சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்க வந்து பறிபோன உயிர்கள் - என்ன நடந்தது? (காணொளி)

சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்க வந்து பறிபோன உயிர்கள் - என்ன நடந்தது? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதியன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர்.

விமானக் காட்சி முடிந்த பிறகு, கடற்கரையில் கூடியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று வெயிலின் தாக்கமும் வழக்கத்தைவிட அதிகமாகவே அதாவது, 34.3 முதல் 35 டிகிரி அளவுக்கு இருந்தது. இது இயல்பான அளவைவிட 0.8 முதல் 1.5 டிகிரி அளவுக்கு அதிகம் என சென்னை வானிலை ஆய்வுமையத்தின் வெப்பநிலை அறிக்கை குறிப்பிடுகிறது.

நெரிசல், வெயில், குடிக்க குடிநீர் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமம் ஆகியவற்றால், விமானக் காட்சியைப் பார்க்க வந்தவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இருநூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கிவிழுந்தனர். இவர்களில் 90க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்.

விமான சாகச நிகழ்ச்சியை ஒட்டி மெரீனா கடற்கரை, அதனை ஒட்டிய சாலைகள், ரயில் நிலையங்களில் ஏற்பட்ட நெரிசல் குறித்து நேற்று விளக்கமளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்திய விமானப் படை கேட்டுக்கொண்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்துதந்ததாக குறிப்பிட்டார். ஆனால், மரணங்கள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி துவங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் உயிரிழப்புகள் குறித்து அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்த நிலையில், திங்கட்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், மரணங்களை உறுதிசெய்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் விமானக் காட்சிக்கு லட்சக்கணக்கானவர்கள் வந்து குவிந்த நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை. வைக்கப்பட்டிருந்த பல தொட்டிகளில் ஒரே ஒரு குழாய் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால், அதில் நீரைப் பிடிக்க பார்வையாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது.

மெரீனா கடற்கரையில் கடை வைத்திருந்தவர்கள் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தனர் என்றாலும் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லையென்பதால், அவர்களிடம் இருந்த தண்ணீர், குளிர் பானங்கள் போன்றவையும் ஒன்றிரண்டு மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்தன. இதனால், பலர் குடிநீருக்காக அலைபாய்ந்தனர்.

"எங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்து, வெளியில் போக, வர அனுமதித்திருந்தால் தண்ணீர் தீரத்தீர எடுத்துவந்திருப்போம்" என அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்தனர்.

விமான சாகசத்தை ஒட்டி லட்சக்கணக்கானோர் கடற்கரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும்கூட, சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடத்தில் இயங்கிய பறக்கும் ரயில் சேவை, இந்தக் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இயக்கப்படாதது பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

மெரீனாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை, வாலஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட சாலைகளில் விமான சாகசம் முடிந்து பல மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் போக்கு வரத்து நெரிசலில் பல ஆம்புலன்சுகளும் சிக்கிக்கொண்டன.

மேலும் விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)