லெபனானில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் படுகொலை - பின்னணியில் இஸ்ரேலா?
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சலே-அல்-அரூரி கொல்லப்பட்டதாக லெபனான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹெஸ்புலா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இது லெபனான் மீதான தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ளது.
யார் இந்த அரூரி?
அரூரி ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவில் முக்கிய நபராகவும், ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர். அவர் லெபனானில் ஹமாஸ் குழுவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு இணைப்பாக செயல்பட்டார்.
57 வயதான அரூரி, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, நடக்கும் போரில் கொல்லப்பட்ட ஹமாஸின் மிக மூத்த தலைவர் ஆவார்.
இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளின்படி, மேற்குக் கரையில் ஹமாஸின் ராணுவப் பிரிவின் உண்மையான தலைவராக அரூரி கருதப்பட்டார், அங்கு தாக்குதல்களை மேற்பார்வையிட்டார்.
2014-இல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்று கொன்றதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பிற தாக்குதல்களுக்காக இஸ்ரேலிய சிறைகளில் தண்டனை அனுபவித்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன. இரான் மற்றும் ஹெஸ்புலாவுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஹமாஸ் அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறுகிறது.

பட மூலாதாரம், reuters
இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன?
இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகேவ் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என்று தெளிவாக உறுதிப்படுத்தவில்லை.
இது இஸ்ரேலிய அரசின் பொதுவான நிலைப்பாடு தான். ஆனால் அமெரிக்க தொலைக்காட்சி ஊடகமான MSNBC-யிடம் பேசிய அவர், “இத்தாக்குதலை யார் செய்திருந்தாலும், அது லெபனான் அரசின் மீதான தாக்குதல் அல்ல என்பதை தெளிவாகப் புரிகிறது.
இது பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புலா மீது கூட நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இதைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் ஹமாஸ் தலைமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்திருக்கிறார்கள். இதைச் செய்தவர்களுக்கு ஹமாஸ் மீது பகை உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



