கத்தார்: சமரச பேச்சுகளை வெற்றிகரமாக முடிக்கும் இந்த நாடு, இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரத்தில் வருந்துவது ஏன்?

கத்தார்

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், வயர் டேவிஸ் & டேவிட் கிரிட்டன்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தராக பங்கு வகிப்பதை மறுபரிசீலனை செய்து வருவதாக கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்யவும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதிலும் எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து கத்தார் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

ஆனால், "அரசியல் ஆதாயங்களுக்காக தோஹா சுரண்டப்பட்டு வருகிறது. துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. குறைவாக மதிப்பிடப்படுகிறது’’ என்று கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் கட்டத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

போர்நிறுத்தத்தை கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியுற்றன. எப்படியிருப்பினும், எந்த ஒரு முன்னேற்றத்தை அடைவதற்கும் ஹமாஸ் உட்பட அனைத்து தரப்புடனும் கத்தார் கொண்டிருக்கும் நெருக்கம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஹமாஸில் 40 பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்ற பணயக் கைதிகளை விடுவிக்கும் ஆறு வார போர்நிறுத்தத்தை மத்தியஸ்த நாடுகள் முன்மொழிந்தனர் - வார இறுதியில், இந்த முன்மொழிவை ஹமாஸ் பகிரங்கமாக நிராகரித்தது.

"போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்குமா" என வெளிப்படையாக கேள்வி எழுப்பியுள்ள கத்தார், மத்தியஸ்த நாடாக செயல்படுவதை மறுமதிப்பீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளது.

கத்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "துரதிர்ஷ்டவசமாக, எங்கள் மத்தியஸ்தம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. 'குறுகிய' அரசியல் ஆதாயங்களுக்காக மத்தியஸ்தம் தவறாக பயன்படுத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார் கத்தார் பிரதமர் ஷேக் முகமது.

கத்தாரின் வெளியுறவு அமைச்சராகவும் செயல்படும் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, ஆதாயம் பெற விரும்பும் அரசியல்வாதிகளால் கத்தாரின் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்படுவதாக கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புதன்கிழமை தோஹாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "துரதிர்ஷ்டவசமாக, எங்கள் மத்தியஸ்தம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. 'குறுகிய' அரசியல் ஆதாயங்களுக்காக மத்தியஸ்தம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால், கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்வதை மறுபரிசீலனை செய்யவுள்ளது. நாங்கள் மத்தியஸ்தத்தை மதிப்பிடுவதற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் இந்த மத்தியஸ்தத்தில் பிற நாடுகள் எவ்வாறு ஈடுபடுகின்றன என்பதையும் மதிப்பிடுவோம்" என்றார்.

அவர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, ஆனால் அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்து சில விமர்சனக் குரல்கள் கத்தாருக்கு எதிராக எழுந்தன. போர்நிறுத்தத்தை கொண்டு வர கத்தார் தரப்பில் ஹமாஸ் மீது போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டின. மேலும், சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த பின்னர், பாலத்தீனிய ஆயுதக் குழு "போர் நிறுத்தத்திற்கு தடையாக" இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காஸாவில் மூண்டுள்ள போர் பிராந்திய மோதலாக விரிவடையக்கூடும் என்ற புதிய அச்சத்தின் விளைவாக, கத்தார் பிரதமர் மோதல் பெரிதாகக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார். சர்வதேச பிரதிநிதிகள் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு போரை நிறுத்துமாறும் அழைப்பு விடுத்தார்.

கத்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரபு அல்-அரம்ஷே பகுதியில் உள்ள இராணுவ இலக்கு ஒன்றின் மீது இரான் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக் குழு தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் லெபனான் பிரதேசத்தில் இருந்து வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு கிராமத்தை நோக்கி ஏவப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் 14 இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்களில் ஆறு பேர் படுகாயமடைந்த தாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதல் குறித்து, இரான் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா வெளியிட்ட தகவலின்படி, அண்மையில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்கள் ஹெஸ்பொலா தளபதிகளையும் மற்ற போராளிகளையும் கொன்றது. அந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக அரபு அல்-அரம்ஷே பகுதியில் உள்ள இராணுவ இலக்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியது.

இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பு போலவே காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹெஸ்பொலா பிரிவு, ஒவ்வொரு நாளும் இஸ்ரேலியப் படைகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

கடந்த அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். மேலும் 253 பேர் பணயக் கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு தான் மோதல் வெடித்தது.

காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஹமாஸை அழிக்கவும் பணயக் கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கையில் காஸாவில் 33,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது 105 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர் - அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் அனைவரும் இஸ்ரேலிய சிறைகளில் இருந்த சுமார் 240 பாலத்தீனிய கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர்.

காஸாவில் போருக்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட நான்கு பேர் உட்பட 133 பணயக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் - அவர்களில் 30 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கத்தார்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஹமாஸ் கைப்பற்றி வைத்துள்ள 133 பணயக்கைதிகளை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய லண்டனில் 133 இருக்கைகளை காலியாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்வு

மொசாட் அமைப்பு ஹமாஸ் பற்றி கூறுவது என்ன?

கடந்த சனிக்கிழமையன்று, ஹமாஸ் இஸ்ரேலுடன் "தீவிரமாக மற்றும் உண்மையாக" பணயக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதே நேரத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை நிராகரித்தது.

மேலும், காஸாவில் இருந்து இஸ்ரேலிய படை முழுவதும் வெளியேற்றப்படுவதற்கும் இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கும் வழிவகுக்கும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அதன் கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேலிய பேச்சுவார்த்தை குழுவை வழி நடத்தும் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு, "காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், மனிதாபிமான ஒப்பந்தத்தையும் பணயக்கைதிகளை விடுவிப்பதையும் விரும்பவில்லை. இரானுடனான பதற்றச் சூழலை ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார். பல அமைப்புகளை ஒருங்கிணைத்து பதற்றத்தை பிராந்தியம் முழுவதும் விரிவாக்க முயற்சிக்கிறார்" என்று தெரிவித்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்கள் அன்று பேசுகையில், "ஹமாஸ் அந்த மனிதாபிமான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் ஏன் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதை உலகிற்கும் பாலத்தீனிய மக்களுக்கும் விளக்க வேண்டும்." என்றார்.

கடந்த வாரம், ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி அமெரிக்க ஊடகத்திடம் பேசுகையில், சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்ய பணயக்கைதிகள் 40 பேர் உயிருடன் இல்லை என்று ஹமாஸ் மத்தியஸ்தர்களிடம் தெரிவித்ததாக கூறினார். இறந்தவர்களில் குழந்தைகள், பெண்கள், ராணுவத்தினர், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், மற்றும் தீவிர மருத்துவ பிரச்சனை இருந்தவர்கள் அடக்கம்.

இதற்கிடையில், ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர், பணயக்கைதிகள் அனைவரையும் கண்டுபிடிக்க "போதுமான நேரமும் பாதுகாப்பும்’’ தேவை. அவற்றை வழங்குவதற்கு போர் நிறுத்தம் அவசியம் என்று கூறினார்.

சர்வதேச சமூகம் "அதன் பொறுப்புகளை ஏற்று இந்த போரை நிறுத்த வேண்டும்" என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது அல் தானி அழைப்பு விடுத்திருக்கிறார்.

காஸாவில் உள்ள பொதுமக்கள் "பணையக்கைதி களாகவும் பட்டினியையும்" எதிர்கொள்கின்றனர், உதவி நடவடிக்கைகள் "அரசியல் அச்சுறுத்தலுக்கான கருவியாக" பயன்படுத்தப்படுகிறது என்று அவர் எச்சரித்தார்.

கத்தார்

பட மூலாதாரம், Israel Defense Forces

படக்குறிப்பு, இஸ்ரேல் துறைமுகத்தில் இருந்து காசாவிற்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் ஐநா அமைப்பின் லாரிகள்

காஸாவில் இப்போது என்ன நிலைமை?

11 லட்சம் மக்கள் - மக்கள் தொகையில் பாதி பேர் - பேரழிவு விளைவிக்கும் பட்டினியை எதிர் கொள்வதாகவும், வடக்கு காஸாவில் பஞ்சம் நெருங்கி வருவதாகவும் கடந்த மாதம் ஐ.நா ஆதரவு ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதில் இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் தடையாக இருப்பதாக ஐ.நா குற்றம்சாட்டியது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலில், "காஸாவில் பஞ்சம் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் கூற்றுக்களை பிரதமர் நிராகரிக்கிறார். இஸ்ரேல் மனிதாபிமான நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்தில் இருந்து உணவு உதவி முதன்முறையாக காஸாவிற்குள் நுழைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது. புதனன்று இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கெரெம் ஷாலோம் வழியாக எட்டு ஐ.நா. உலக உணவுத் திட்டத்திற்கு சொந்தமான வாகனங்கள் மாவைக் கொண்டு சென்றதாக தெரிவித்தது.

ஏப்ரல் 1 ம் தேதி காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு உலக மத்திய சமையலறை உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் முயற்சியாக இஸ்ரேல், கடந்த வாரம் வடக்கு காஸாவுடன் ஒரு புதிய பாதையை திறந்தது.

"பிரதமர் நெதன்யாகு உடனான எனது அழைப்பைத் தொடர்ந்து கடந்த 12 நாட்களில், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களுடன் 3,000 டிரக்குகள் காஸாவிற்குள் நுழைந்தன - முந்தைய வாரத்தை விட உதவி வாகனங்கள் நுழைவது 50% அதிகரிக்கப்பட்டுள்ளது " என்று பைடன் புதன்கிழமை X தளத்தில் பதிவிட்டார்.

எவ்வாறாயினும், காஸாவில் உள்ள மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பான பாலத்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சி (UNRWA) செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், "காஸாவுக்குள் நுழையும் நிவாரணப் பொருட்களின் அளவு அல்லது வடக்கு பகுதிக்கு நிவாரணம் அனுப்பும் அணுகலை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழவில்லை" என்று கூறியது.

UNRWA வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, "பைடன் நெதன்யாகுவுடன் பேசிய மறுநாள்- ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரையில் கெரெம் ஷாலோம் மற்றும் எகிப்திய கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா கிராசிங் வழியாக ஒரு நாளைக்கு சராசரியாக 185 நிவாரண டிரக்குகள் காஸாவிற்குள் நுழைந்தன. தரவுகளின்படி, மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரையிலான ஏழு நாட்களில் தினசரி பயணித்த டிரக்குகளின் சராசரி எண்ணிக்கை 168 ஆக இருந்தது.’’

ஒரு மூத்த ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி செவ்வாயன்று விடுத்த எச்சரிக்கையில், இஸ்ரேலுடனான உதவி விநியோகங்களுக்கான ஒருங்கிணைப்பில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பஞ்சத்தைத் தடுக்க தீவிரம் காட்டப்படவில்லை.

கத்தார்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது.

"நிவாரண வாகனத்தில் மாவு கொண்டு வருவதும் சில ரொட்டிகளை செய்வதையும் விட, பஞ்சம் மிகவும் பெரியது. மிகவும் சிக்கலானதும் கூட. பஞ்சத்தை கட்டுப்படுத்த தண்ணீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவை அடிப்படையாகும்" என்று ஆண்ட்ரியா டி டொமினிகோ குறிப்பிட்டார்.

காஸாவுக்கான உதவி விநியோகத்தை ஒருங்கிணைக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சக பிரிவான கோகாட் கூற்றுபடி, "கெரெம் ஷாலோமின் பாலத்தீனப் பகுதியில் 700 டிரக்குகளில் நிவாரணப் பொருட்களுடன் காத்திருக்கின்றன. நாங்கள் எங்களால் முடிந்த அளவு நிவாரண வாகனங்கள் வருவதை அதிகரித்துள்ளோம். ஐ.நா. சாக்குப்போக்கு சொல்கிறது" என்றார்.

இதனிடையே, புதன்கிழமை காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் அதன் துருப்புக்களும் விமானங்களும் சேர்ந்து "பல பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகவும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்ததாகவும்" அறிவித்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)