர்கள் கவனித்துள்ளனர்.
பொதுவாக தனித்து வாழும் உயிரினங்களாகக் கருதப்படும் 'பெரிய வெள்ளை சுறாக்கள்'கூட (great white sharks), சில நேரங்களில் நீண்டகால சமூக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடும்.
ஓர் ஆய்வின்போது, சைமன், ஜெகில் எனப் பெயரிடப்பட்ட இரண்டு பெரிய வெள்ளை சுறாக்கள், ஒன்றையொன்று பிரியாமல் 6,000கி.மீ தூரம் வரை ஒன்றாகப் பயணம் செய்ததைக் காண முடிந்தது.
இந்த நடத்தை குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் தேவைப்பட்டாலும், குறைந்தது சில பெரிய வெள்ளை சுறாக்களேனும் நெருக்கமான சமூக நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளக்கூடும் என்பதை இது உணர்த்துகிறது.

பட மூலாதாரம், Hannes Klostermann/ Ocean Image Bank
7. சுறாவின் உடல் முழுக்க இருக்கும் ஆயிரக்கணக்கான பற்கள்
சுறாவின் தோல் ஒரு குறிப்பிடத்தக்க இயற்கை மூலப்பொருள். இது பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 18ஆம் நூற்றாண்டுகால இத்தாலியில், திறமையான கைவினைஞர்கள் மதிப்புமிக்க 'ஸ்ட்ராடிவாரியஸ் வயலின்களின்' நுட்பமான விளிம்புகளை மெருகூட்ட சுறாவின் தோலைப் பயன்படுத்தினர்.
பின்னர், பிரிட்டனில் விக்டோரியன் காலத்தில், மரச் சாமான்கள் செய்பவர்களிடையே சுறாவின் தோல் ஒரு பிரபலமான பொருளாக மாறியது. இது ஷாக்ரீன் என்று அறியப்பட்டதோடு, அதன் தனித்துவமான அமைப்புக்காக மிகவும் மதிக்கப்பட்டது.
பெரும்பாலான மீன்களைப் போலன்றி, சுறாக்களுக்கு சாதாரண செதில்கள் கிடையாது.
மாறாக, அவற்றின் தோல் டென்டிக்கிள்ஸ் எனப்படும் ஆயிரக்கணக்கான சிறிய, பல் போன்ற அமைப்புகளால் மூடப்பட்டு இருக்கும்.
ஒரு சுறா நீந்தும்போது, நீரின் ஓட்டம் இந்த டென்டிக்கிள்ஸ்களை தோலுடன் தட்டையாக அழுத்துகிறது. இது இழுவிசையைக் குறைக்க உதவுகிறது. இதனால் சுறா தண்ணீரில் மிகவும் திறமையாகவும் குறைவான எதிர்ப்புடனும் நகர முடிகிறது.
இந்த டென்டிக்கிள்ஸ்கள் நீட்டிக் கொண்டிருக்கும் திசைக்கு எதிர்ப்புறமாக நீங்கள் கையால் தடவினால், சுறாவின் தோல் மிகவும் சொரசொரப்பாக, மிகவும் கரடுமுரடான மணல் காகிதத்தை தேய்ப்பதைப் போல இருக்கும்.
மேலும், விஞ்ஞானிகள் சுறாக்களில் ஒரு சுவாரஸ்யமான நடத்தையையும் கவனித்துள்ளனர். சில நேரங்களில், சுறாக்கள் தங்களுக்குப் பழக்கமில்லாத பொருட்களின் மீது மெதுவாக மோதி, தங்கள் தோலின் சொரசொரப்பான மேற்பரப்பைப் பயன்படுத்தி அவற்றின் தன்மையை உணர்கின்றன.
அதாவது, இதுவொரு பொருளைக் கடிக்காமலேயே, அந்தப் பொருள் இரையாக இருக்கக்கூடுமா என்பதைச் சோதித்துத் தீர்மானிக்க இதை ஒரு வழியாக சுறாக்கள் பயன்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Miguel MEDINA / AFP via Getty Images
8. சுறாக்களால் உங்கள் இதயத்துடிப்பை உணர முடியும்
சுறாக்களுக்கு எட்டு புலன்கள் உள்ளன. ஆகையால் மனிதர்களைவிட அவை தங்கள் சுற்றுப்புறத்தை தெளிவாக உணர்வதில் அதிக திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன.
மனிதர்களைப் போலவே, சுறாக்களும் பார்வை, கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து அடிப்படைப் புலன்களைப் பயன்படுத்துகின்றன.
இவைபோக கூடுதலாக, நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள், நீரிலுள்ள பலவீனமான மின் சமிக்ஞைகள், புவியின் காந்தப்புலம் ஆகியவற்றை உணர உதவும் மூன்று 'சிறப்புப் புலன்களும்' சுறாக்களுக்கு உள்ளது.
சுறாவுடைய உடலின் இரு பக்கங்களிலும் 'பக்கவாட்டுக் கோடுகள்' எனப்படும் சிறிய துளைகளின் வரிசைகள் அமைந்துள்ளன. இந்தத் துளைகள் திரவ வடிவில் சிறப்பு உணர் செல்களால் நிரம்பியுள்ளன. சுறாவைச் சுற்றி நீர் நகரும்போது, நீரின் அசைவு முடி போன்ற நுண்ணிய செல்களை வளைக்கிறது. இது தன்னைச் சுற்றியிருக்கும் நீரில் ஏற்படும் அதிர்வுகளையும் அசைவுகளையும் உணர சுறாவுக்கு உதவுகிறது.
அவற்றின் உடலில் பல்வேறு பகுதிகளில் முடி போன்ற உணர் செல்களாக அமைந்திருக்கும் 'குழி உறுப்புகள்' (pit organs) எனப்படும் பாகங்களும் இருக்கின்றன. பிற உயிரினங்களால் உருவாக்கப்படும் பலவீனமான, குறைந்த அதிர்வெண் கொண்ட மின் சிக்னல்களை சுறாக்கள் உணர்வதற்கு இந்த உறுப்புகள் உதவுகின்றன.
சுறாக்கள், கடல் தரையில் மணலுக்கு அடியில் மறைந்திருக்கும் இரையைத் துல்லியமாகக் கண்டறிவதில், முழு இருட்டிலும்கூட சரியாக வேட்டையாடுவதில், இந்தத் திறன் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
அதேபோல அவற்றின் தலையில் காணப்படும் சிறிய துளைகள் போன்ற மற்றுமொரு முக்கியமான உணர் அமைப்பு 'ஆம்புலே ஆஃப் லோரென்சினி' (ampullae of Lorenzini) என்று அழைக்கப்படுகிறது.
அந்த ஒவ்வொரு துளையிலும் அதிக உணர்திறன் கொண்ட நரம்பு செல்கள் உள்ளன. இவை, அருகில் இருக்கும் உயிரினங்களின் இதயத் துடிப்பு உள்ளிட்ட தசை அசைவுகளால் உருவாகும் மிகச் சிறிய மின் சிக்னல்களை உணர சுறாவுக்கு உதவுகின்றன.
'ஆம்புலே ஆஃப் லோரென்சினி' என்ற இந்த உணர் அமைப்புகள் சுறாக்களுக்கு புவியின் காந்தப்புலத்தை உணரவும்கூட உதவுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றன.
இதனால், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவு வரை பெருங்கடலில் திசையறிந்து பயணிக்கவும், நீண்ட தூரப் பயணங்களின்போது சரியான பாதையைக் கண்டறியவும் அவற்றால் முடிகிறது.

பட மூலாதாரம், Larsvon Ritter Zahony/ Ocean Image Bank
9. சுறாக்கள் துருவ நட்சத்திரத்தைவிட பழமையானவை
இன்றைய காலகட்டத்தில் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகவும் பழமைவாய்ந்த உயிரினங்களில் சுறாக்களும் ஒன்று. சுமார் 450 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகச் சிறிய செதில்களின் தொகுப்புதான் இதுவரை கிடைத்தவற்றிலேயே நவீனகால சுறாக்களின் மூதாதைகள் குறித்த மிகவும் பழமையான புதைபடிவ சான்று.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், உலகில் முதல் மரங்கள் தோன்றுவதற்கு சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, டைனோசர்கள் தோன்றுவதற்கு 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, சனி கோளைச் சுற்றி நாம் காணும் வளையங்கள் உருவாவதற்கு 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, துருவ நட்சத்திரம் உருவாவதற்கு 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சுறாக்கள் புவியில் வாழ்ந்து வந்தன.
சுறாக்களுக்கு இருப்பதைப் போன்ற பற்கள் முதன்முதலில் சுமார் 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. அதேவேளையில், அசலாக சுறாக்களின் தோற்றத்தைக் கொண்ட உயிரினங்களின் முதல் உயிரினக் குழு சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
இந்தப் பழங்கால மீன்களில் பலவும் நுணுக்கமாகப் பார்த்தால் சுறாக்கள் என்று கூற முடியாது. இருப்பினும், இன்று நாம் காணும் சுறாக்களுடன் அவை மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பின்னர், சுமார் 195 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், நவீனகால சுறாக்களின் அறியப்பட்ட ஆரம்பக்கால இனங்கள் தோன்றின. இந்த சுறாக்கள் முன்னோக்கி நீட்டிக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட தாடைகளைக் கொண்டிருந்தன. இது அவற்றைச் சிறந்த வேட்டையாடிகளாகவும், வலிமையாக நீந்தும் திறன் கொண்டவையாகவும் மாற்றியது.
இன்று, உலகம் முழுவதும் சுமார் 500 வகை சுறா இனங்கள் அறியப்பட்டுள்ளன. சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகக் கருதப்படும் அதிகபட்ச சுறா இனங்களின் எண்ணிக்கையைவிட இது குறைவு. இருந்தாலும், ஆய்வாளர்கள் இன்றும் புதுப்புது சுறா இனங்களைக் கண்டறிந்து வருகின்றனர்.
பரிணாம வளர்ச்சியின் மூலமாகவும், மனிதர்கள் மற்றும் சுறாக்கள் இடையே ஒரு தொடர்பு உள்ளது. மனிதர்களுக்கும், சுறாக்களுக்கும் பொதுவான மிக நெருக்கமான மூதாதை உயிரினம் சுமார் 440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இருப்பினும், அந்தப் பழங்கால மூதாதை உயிரினம் மனிதனைவிட அதிகமாக சுறாவை போலவே தோற்றமளித்தது. மனிதர்கள் மற்றும் சுறாக்களின் பரிணாமப் பாதைகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டாலும், இந்த இரு இனங்களும் பூமியில் உயிரினங்களின் நீண்ட வரலாற்றின் ஒரு பகுதியாகவே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், நமது இருப்பு அவை வாழும் பெருங்கடல்களின் ஆரோக்கியத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































