உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும் பாலத்தீனம் - ஆனால் தலைவரே இல்லையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பால் ஆடம்ஸ்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
இந்த மாதத் தொடக்கத்தில், லண்டனில் உள்ள சட்டாம் ஹவுஸ் சிந்தனைக் குழுவில் நடந்த ஒரு விவாதத்திற்கு பாலத்தீன ராஜீய நிபுணர் ஹுசம் சோம்லோட் அழைக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பாலத்தீன அரசை அங்கீகரிக்க உறுதியளித்த பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் பெல்ஜியம் அப்போதுதான் இணைந்திருந்தது. இது ஒரு முக்கியமான தருணம் என்பதில் முனைவர் சோம்லோட் தெளிவாக இருந்தார்.
"நியூயார்க்கில் நீங்கள் காண்பது, இருநாடு தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான கடைசி முயற்சியாக இருக்கலாம்," என்று அவர் எச்சரித்தார்.
"அது தோல்வியடையாமல் இருக்கட்டும்."
சில வாரங்களுக்குப் பிறகு, அது இப்போது நடந்துவிட்டது. பாரம்பரியமாக இஸ்ரேலின் வலுவான கூட்டாளிகளான பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இறுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
கியர் ஸ்டாமர், பிரிட்டனின் இந்த நடவடிக்கையை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் அறிவித்தார்.
அதில் அவர், "மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் கொடூரமான சூழ்நிலையை எதிர்கொண்டு, நாங்கள் அமைதி மற்றும் இரு நாடு தீர்வின் சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க செயல்படுகிறோம்.
"இதன் பொருள், ஒரு பாதுகாப்பான மற்றும் உறுதியான இஸ்ரேலுடன், ஒரு சாத்தியமான பாலத்தீன அரசும் இருக்க வேண்டும் - தற்போது நமக்கு இரண்டும் இல்லை," என்று கூறினார்.
இதற்கு முன்பு 150-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு பாலத்தீன அரசை அங்கீகரித்திருந்தன. ஆனால், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் இந்த அங்கீகாரம் பலரால் ஒரு முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.
"உலகளவில் பாலத்தீனம் இவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்ததில்லை" என்று முன்னாள் பாலத்தீன அதிகாரி சேவியர் அபு ஈத் கூறுகிறார்.
"உலகம் பாலத்தீனத்திற்காக ஒன்றுதிரண்டுள்ளது."
ஆனால், பாலத்தீனம் என்றால் என்ன, அங்கீகரிக்க ஒரு அரசு உண்மையில் இருக்கிறதா என்பது உட்பட சிக்கலான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Shutterstock
1933-ஆம் ஆண்டின் மான்டிவீடியோ தீர்மானத்தில் (Montevideo Convention) அரசுரிமைக்கான நான்கு அளவுகோல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பாலத்தீனம் அவற்றில் இரண்டுக்கு நியாயமாக உரிமைகோரமுடியும். ஒரு நிரந்தர மக்கள் (காஸா போர் இதை மிகப்பெரிய அபாயத்துக்குட்படுத்தியுள்ளது) மற்றும் சர்வதேச உறவுகளில் ஈடுபடும் திறன் - இதற்கு முனைவர் சோம்லோட் ஒரு சான்று.
ஆனால், அது இன்னும் "வரையறுக்கப்பட்ட பிரதேசம்" என்ற தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.
இறுதி எல்லைகள் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லாததால் (மற்றும் உண்மையான அமைதிக்கான நடைமுறையும் இல்லாததால்), பாலத்தீனம் என்றால் என்ன என்று உறுதியாக அறிந்துகொள்வது கடினம்.
பாலத்தீனர்களுக்கு, அவர்களின் கனவு அரசு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது: கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை மற்றும் காஸா முனை. இவை அனைத்தும் 1967-ஆம் ஆண்டின் ஆறு நாள் போரின்போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டன.
1948-ல் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மேற்கு கரை மற்றும் காஸா முனை முக்கால் நூற்றாண்டு காலமாக இஸ்ரேலால் புவியியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கரையில், இஸ்ரேலிய ராணுவம் மற்றும் யூத குடியேற்றவாசிகளின் இருப்பு காரணமாக, 1990-களில் ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களுக்குப் பிறகு நிறுவப்பட்ட பாலத்தீன அதிகார சபை, அந்தப் பிரதேசத்தின் சுமார் 40% பகுதியை மட்டுமே நிர்வகிக்கிறது.
1967-க்குப் பிறகு, குடியேற்றங்களின் விரிவாக்கம் மேற்கு கரையைச் சிதைத்து, அதை ஒரு துண்டு துண்டான அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பாக மாற்றி வருகிறது.
இதற்கிடையில், பாலத்தீனர்கள் தங்கள் தலைநகராகக் கருதும் கிழக்கு ஜெருசலேம், யூத குடியேற்றங்களால் சூழப்பட்டு, மேற்கு கரையிலிருந்து படிப்படியாகத் துண்டிக்கப்பட்டு வருகிறது.
காஸாவின் நிலை, நிச்சயமாக, இன்னும் மோசமாக உள்ளது. அக்டோபர் 2023 ஹமாஸ் தாக்குதல்களால் தூண்டப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு போருக்குப் பிறகு, அந்தப் பிரதேசத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் போதாதென்று, அரசுரிமையை அங்கீகரிக்க மான்டிவீடியோ மாநாட்டில் நான்காவது அளவுகோல் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு செயல்படும் அரசாங்கம்.
இது பாலத்தீனர்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
'நமக்கு ஒரு புதிய தலைமை தேவை'
1994-ல், இஸ்ரேலுக்கும் பாலத்தீன விடுதலை அமைப்புக்கும் (PLO) இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம், பாலத்தீன தேசிய அதிகார சபையை (பாலத்தீன அதிகார சபை அல்லது PA என அழைக்கப்படுகிறது) உருவாக்க வழிவகுத்தது. இது காஸா மற்றும் மேற்கு கரையில் உள்ள பாலத்தீனர்கள் மீது பகுதி சிவில் கட்டுப்பாட்டைச் செலுத்தியது.
ஆனால், 2007-ல் ஹமாஸ் மற்றும் முக்கிய PLO பிரிவான ஃபதாஹ்-வுக்கு இடையே ஏற்பட்ட ஒரு ரத்தக்களரியான மோதலுக்குப் பிறகு, காஸா மற்றும் மேற்கு கரையில் உள்ள பாலத்தீனர்கள் இரண்டு போட்டி அரசுகளால் ஆளப்படுகிறார்கள், அவை காஸாவில் ஹமாஸ் மற்றும் மேற்கு கரையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலத்தீன அதிகார சபை.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
இதற்கிடையில், பாலத்தீன அரசியல் இறுக்கமாகியுள்ளது. இது பெரும்பாலான பாலத்தீனர்களைத் தங்கள் தலைமை குறித்து அவநம்பிக்கையடையச் செய்கிறது.
மேலும், எந்தவொரு உள் நல்லிணக்கத்திற்கும், ஒரு அரசுக்கான முன்னேற்றத்திற்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து அவர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
கடைசியாக அதிபருக்கான தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் 2006-ல் நடந்தன. அதாவது, 36 வயதுக்குட்பட்ட எந்தப் பாலத்தீனரும் மேற்கு கரையிலோ அல்லது காஸாவிலோ வாக்களித்தது இல்லை.
"இவ்வளவு காலத்துக்கு எங்களுக்குத் தேர்தல்கள் நடக்கவில்லை என்பது மனதைக் குழப்புகிறது," என்று பாலத்தீன வழக்கறிஞர் டயானா புட்டு கூறுகிறார்.

பட மூலாதாரம், MAHMUD HAMS/AFP via Getty Images
அக்டோபர் 2023-ல் காஸாவில் வெடித்த போரின் விளைவாக, இந்த பிரச்னை இன்னும் தீவிரமடைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான அதன் குடிமக்கள் இறந்த நிலையில், மேற்கு கரையில் உள்ள அதன் தலைமையகத்திலிருந்து கவனித்து வரும் அப்பாஸின் பாலத்தீன அதிகார சபை, பரிதாபத்திற்குரிய ஒரு பார்வையாளராக மாறியுள்ளது.
உள் மோதல்களின் ஆண்டுகள்
தலைமைக்குள் பதற்றங்கள் பல ஆண்டுகளுக்கு முந்தையவை. பிஎல்ஓ தலைவர் யாசர் அராஃபத் பல ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட பிறகு, பாலத்தீன அதிகார சபைக்கு தலைமை தாங்கத் திரும்பியபோது, உள்ளூர் பாலத்தீன அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டனர்.
அராஃபத்தின் "வெளிநபர்களின்" ஆதிக்கம் செலுத்தும் பாணியை "உள்நபர்கள்" வெறுத்தனர். அராஃபத்தின் வட்டாரத்தில் ஊழல் இருப்பதாக ஏற்பட்ட வதந்திகள் பாலத்தீன அதிகார சபையின் நற்பெயரை கெடுத்தன.
மிக முக்கியமாக, புதிதாக உருவாக்கப்பட்ட பாலத்தீன அதிகார சபையால், மேற்கு கரையில் இஸ்ரேலின் படிப்படியான குடியேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. 1993-ல் வெள்ளை மாளிகையில் அராஃபத்துக்கு, முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஷாக் ரபின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றச் செய்வதிலும் அந்த அரசு திறனற்றதாக உள்ளது.

பட மூலாதாரம், REUTERS/Gary Hershorn
அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் ஒரு சீரான அரசியல் பரிணாம வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. தோல்வியுற்ற அமைதி முயற்சிகள், யூத குடியேற்றங்களின் தொடர்ச்சியான விரிவாக்கம், இரு தரப்பிலும் உள்ள தீவிரவாதிகளின் வன்முறை, இஸ்ரேல் வலதுசாரி அரசியலுக்கு சாய்ந்தது மற்றும் 2007-ல் ஹமாஸ் மற்றும் ஃபதாஹ் இடையே நடந்த வன்முறை மோதல்கள் ஆகியவை அந்த ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தின.
"சாதாரண சூழ்நிலையில், புதிய நபர்கள், புதிய தலைமுறைகள் உருவாகியிருப்பார்கள்," என்று பாலத்தீன வரலாற்றாசிரியர் யெசிட் சயிங் கூறுகிறார்.
"ஆனால் அது சாத்தியமற்றதாகிவிட்டது... ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாலத்தீனர்கள் தனித்தனி சிறிய இடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இது புதிய நபர்கள் தோன்றி ஒன்றிணைவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது."
இருப்பினும், ஒரு நபர் தோன்றினார்; அவர்தான் மர்வான் பர்குதி.
மேற்கு கரையில் பிறந்து வளர்ந்த அவர், 15 வயதில் அராஃபத்தால் வழிநடத்தப்பட்ட பிஎல்ஓ பிரிவான ஃபதாஹ்-வில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.
இரண்டாவது பாலத்தீன எழுச்சியின்போது பர்குதி ஒரு பிரபலமான தலைவராக உருவெடுத்தார். ஐந்து இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட தாக்குதல்களைத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் எப்போதும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். ஆனால், 2002 முதல் இஸ்ரேலிய சிறையில் உள்ளார்.
ஆனாலும், எதிர்கால தலைவர்கள் பற்றிப் பேசும்போது, பாலத்தீனர்கள் கால் நூற்றாண்டு காலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த மனிதரைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.

பட மூலாதாரம், AFP via Getty Images
மேற்குக் கரையில் உள்ள பாலத்தீன கொள்கை மற்றும் ஆய்வு ஆராய்ச்சி மையத்தின் (Palestinian Centre for Policy and Survey Research) சமீபத்திய கருத்துக் கணிப்பு, 50% பாலத்தீனர்கள் பர்குதியை அதிபராக தேர்ந்தெடுப்பார்கள் என்று கண்டறிந்துள்ளது. 2005 முதல் இந்தப் பதவியை வகித்து வரும் அப்பாஸை விட அவர் மிக அதிக முன்னிலையில் உள்ளார்.
ஹமாஸுடன் நீண்ட காலமாக மோதலில் இருக்கும் ஃபதாஹ்-வின் மூத்த உறுப்பினராக இருந்தபோதிலும், ஹமாஸ் காஸாவில் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியப் பணயக்கைதிகளுக்கு ஈடாக விடுவிக்க விரும்பும் அரசியல் கைதிகளின் பட்டியலில் அவரது பெயர் முக்கியமாக இடம்பெறும் என்று கருதப்படுகிறது.
ஆனால், அவரை விடுவிப்பதற்கான எந்தவொரு விருப்பத்தையும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

பட மூலாதாரம், AFP via Getty Images
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், எலும்பும் தோலுமாக பலவீனமாக இருக்கும் 66 வயதான பர்குதியை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இட்டமார் பென் க்விர் கேலி செய்வதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியானது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பர்குதி பொதுவெளியில் காணப்பட்ட தருணம் அது.
நெதன்யாகுவும் பாலத்தீன அரசுரிமையும்
காஸா போருக்கு முன்பே, பாலத்தீன அரசுரிமைக்கு பெஞ்சமின் நெதன்யாகுவின் எதிர்ப்பு தெளிவாக இருந்தது.
பிப்ரவரி 2024-ல், " நமது இருப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பாலத்தீன அரசு நிறுவப்படுவதை பல தசாப்தங்களாக தடுத்தவன் நான் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று அவர் கூறினார்.
காஸாவின் மீது பாலத்தீன அதிகார சபை மீண்டும் அதிகாரம் செலுத்த வேண்டும் என சர்வதேச அளவில் குரல்கள் எழுந்தாலும், காஸாவின் எதிர்கால நிர்வாகத்தில் பாலத்தீன அதிகார சபைக்கு எந்தப் பங்கும் இருக்காது என்று நெதன்யாகு வலியுறுத்துகிறார். அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களை அப்பாஸ் கண்டிக்கவில்லை என்று அவர் வாதிடுகிறார்.
ஆகஸ்டில், கிழக்கு ஜெருசலேமை மேற்கு கரையிலிருந்து துண்டிக்கும் ஒரு குடியேற்ற திட்டத்திற்கு இஸ்ரேல் இறுதி ஒப்புதல் அளித்தது. 3,400 வீடுகளுக்கான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன. நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச், இந்தத் திட்டம் ஒரு பாலத்தீன அரசு என்ற கருத்தை புதைத்துவிடும், "ஏனென்றால் அங்கீகரிக்க எதுவும் இல்லை, அங்கீகரிக்க யாரும் இல்லை" என்று கூறினார்.
இதில் புதிதாக ஏதும் இல்லை என்கிறார் சயிங்.
"நீங்கள் தலைமை தாங்க அதிதூதர் மைக்கேலை பூமிக்கு அழைத்து வந்து பாலத்தீன அதிகார சபைக்கு அவரைத் தலைவராக்கினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது."

பட மூலாதாரம், Reuters
ஒரு விஷயம் நிச்சயம், ஒரு பாலத்தீன அரசு உருவானால், அதை ஹமாஸ் நிர்வகிக்காது.
ஜூலையில் பிரான்ஸ் மற்றும் செளதி அரேபியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் மாநாட்டின் முடிவில் தயாரிக்கப்பட்ட ஒரு பிரகடனம், "ஹமாஸ் காஸாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு, தனது ஆயுதங்களை பாலத்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அறிவித்தது.
இந்த "நியூயார்க் பிரகடனம்" அனைத்து அரபு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், ஐநா பொதுச் சபையின் 142 உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஹமாஸைப் பொறுத்தவரை, காஸாவில் ஒரு சுதந்திரமான நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்க அது தயாராக இருப்பதாகக் கூறுகிறது.
அங்கீகாரத்தின் குறியீடே போதுமானதா?
பர்குதி சிறையில் இருக்க, அப்பாஸ் தனது 90 வயதை நெருங்க, ஹமாஸ் சிதைந்து, மேற்கு கரை துண்டு துண்டாக இருக்கும் நிலையில், பாலத்தீனத்திற்குத் தலைமை மற்றும் ஒருங்கிணப்பு இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால், சர்வதேச அங்கீகாரம் அர்த்தமற்றது என்று அது கூறவில்லை.
"இது உண்மையில் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கலாம்," என்று டயானா புட்டு கூறுகிறார். இருப்பினும், "இந்த நாடுகள் ஏன் இதைச் செய்கின்றன, அவற்றின் நோக்கம் என்ன என்பதைப் பொறுத்தது," என அவர் எச்சரித்தார்.
ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அரசு அதிகாரி, வெறும் அங்கீகாரத்தின் குறியீடு மட்டும் போதாது என்று என்னிடம் கூறினார்.
"ஐநா பொதுச் சபை ஒரு அங்கீகார விழாவாக மட்டும் இல்லாமல், நாம் ஏதாவது முன்னேற்றத்தை அடைய முடியுமா என்பதே கேள்வி."

பட மூலாதாரம், Shutterstock
நியூயார்க் பிரகடனம், "பாலத்தீன பிரச்னையின் அமைதியான தீர்வுக்காக, உறுதியான, காலக்கெடுவுக்குட்பட்ட மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கைகளை எடுக்க" பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை உறுதி எடுக்க வைத்தது.
காஸா மற்றும் மேற்கு கரையின் ஒருங்கிணைப்பு, பாலத்தீன அதிகார சபைக்கு ஆதரவு மற்றும் பாலத்தீன தேர்தல்கள் (அத்துடன் காஸாவுக்கான ஒரு அரபு மறுசீரமைப்புத் திட்டம்) ஆகியவை அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்று லண்டனில் இருக்கும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், தடைகள் மிகவும் கடுமையானவை என்பதை அவர்கள் அறிவார்கள்.
இஸ்ரேல் விடாப்பிடியாக எதிர்க்கிறது. பதிலடியாக மேற்கு கரையின் சில பகுதிகளை அல்லது முழுவதையும் இணைப்பதாக அது மிரட்டியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியைத் தெளிவுபடுத்தியுள்ளார். வியாழக்கிழமை அன்று, "அந்த விஷயத்தில் பிரதமருடன் எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உள்ளது," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்டில், ஐநா-வின் சொந்த விதிகளுக்கு மாறாக, டஜன் கணக்கான பாலத்தீன அதிகாரிகளுக்கான விசாக்களை ரத்து செய்தோ அல்லது மறுத்தோ அமெரிக்கா ஒரு அசாதாரண நடவடிக்கையை எடுத்தது.
ஒரு பாலத்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த எந்தவொரு ஐநா தீர்மானத்தையும் நிராகரிக்க அமெரிக்காவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. மேலும், டிரம்ப் தனது "ரிவியரா திட்டம்" என்றழைக்கப்படும் அமெரிக்கா காஸாவின் மீது "ஒரு நீண்ட கால உரிமையை" எடுத்துக்கொள்ளும் ஒரு திட்டத்துடன் இன்னும் உடன்பட்டு இருப்பதாக தோன்றுகிறது.
முக்கியமாக, அந்தத் திட்டம் பாலத்தீன அதிகார சபையை பற்றி எதுவும் கூறவில்லை. "சீர்திருத்தப்பட்ட பாலத்தீன சுய-நிர்வாகம்" அல்லது காஸா மற்றும் மேற்கு கரைக்கு இடையேயான எதிர்கால இணைப்பு பற்றி மட்டுமே அது குறிப்பிடுகிறது.

காஸாவின் நீண்ட கால எதிர்காலம், நியூயார்க் பிரகடனம், டிரம்பின் திட்டம் மற்றும் அரபு மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையே எங்காவது இருக்கலாம்.
அனைத்துத் திட்டங்களும், கடந்த இரண்டு ஆண்டுகளில் காஸாவுக்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்து எதையாவது காப்பாற்ற விழைகின்றன. மேலும், இவற்றிலிருந்து எது உருவானாலும், பாலத்தீனம் மற்றும் அதன் தலைமை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அது பதிலளிக்க வேண்டும்.
ஆனால், டயானா புட்டு போன்ற பாலத்தீனர்களுக்கு, இதைவிட மிக முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. மேலும் அதிகமான உயிர்களைப் பலியாவதை இந்த நாடுகள் தடுக்க வேண்டும் என்றுதான் உண்மையில் விரும்புவதாக அவர் கூறுகிறார்.
"அரசுரிமை என்ற பிரச்னையில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும்" என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












