கடைசி ஓவரில் தோற்கும் பஞ்சாப் கிங்ஸ்; மீண்டும் வெற்றியைத் தவறவிட்டது எங்கே?

பட மூலாதாரம், SPORTZPICS
பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் கடைசி ஓவர்வரை வெற்றிக்காகப் போராடித் தோற்பது இது 5-ஆவது முறையாகும். வெற்றிக்காக எதிரணியுடன் போராடி கடைசி வரை இழுத்துவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியினர், கடைசி நேரத்தில் கோட்டைவிடுவது தொடர்கதையாகி வருகிறது.
முலான்பூரில் நேற்று நடந்த ஆட்டத்திலும் பந்துவீச்சில் செய்த சில தவறுகளால் பஞ்சாப் அணி வெற்றியை தாரை வார்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 143 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி 6-வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் குஜராத் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 1.055 என்ற அளவில்தான் இருக்கிறது.
தற்போது 8 புள்ளிகளுடன் 3 அணிகள் கடும் போட்டியில் உள்ளன. சிஎஸ்கே, லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. இருப்பினும், இதில் சிஎஸ்கே அணியின் நிகரரன்ரேட் 0.529 என உயர்வாக இருப்பதால் 4-ஆவது இடத்தில் இருக்கிறது. லக்னெள அணி ரன்ரேட் 0.123 என்ற அளவில் நேர்மையாக இருக்கிறது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகரரன்ரேட் அடிப்படையில் மைனஸில் தொடர்ந்து வருவது பின்னடைவாகும்.

பட மூலாதாரம், SPORTZPICS
பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் ஆடி, 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும் பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட் வியப்புக்குரிய வகையில் மிகக் குறைவாக மைனஸ் 0.292 என்ற அளவில்தான் இருக்கிறது. பஞ்சாப் அணிக்குத் தற்போது 2 வெற்றிகள் தேவை, இரு போட்டிகளில் அடுத்தடுத்து ரன்ரேட்டில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாளராக மாறிவிடும்.
தமிழக வீரர்களின் பங்களிப்பு
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள்தான். ரஷித்கான், நூர் அகமது, தமிழக வீரர் சாய் கிஷோர் ஆகிய 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 78 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியை சுருட்டினர்.
முலான்பூர் விக்கெட் மந்தமானது. பந்துகள் இங்கு என்னதான் வேகமாக வீசினாலும் பயன் இருக்காது, ஸ்விங் இருக்காது. அதேசமயம், வேகம் குறைவாக பந்துவீசினால் நினைத்த ஸ்விங்கை, சுழற்பந்துவீச்சில் நல்ல டர்னை எதிர்பார்க்க முடியும்.
இதை குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மூவரும் பயன்படுத்தினர். அதிலும் தமிழக வீரர் சாய் கிஷோர், 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதேபோல தமிழக வீரர் சாய் சுதர்சன்(31) பொறுப்பான பேட்டிங், கடைசி நேரத்தில் ரபாடா ஓவரில் ஷாருக்கான் அடித்த சிக்ஸர்கள் ஆட்டத்தை திருப்பிவிட்டன. இந்த தமிழக வீரர்கள் 3 பேரும் குஜராத் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர்
குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சில போட்டிகளாக ஆபத்பாந்தவனாக வரும் அஷூதோஷ்(3), சஷாங்க் சிங்(9), ஜிதேஷ் சர்மா(13) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகினார்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும்,சக ஆப்கன் வீரர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நடுப்பகுதியில் இவர்கள் 3 பேருந்து வீசிய 12 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த ரன்ரேட்டும் இறுகக்கட்டப்பட்டு 142 ரன்களில் சுருட்டப்பட்டது.
ஆனால், 142 ரன்கள் என்பது டிபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை. இருப்பினும், இதையும் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் டெபெண்ட் செய்ய கடினமாகப் போராடினர். லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் படேல் கடைசி நேரத்தில் 3 விக்கெட்டுகளையும் எடுத்து நம்பிக்கையூட்டினர். இவர்களின் போராட்டத்துக்கு பலன் கிடைத்ததுபோல் ஆட்டமும் ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியின் கரங்களுக்கு மாறியது.
30 பந்துகளில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது, கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஹர்சல் படேல் வீசிய 16 ஓவரில் ஓமர்சாய் ஆட்டமிழக்க குஜராத் அணி தடுமாறியது. 18 பந்துகளில் 25 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆனால், ஹர்பிரித் பிரார் வீசிய 17-வது ஓவரில் திவேட்டியா 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்களும், ரபாடா வீசிய 18-வது ஓவரில் ஷாருக்கான் ஒரு சிக்ஸரும், திவேட்டியா 3 பவுண்டரிகளும் அடிக்க ஒட்டுமொத்த ஆட்டமும் பஞ்சாப் கரங்களில் இருந்து குஜராத் அணிக்கு மாறியது. 12 பந்துகளில் குஜராத் அணி வெற்றிக்கு 5 ரன்கள் என்றநிலை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பந்துகள் குறைவாகவும், வெற்றிக்காகச் சேர்க்க வேண்டிய ரன்கள் அதிகமாகவும் இருந்தன. ஆனால், 2 ஓவர்களில் அனைத்தும் தலைகீழாக மாறியது.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் அணி எங்கு கோட்டைவிட்டது?
15-வது ஓவர்கள் வரை ஆட்டத்தை பஞ்சாப் அணி கட்டுக்கோப்பாக கொண்டு சென்று, குஜராத் அணி பக்கம் சாயாமல் பார்த்துக் கொண்டது. ஹர்பிரித் பிரார், ரபாடா வீசிய இரு ஓவர்கள்தான் ஆட்டத்தைத் திருப்பிவிட்டது. களத்தில் தரமான ஃபினிஷரான ராகுல் திவேட்டியை இருப்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றார்போல், ஹர்ஸ்தீப் சிங், அல்லது சாம் கரன் பந்துவீசியிருக்கலாம். அடுத்தடுத்து இரு ஓவர்களையும் இருவரும் வீசி இருந்து, கடைசி ஓவரை ரபாடாவிடம் கொடுத்திருக்கலாம்.
ஆனால், சுழற்பந்துவீச்சில் சுமாராகச் செயல்பட்ட ஹர்பிரித் பிராரை பயன்படுத்தியதும், ரபாடாவின் அதிவேகப் பந்துவீச்சும் தோல்விக்கு இட்டுச் சென்றன. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ரபாடா கடைசி நேரத்தில் பந்துவீசவில்லை.
இந்த ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தாத சுழற்பந்துவீச்சாளரும் ஹர்பிரித் பிரார் மட்டும்தான். பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான லிவிங்ஸ்டன் கூட 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார், ஆனால், ஸ்பெலிஸிட் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பிரித் பிரார் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
4 ஓவர்கள் வீசிய பிரார் 35 ரன்களை வாரி வழங்கினார், இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால், குஜராத் அணிக்கு மேலும் அழுத்தம் அதிகமாக ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய்ந்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்கான வாய்ப்புகள் 15 ஓவர்கள்வரை இருந்தும், கடைசி நேரத்தில் யாரை எவ்வாறு பயன்படுத்துவது, சூழலுக்கு ஏற்ப, களத்தில் இருக்கும் பேட்டர்களைப் பார்த்து எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது எனும் முடிவை சரியாக எடுக்க முடியாமல்தான் பஞ்சாப் அணி தோற்றது.
பேட்டிங்கைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங்(35), சாம் கரன்(20) இருவரும் 52 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்களில் ஒருவர்கூட பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
63 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த பஞ்சாப் அணி, அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேபோல கடைசியில் 139 ரன்கள் முதல் 142 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி பறிகொடுத்தது.
பஞ்சாப் அணியில் பேட்டர்கள் இருந்தும் நடுவரிசையில் அஷுதோஷ், சஷாங்சிங் ஜொலிக்காததே ஸ்கோர் பெரியாக உயராததற்கு காரணமாகும். ஜிதேஷ் சர்மா இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்பதால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவது மிகக்கடினமாகிவிட்டது.
பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண் காயத்தில் இருந்துமுழுமையாக குணம் அடையாததால், கேப்டன் பொறுப்பையும், தொடக்க ஆட்டக்காரர் நிலையிலும், பந்துவீச்சாளராகவும் இருக்கவேண்டிய அழுத்தத்துக்கு சாம் கரன் தள்ளப்பட்டார்.
கேப்டன் பொறுப்போடு பந்துவீச்சாளர் பணியை கவனிப்பதும் கடினமானது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி புதிய பந்தை சந்திப்பது மிகக் கடினமானது, அனைத்தையும் சாம் கரன் தனி ஒருவனாகக் கவனித்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு கை கொடுத்திருந்து, கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருந்தால் டிபெண்ட் செய்ய ஏதுவாக இருந்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
கடைசி நேரத் தோல்வி ஏன்?
பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் “ நாங்கள் இன்னும் 20 ரன்கள்வரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்டத்தை இழுத்தோம், எங்கள் வீரர்களின் போராட்ட குணம் அற்புதமாக இருந்தது. மீண்டும் தோல்வியைச் சந்திக்கமாட்டோம் என நினைத்தேன். சாய் கிஷோர் சிறப்பாகப் பந்துவீசினார், இவர்போல தரமான பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் உள்ளனர். டிபெண்ட் செய்யும் அளவுக்கு போதுமான ஸ்கோர் வந்துவிடும் என நினைத்தேன். ஆனால், வரவில்லை. 160 முதல் 165 வரை நாங்கள் சேர்த்திருந்தால், குஜராத் அணி வெற்றியை தடுத்திருப்போம், ஆட்டத்தை கடினமாக மாற்றி இருப்போம். மொத்தமாக நாங்கள் எங்கள் விக்கெட்டை இழந்தது தவறு. பல போட்டிகளில் நாங்கள் ஏன் கடைசி நேரத்தில் தோல்வி அடைகிறோம் என்பது ஆலோசிக்கப்பட வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.
ஃபினிஷர் பணியை கச்சிதமாகச் செய்யும் திவேட்டியா
ராகுல் திவேட்டியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்ததில் இருந்து பல போட்டிகளில் ஃபினிஷிங் பணி சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளார். அந்தப்பணி குஜராத் அணிக்கு வந்தபின்பும் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் 16 ஓவர்கள்வரை வெற்றி பஞ்சாப் கிங்ஸ் பக்கமே இருந்தது. கணினியின் கணிப்பில் குஜராத் வெற்றி சதவீதம் 80 லிருந்து 50ஆகக் குறைந்தது.
ராகுல் திவேட்டியா களமிறங்கியபின் ஆட்டம் அனைத்தும் தலைகீழாக மாறியது. ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. அதிலும் பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தவே குஜராத் அணி தடுமாறியது.
எந்தப் பந்துவீச்சாளரை குறிவைப்பது என காத்திருந்த திவேட்டியாவுக்கு ஹர்பிரித் ஓவர் கிடைத்தது. அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தும், ரபாடா வீசிய 18-வது ஓவரில் திவேட்டியா 3 பவுண்டரிகள், ஷாருக்கான ஒரு சிக்ஸர் அடிக்கவே குஜராத் அணி பெரிய சிக்கலில் இருந்து மீண்டது.
மற்றவகையில் குறைந்த ரன்கள் இலக்கை துரத்தும் பணியில் குஜராத் பேட்டர்களும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன் கில் (35) தமிழக வீரர் சாய் சுதர்சன்(31), திவேட்டியா(36 நாட்அவுட்) இவர்கள் 3 பேரும் அடித்த ஸ்கோர்தான் ஓரளவுக்கு பெரிதானது. மற்ற வகையில் மில்லர்(4), ஓமர்சாய்(13), சஹா(13), ஷாருக்கான்(8), ரஷித் கான்(3) என சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
குஜராத் அணியில் எந்த பேட்டர்களும் 50 ரன்கள்கூட பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. 66 ரன்கள்வரை ஒரு விக்கெட் இழந்திருந்த குஜராத் அணி அடுத்த 31 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



























