'குரங்கு குல்லா' கொள்ளையர்கள்: மதுரை புறநகரை அச்சுறுத்தும் இவர்கள் யார்?

குரங்கு குல்லா கொள்ளையர்கள்
படக்குறிப்பு, மதுரை புறநகரான ஏ.ஆர்.சிட்டியில் கடந்த 10-ம் தேதி பதிவான சிசிடிவி காட்சி
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

மதுரை புறநகர் பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன. நள்ளிரவில் குரங்கு குல்லா அணிந்து திருடும் இவர்கள் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அவர்களின் செயல்பாடுகள், ஒரு காலத்தில் தமிழகத்தை கலக்கிய பவாரியா கொள்ளையர்கள் போன்று இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மதுரை புறநகரில் கோவில் பாப்பாக்குடி, ஏ.ஆர். சிட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர் ஒருவர் வீட்டின் கேட்டில் ஏறி கொள்ளையர்கள் குதித்துள்ளனர். அந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா இருந்ததையடுத்து, அதையும் இந்தக் கொள்ளையர்கள் அடித்து உடைத்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைக்க குரங்கு குல்லா கொள்ளையர்கள் முயன்றபோது, உரிமையாளர்கள் விழித்துக் கொண்டு சத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி, அவர் மீது கற்களையும் வீசினர். இந்த சம்பவம் நடந்த சிலமணிநேரத்துக்குள் அதே பகுதியில் ஒரு மூதாட்டியிடமிருந்து சங்கிலியைப் பறித்துக்கொண்டு, மேலும் 4 வீடுகளில் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினர்.

கையில் பயங்கர ஆயுதங்களுடன் குல்லா அணிந்து, இப்பகுதிகளில் வலம் வருவது பல்வேறு கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ளது. இந்தக் குரங்கு குல்லா கொள்ளையர்கள் குறித்து கொள்ளை முயற்சி நடந்த வீட்டிலிருந்த வழக்கறிஞர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, குரங்கு குல்லா கொள்ளையர்கள் மீது ஐபிசி பிரிவு 457, 380 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?

குரங்கு குல்லா கொள்ளையர்கள் குறித்தும், அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் அலங்காநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் கீதா பிபிசி தமிழிடம் பேசினார்.

“கடந்த வாரத்தில் புறநகர் பகுதியில் ஒரு வழக்கறிஞர் வீட்டில் சிலர் கொள்ளையடிக்க முயன்று தப்பினர், மேலும் சில திருட்டுகளும் நடந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம்.

"கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில், குரங்கு குல்லா மற்றும் கால்சட்டை மட்டும் அணிந்து வெற்று உடலுடன் கையில் ஆயுதங்களுடன் சிலர் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இவர்கள் 3 பேர் இருந்தனர் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்," என்றார்.

காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மேலும், இந்தக் குரங்கு குல்லா கொள்ளையர்களைப் பிடிக்கச் சார்பு ஆய்வாளர் வெற்றிவேல், மற்றும் தனது தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்துவருவதாகவும் தெரிவித்தார்.

'குரங்கு குல்லா' கொள்ளையர்கள் யார்?

இக்கொள்ளையர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், பவாரியா கொள்ளையர்கள் செயல்பாடு போன்று உள்ளதா என்று கேட்டோம்.

அதற்கு, “இவர்களின் செயல்பாடு பவாரியா கொள்ளையர்கள் போல இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம். நாங்கள் நடத்திய விசாரணையில் குரங்கு குல்லா கொள்ளையர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். குறிப்பாக தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, ராம்நாடு, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருக்கலாம்.

"அங்குள்ள அதிகாரிகளிடம் இது குறித்து பேசி வருகிறோம். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடங்களில் ஆதாரங்கள் சேகரித்திருக்கிறோம், கண்காணிப்பு கேமிரா காட்சிகளை சேகரித்துள்ளோம், பாதி்க்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்," என்று தெரிவித்தார்.

குரங்கு குல்லா கொள்ளையர்கள்

கொள்ளையர்களைப் பிடிக்க இரவு ரோந்து

குற்றவாளிகளைப் பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வாளர் கீதா கூறுகையில், “இரு தனிப்படை அமைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம், இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கையை தீவிரமாக்கியுள்ளோம்.

"இந்தக் கொள்ளையர்களைப் பிடித்தபின்புதான் இவர்கள் மீது இதற்கு முன் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இவர்களின் கொள்ளையின் நோக்கம், மிகுந்த ஆபத்தான கொள்ளையர்களா என்பது தெரியவரும். விசாரணை நடந்துவரும் நிலையில் விரிவாக விவரங்களை தெரிவிக்க இயலாது,” எனத் தெரிவித்தார்.

யார் இந்த 'பவாரியா' கொள்ளையர்கள்

கடந்த 1995 முதல் 10 ஆண்டுகள் தமிழகத்தை உலுக்கிய பவாரியா கொள்ளையர்கள் குறித்து ஆய்வு செய்து, பல கட்டுரைகள் எழுதிய மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலீப்பிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.

“தென் மாநிலங்களில் கொடூரக் கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை ஆகியவற்றை செய்து போலீஸிடம் சிக்காமல் தப்பித்தவர்கள்தான் பவாரியா கொள்ளையர்கள்.

"ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் லோடு கொண்டுவருபவர்கள் போல் தமிழகத்துக்கு வந்து, கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களே பவாரியா கொள்ளையர்கள்.

"பவாரியா கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும்போது உடலில் எண்ணெய், சேறு அல்லது கறுப்பு மை பூசிக்கொண்டு, ஆயுதங்களுடன் வருவார்கள். அதேபோன்ற பாணியைத்தான் குரங்கு குல்லா கொள்ளையர்கள் பின்பற்றுவதாக செய்திகள் மூலம் அறிந்தேன்," என்றார்.

பவாரியா கொள்ளையர்களின் பாணி என்ன?

குரங்கு குல்லா கொள்ளையர்கள்
படக்குறிப்பு, அப்துல் முத்தலீப், மூத்த பத்திரிகையாளர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும் பேசிய அவர், "பவாரியா கொள்ளையர்களின் குடும்பத்துப் பெண்கள், முதலில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுச் சென்று தங்கள் குடும்பத்து ஆண்களிடம் தெரிவிப்பார்கள். அவர்கள் இரவில் பயங்கர ஆயுதங்களுடன் சென்று அந்தக் குறிப்பிட்ட வீட்டைத் தாக்கி அங்கிருப்பவர்களை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடிப்பார்கள்," என்றார்.

"பவாரியா கொள்ளையர்கள் 10 பேர் அளவில் கூட்டமாக வந்து ஒருவீட்டை கத்தி, இரும்பு ராடு, நாட்டுத்துப்பாக்கி மூலம் வீட்டைத் தாக்குவார்கள். வீட்டின் உரிமையாளர் கதவை திறக்க மறுத்தால், கதவை உடைத்து உள்ளே செல்வார்கள்.

"வீட்டில் இருப்பவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொலை செய்து, வீட்டைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிவிடுவார்கள். கொள்ளை நடந்த சிலமணிநேரத்துக்குள் அந்த நகருக்குள் வந்த சுவடே தெரியாததுபோல் எங்காவது சென்றுவிடுவார்கள்," என்றார்.

பவாரியா கொள்ளையர்களின் தாக்குதலில் கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சுதர்சனம், சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி தாளமுத்து நடராஜன் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், இதையடுத்துதான், பவாரியா கும்பலைப் பிடிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த 2006ம் ஆண்டு கூடுதல் ஆணையராக இருந்தவரும், முன்னாள் டிஜிபியான ஜாங்கிட் தலைமையில் சிறப்புப்படை அமைக்கப்பட்டது.

பவாரியா கொட்டம் அடங்கியது எப்படி?

முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் தலைமையிலான தமிழகப் போலீஸாரின் தனிப்படை, பல மாதங்கள் வட மாநிலங்களில் தீவிரத் தேடுதல் மற்றும் புலன் விசாரணை நடத்தி, ஆதாரங்களைச் சேகரித்தனர்.

"அதன்பின், 2006ஆம் ஆண்டு பவாரியா கொள்ளையர்களின் தலைவன் சத்யவீர் என்ற புரா உள்ளிட்ட 3 பேரை என்கவுண்ட்டரில் தமிழக போலீஸார், உத்தரப் பிரதேச அதிரடிப்படை உதவியுடன் சுட்டுக்கொன்றனர். 13 பேர் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தின்மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டனர். அதன்பின், கடந்த 15 ஆண்டுளுக்கும் மேல் பவாரியா கொள்ளையர்கள் தமிழகத்தின்பக்கம் திரும்பி பார்க்கவில்லை,” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: