பழங்குடி இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 'நீதி'

பழங்குடி இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 'நீதி'
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் மன்னார்க்காட்டில் முக்காளி மற்றும் சிண்டக்கி என்கிற மலைவாழ் கிராமங்கள் உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி மற்றும் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கிராமங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளன.

அதே கிராமத்தில் மது என்கிற 30 வயதான இளைஞர் வசித்து வந்துள்ளார். முதுகா என்கிற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மது மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தையை இழந்த மது தாய் மல்லி மற்றும் சகோதரி சரஸ்வதியுடன் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மது அட்டப்பாடி பகுதிக்கு உட்பட்ட அகலி, முக்காளி போன்ற இடங்களில் சுற்றித்திரிவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

அப்போது சில நேரங்களில் கடைகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் உணவுப் பொருட்களை எடுத்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் மது தான் தொடர் திருட்டுக்கு காரணம் என தீர்மானித்து அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 22.02.2018 அன்று அதே கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் வண்டிக்கடவு தேயிலை தோட்டம் அருகே உள்ள அஜ்முடி வனப்பகுதியில் வைத்து மதுவை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் மது உணவுப் பொருட்களைத் திருடினார் எனக் காவல்துறையை அழைத்து ஒப்படைத்துள்ளனர். மதுவின் உடலில் கடுமையான காயங்கள் இருந்துள்ளன. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே மது சுய நினைவு இழந்து விழுந்துள்ளார்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.மனநலம் குன்றிய பழங்குடி இளைஞர் மதுவின் உயிரிழப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் மீதும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலை வழக்கு மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு 3.000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் எனவும் இருவர் குற்றமற்றவர்கள் எனவும் மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: