'மனிதர்களுக்கு மட்டுமே பயந்தோம்' - கர்நாடகாவில் 2 குழந்தைகளுடன் ரஷ்ய பெண் குகையில் வாழ்ந்தது ஏன்?

போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயத்தை கண்டுபிடித்தனர். அங்கு ரஷ்யப் பெண் நினா குடினா என்பவரும் அவரது ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகள்களும், ஒரு குகையில் வசித்து வந்தனர்.

பட மூலாதாரம், Nina Kutina

படக்குறிப்பு, ரஷ்யப் பெண் நினா குடினா
    • எழுதியவர், பிபிசி ரஷ்ய சேவை செய்தியாளர்கள்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கர்நாடகாவின் பிரபல சுற்றுலா நகரமான கோகர்ணா, 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டது. இந்தப் பகுதியில் உள்ள புனிதத் தலங்களுக்குச் செல்வதற்காக பக்தர்கள் விரும்பி வருகை தருகிறார்கள்.

அதன் அருகே உள்ள காட்டில், பொன்னிற முடியுடன் இருந்த ஒரு குழந்தை சுற்றித் திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர். அதனையடுத்து, உள்ளூர் காவல்துறை விசாரித்தபோது, எதிர்பாராத ஒரு விஷயத்தை கண்டுபிடித்தனர்.

ஒரு குகையில் நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும், அவரது ஐந்து மற்றும் ஆறு வயதுடைய மகள்களும் வசித்து வந்துள்ளனர். இயற்கையான சூழலில் கைவினைப்பொருட்கள் சூழ அவர்கள் வசித்து வந்தனர் என்பது தெரிய வந்தது.

"நாங்கள் இதற்கு முன் ஒரு குகையில் வாழ்ந்ததில்லை," என்று 40 வயதான நினா குடினா பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அப்படியானால் அந்தப் பெண் குகைக்குச் சென்றது எப்படி?

தானும் தனது இரண்டு மகள்களும் ஒன்பது மாதங்கள் கோகர்ணா அருகே உள்ள காட்டுக்குள் ஒரு குகையில் வாழ்ந்ததாகவும் அப்போது, தனது மகன் லுஷேசர் அண்டை மாநிலத்தில் உள்ள அரம்போலில் ஒரு நண்பருடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்ததாகவும் நினா குடினா கூறினார்.

அந்த குகை காட்டுக்குள் இருந்தாலும், பழங்கள் வாங்க கோகர்ணாவுக்கு எளிதாக செல்லக்கூடிய தொலைவில்தான் இருந்தது என்று குடினா குறிப்பிட்டார்.

அவர்கள் இறைச்சி சாப்பிடவில்லை. அவரது மகள்கள் பிறந்ததிலிருந்தே சைவ உணவையே எடுத்துக் கொண்டுள்ளனர். இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையின் காரணமாக, அவர்கள் ஒருபோதும் நோய்வாய்பட்டதில்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அந்த இடம் மிகவும் சுவாரஸ்யமானது. பலர் அங்கு புனித யாத்திரைக்கு செல்கிறார்கள். நாங்கள் இயற்கையை நேசிக்கிறோம். காடுகள் உட்பட உலகின் பல இடங்களிலும் வாழ்ந்திருக்கிறோம். ஆனால் குகையில் வாழ்வது எங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது"

மேலும், 2024 செப்டம்பரில் கோவாவில் நடந்த ஒரு விபத்தில் தனது மூத்த மகன் டிமிட்ரி உயிரிழந்ததைத் தொடர்ந்து தான் குகையில் வாழத் தீர்மானித்ததாகவும், அப்போது "ஆழ்ந்த துக்கத்தில்" இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.
படக்குறிப்பு, இந்த ஆண்டு ஜூலை மாதம், கர்நாடகாவில் உள்ள ஒரு குகையில் ஒரு ரஷ்யப் பெண்ணையும் இரண்டு சிறுமிகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

ரஷ்யாவுக்கு திரும்பினர்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அந்தக் குகையில், பலகைகளால் படுக்கை அமைத்து, தரையில் பாய்களைப் பரப்பி, குடும்பத்தினர் செய்த கைவினைப் பொருட்களால் குகையை நினா குடினா அலங்கரித்துள்ளார்.

அவர்களைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அந்தக் குடும்பம் குகையில் "வசதியாக இருந்தது" என்று கூறினாலும், மழைக்காலத்தில் பாம்புகள், காட்டு விலங்குகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால் குழந்தைகளுடன் காட்டில் வாழ்வது பாதுகாப்பற்றது என்று எச்சரித்தனர்.

ஆனால், "எந்த பாம்பும் எங்களைத் துன்புறுத்தியதில்லை. எந்த விலங்கும் எங்களைத் தாக்கவில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமே பயந்தோம்," என்று நினா குடினா தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் குடினாவின் குடிவரவு ஆவணங்கள் காலாவதியாகிவிட்டதாகவும், அந்தக் குடும்பம் ஒரு இடப்பெயர்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

தனது மகன் டிமிட்ரி இறந்த பிறகு, தேவையான ஆவணங்களை பெறும் மனவலிமை தன்னிடம் இல்லை என நினா குடினா பிபிசியிடம் கூறினார்.

செப்டம்பரில், நினாவும் அவரது குடும்பமும் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

 நினா குடினா

பட மூலாதாரம், Nina Kutina

படக்குறிப்பு, தானும் தன் குழந்தைகளும் பல ஆண்டுகளாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததாக நினா குடினா பிபிசியிடம் தெரிவித்தார்.

'ஒரு கட்டடத்திற்குள் நான் வாழ விரும்பவில்லை'

லெனின்கிராட்டில் (இப்போது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்) பிறந்து, சைபீரியாவில் எட்டு ஆண்டுகள் கல்வி பயின்றதாகவும் பின்னர் ரஷ்யா முழுவதும் பயணம் செய்து யுக்ரேன், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, இலங்கை, கோஸ்டாரிகா, நேபாளம் மற்றும் இறுதியாக இந்தியாவில் வாழ்ந்து வந்ததாகவும் நினா குடினா பகிர்ந்து கொண்டார்.

கல்வியியலில் பட்டம் பெற்றிருந்தாலும், மாஸ்கோவில் கட்டட உட்புற வடிவமைப்பாளராக நினா பணியாற்றியுள்ளார். பிறகு, 15 ஆண்டுகளுக்கு முன், மூத்த மகன் டிமிட்ரியுடன் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.

"மாஸ்கோவில் ஒரு கட்டடத்திற்குள் நான் வாழ விரும்பவில்லை. கடலோரத்தில் வாழ விரும்பினேன், அப்போது என் குழந்தைகள் மணலில் ஓடவும், உலகைப் பார்க்கவும் முடியும். அதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் முடியும்" என்று அவர் கூறினார்.

வெளிநாட்டில், அவர் லூசேசர், அமா மற்றும் பிரேமா ஆகிய மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்கள் மருத்துவ உதவி இல்லாமல் வீட்டிலேயே பிறந்தனர். தனது குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

மேலும், "நான் என் குழந்தைகளுடன் 24 மணி நேரமும் இருக்கிறேன். கல்வி மற்றும் கலைத் துறை பின்னணியுடன் நான் ஒரு இசைக்கலைஞராகவும் இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக "திறந்த வானத்தின் கீழ், இயற்கையுடன் இணக்கமாக" வாழ்ந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் அவரை அறிந்த வாசிலி கோண்ட்ராஷோவ், அவரை "துணிச்சல்மிக்கவர்" என்று விவரித்தார். மேலும், அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கோவா காட்டில் வாழ்ந்ததாகவும் கூறினார்.

கோண்ட்ராஷோவ் வடக்கு கோவா காட்டில் நினாவைச் சந்தித்தார்.

"ஒரு பெரிய வெப்பமண்டல மரத்தின் வேர்களுக்கு இடையில், நினா துணியால் மூடிய இரண்டு அறைகளை அமைத்திருந்தார். ஒன்று ஹால் , மற்றொன்று படுக்கையறை. அந்த மரத்தின் அருகே ஓடும் ஓடை, ஒரு சிறிய இயற்கை குளத்தை அமைத்தது.

சுற்றியுள்ள பகுதி களிமண்ணால் பூசப்பட்டு இருந்தது. கையால் செய்யப்பட்ட இருக்கைகள், பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் இருந்தன. 'பாம்புகள் மீது உங்களுக்குப் பயமில்லையா?' என்று நான் கேட்டேன். 'இங்கு இரண்டு பாம்புகள் இருக்கின்றன. நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிவோம்,' என்று நினா பதிலளித்தார்" என கோண்ட்ராஷோவ் கூறுகிறார்.

"எந்த பாம்பும் எங்களைத் துன்புறுத்தியதில்லை. எந்த விலங்கும் எங்களைத் தாக்கவில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமே பயந்து வாழ்கிறோம்," என்று நினா குடினா தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Nina Kutina

படக்குறிப்பு, அவர்களைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அந்தக் குடும்பம் குகையில் "வசதியாக இருந்தது" என்று கூறினாலும், மழைக்காலத்தில் பாம்புகள், காட்டு விலங்குகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால் குழந்தைகளுடன் காட்டில் வாழ்வது பாதுகாப்பற்றது என்று எச்சரித்தனர்.

'குகையை விட காவல் மையத்தின் சூழல் மோசம்'

தன்னை ஜாமீனில் விடுவிக்கவும், ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க அனுமதி தரவும் அதிகாரிகளிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு பதிலாக பெங்களூருக்கு அருகிலுள்ள ஒரு பெண்கள் காவல் மையத்தில் தனது மகள்களுடன் தங்க வைக்கப்பட்டதாகவும் குடினா கூறினார்.

அவரது மகன் அருகிலுள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டதும், வருத்தமளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

அந்த காவல் மையத்தின் சூழல் மிகவும் மோசமானது என்று குடினா விவரித்தார். ஊழியர்கள் உணவவையும் பொருட்களையும் திருடிச் சென்றதாகவும், குகையில் வைக்கப்பட்டிருந்த தனது மகனின் சாம்பல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது ஒருபோதும் திருப்பித் தரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

"காட்டு விலங்குகளிடமிருந்து எங்களை பாதுகாக்கிறோம் என்று காவல்துறையினர் சொன்னார்கள். ஆனால் அந்த மையத்தில், இரவில் மக்கள் மீது விழும் பெரிய கரப்பான் பூச்சிகளால் அவதிப்பட்டோம். குழந்தைகளை பசி மற்றும் குளிரிலிருந்து காப்பாற்றியதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் குகையில் நான் சுவையான உணவை சமைத்தேன். அந்த மையத்தில், பசி மற்றும் வைட்டமின் குறைபாட்டால் அவர்கள் அவதிப்பட்டனர்" என்று நினா பகிர்ந்து கொண்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டது.

கர்நாடக அரசின் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர் பி. மணிவண்ணன் இது குறித்துப் பேசினார்.

"ரஷ்ய பெண்ணின் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கவனித்து வருகிறோம். துமகுரு மாவட்ட துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையரிடம் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மற்றொரு அதிகாரியும் (அவர் பெயர் வெளியிட விரும்பவில்லை) இது குறித்துக் கருத்து தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "முதற்கட்ட விசாரணையில், பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகளின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்." என அவர் குறிப்பிட்டார்.

அந்த மையத்தின் சூழல்  மிகவும் மோசமானது என்று குடினா விவரித்தார்.

பட மூலாதாரம், Nina Kutina

படக்குறிப்பு, குகையை விட அந்த காவல் மையத்தின் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

'அந்த நபருடன் தொடர்பில் இல்லை'

ரஷ்யாவுக்குத் திரும்புவதற்கு உதவி செய்யக் கோரி குடினா ரஷ்ய தூதரகத்தைத் தொடர்பு கொண்டார்.

ஆனால் கோவாவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபர் ட்ரோர் ஷ்லோமோ கோல்ட்ஸ்டீன், அமா மற்றும் பிரேமாவின் தந்தை என்று கூறி அவர்களை தனது பொறுப்பில் வழங்க வேண்டும் எனவும் அவர்களை ரஷ்யாவுக்கு அனுப்ப வேண்டாம் என கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் இந்த செயல்முறை தாமதமானது என பிபிசியிடம் பேசிய இந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.

"சமீப ஆண்டுகளில், அவர்களுடன் (பெண் குழந்தைகளுடன்) தொடர்பில் இருப்பது கடினமாகிவிட்டது. நான் அவர்களைக் கண்டபோது கூட, அவர்கள் என்னை விட்டு விலகி இருப்பது போல தோன்றியது. பிறப்பதற்கு முன்பே நான் அவர்களைக் கைவிட்டுவிட்டதாக குழந்தைகள் கூறினார்கள். ஆனால் நான் அவர்களை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை," என்று கோல்ட்ஸ்டைன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

குழந்தைகளைக் கூட்டுப் பராமரிப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

நீதிமன்றம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அவர்களின் தாய் நினா குழந்தைகளுடன் சென்றுவிட்டதால், பரிசோதனை செய்ய முடியவில்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

குடினா, கோல்ட்ஸ்டைன் பற்றி பிபிசியிடம் பேச மறுத்துவிட்டார், மேலும் "அந்த நபருடன்" தொடர்பில் இல்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், தற்போது மாஸ்கோவில் உறவினர்களுடன் வசித்து வருவதாக நினா குடினா தெரிவித்தார்.

மேலும், குடினா தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே கல்வி கற்பிக்க திட்டமிட்டுள்ளார்.

தனது மகள்களுடன் காட்டில் நடப்பதைத்தான் விரும்புவதாகவும், ஆனால் எதிர்காலத்தையும் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். தானும் குழந்தைகளும் புதிய இடங்களுக்குப் பயணம் செய்து புதிய அனுபவங்களை பெற தேவையான புதிய ஆவணங்களை பெறுவதும் எதிர்கால திட்டங்களில் ஒன்று என அவர் பிபிசியிடம் கூறினார்.

கூடுதல் தகவல் : இம்ரான் குரேஷி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு