சாகித்ய அகாதெமி விருது பெறும் காலாபாணி நாவலின் கதை என்ன?

பிரசுரிக்கப்பட்டது

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மு. ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய காலாபாணி நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது கன்னடத்திலிருந்து யாத்வேஷம் நாவலை மொழிபெயர்த்த கே. நல்லதம்பிக்கு வழங்கப்பட்டுள்ளது.

"இதற்கு முன்பாக 1801 என ஒரு நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலுக்காக வரலாற்றாசிரியர் ராஜய்யனைப் பார்க்கும்போது, 1801ல் சிவகங்கையில் நடந்ததுதான் விடுதலைக்கான முதல் புரட்சி என்றார். இதுவே என்னுடைய இரண்டாவது நாவலுக்கு தூண்டுகோலாக அமைந்தது. சிறுவயதில் கல்கி, விக்ரமன், சாண்டில்யன் எழுத்துக்கள் பிரபலமாக இருந்தன. அவற்றில் நான் இயல்பாகவே ஈர்க்கப்பட்டேன். அந்த ஈர்ப்புதான் இந்த வரலாற்று நாவல்களை எழுத தூண்டுகோலாக அமைந்தது.

சில புனைவல்லாத நூல்களை எழுதிய பிறகு முதன் முதலாக வடகரை என்ற நாவலை எழுதினேன். இது 600 ஆண்டுகளின் தென் தமிழக வரலாற்றைச் சொல்லும் நூல். இதற்குப் பிறகு இதே திசையில் என் ஆர்வம் நீண்டது" என பிபிசியிடம் தெரிவித்தார் மு. ராஜேந்திரன்.

காலாபாணி நூலின் கதை என்ன?

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் கம்பெனியின் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் தோற்கடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அந்த நிகழ்வுகள்தான் காலா பாணி.

கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடிய சிவகங்கையின் மன்னர் தோற்கடிக்கப்பட்டார். அதையடுத்து சிவகங்கை அரசர் பெரிய உடையணத் தேவர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 72 பேரை கம்பெனி நாடுகடத்தியது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். 1802ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி லெப்டினன்ட் ராக்கெட் தலைமையிலான படை 73 பேரை அட்மிரல் நெல்சன் கப்பலில் ஏற்றியது.  74 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்தது அந்தக் கப்பல். பயணத்தின்போதே 3 பேர் இறந்துவிட்டனர். பினாங்கு கடற்கரையில் 6 நாட்கள் காத்திருக்க வைக்கப்பட்டு, பிறகு இறக்கிவிடப்பட்டனர். இறக்கிவிடப்பட்டவுடனேயே பத்துக்கும் மேற்பட்டோருக்கு மனப் பிறழ்வு ஏற்பட்டது.

அந்தக் கைதிகளை என்ன செய்வதென அங்கிருந்த லெப். கவர்னர் ஜார்ஜ் லெயித்திற்குத் தெரியவில்லை. நாடு கடத்தப்பட்டவர்களில் அரசர் பெரிய உடையணத் தேவர், சின்ன மருதுவின் மகன் துரைசாமி, நான்கு பாளையக்காரர்கள் என முக்கியமானவர்கள் இருந்ததால் அவர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டுமா என கல்கத்தாவில் இருந்த கவர்னருக்கு கடிதம் எழுதிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க உத்தரவிடப்பட்டது. பிறகு பெரிய உடையணத் தேவர் தனிமைப்படுத்தப்பட்டார். பிறகு சுமத்திரா தீவிலிருந்த பென்கோலன் நகருக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்த மால்பரோ கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்த சுகாதாரக் கேட்டினால், சிறைக்கு வந்த நான்கே மாதங்களில் உடையணத் தேவர் இறந்துவிட்டார். அவருக்கு வயது 34.

மருது பாண்டியரின் மகன் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் இறந்துவிட்டதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால், அப்படியில்லை, அவர் பினாங்கிலேயே இறந்துவிட்டார் என்கிறார் மு. ராஜேந்திரன்.

இதுபோன்ற பல சரித்திர நிகழ்வுகளை உள்ளடக்கி எழுதப்பட்ட நாவல்தான் இந்த 'காலா பாணி.'

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர்.  ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் படித்த பிறகு, வரலாற்றுத் துறை மீது ஆர்வம் கொண்டவர்.  

மு. ராஜேந்திரன் இதற்கு முன்பாக சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள், சட்ட வல்லுனர் திருவள்ளுவர்,  வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு, பாதாளி, 1801, யானைகளின் கடைசி தேசம், வெயில் தேசத்தில் வெள்ளையர்கள், செயலே சிறந்த சொல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படிச் சேதிக் குறிப்பு, வந்தவாசிப் போர் - 250, கம்பலை ஆகிய நூல்களை கவிஞர் வெண்ணிலாவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றுள்ளார். காலா பாணி நாவலை அகநி வெளியீடு வெளியிட்டுள்ளது.

11 நாவல்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், காலா பாணி விருதுக்காக ஒரு மனதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தேர்வுக் குழுவில்  ஜி. திலகவதி, கலாப்ரியா, ஆர். வெங்கடேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது கே. நல்லதம்பிக்கு வழங்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் நேமிச்சந்திரா எழுதிய யாத்வேஷம் என்ற நாவலை மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த நூலை எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவிலிருந்து தப்பி பிரிட்டிஷ் இந்தியாவில் தஞ்சமடைந்த யூதக் குடும்பத்தைப் பற்றியது இப்புத்தகம்.

‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்ற தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த என். கல்யாண ராமனுக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: