You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளதா?
தமிழ்நாட்டில் விற்கப்படும் பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கலாம் என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அச்சம் கொள்கிறது.
கடந்த வாரம் கர்நாடக மாநிலத்தில் பானிபூரி, கோபி மஞ்சுரியன் உள்ளிட்ட துரித உணவுகளின் மாதிரிகளை அம்மாநில சுகாதாரத்துறை பரிசோதித்தபோது, அவற்றில் 22 சதவீத மாதிரிகள் பாதுகாப்பற்றவை என்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடகா போன்று தமிழ்நாட்டிலும் பலரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக பானிபூரி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை மாநிலம் முழுவதும் விற்கப்படும் பானிபூரியின் தரத்தைச் சோதித்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூரியுடன் வழங்கப்படும் புளிப்பான பானி பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, புளி கரைசலுடன் சேர்த்து அந்த பானியை தயாரிக்க வேண்டும். ஆனால் அதில் பச்சை நிறத்தைக் கூடுதலாக்கிக் காட்டுவதற்காக, ‘ஆப்பிள் கிரீன்’ எனும் நிறமி சில இடங்களில் சேர்க்கப்படுவதாகக் கூறுகிறார் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார். “கால் லிட்டர் நீரில் சிறிதளவு கலந்தாலே மிகப் பளிச்சென பச்சை நிறம் கிடைக்கும்” என அவர் எச்சரிக்கிறார்.
பானிபூரியில் வழங்கப்படும் சிறிய பூரிகள் மொத்த வியாபாரியிடம் இருந்து வாங்கப்படுகின்றன. வெகு சில கடைகளில் மட்டுமே அவை புதிதாக தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன.
“அந்த பூரிகள் வெகு நாட்கள் கெடாமல், சட்டென உடையும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், பளிச்சென மஞ்சள் நிறத்தில் இருப்பதற்காகவும் சன்சட் யெல்லோ என்ற நிறமி பயன்படுத்தப்படுகிறது. இதில் வழங்கப்படும் மசாலாவில் ஆரஞ்சு போன்ற நிறத்தை வழங்க ‘டார்ட்ரசைன்’ என்ற நிறமி பயன்படுத்தப்படுகிறது” என்கிறார் சதீஷ்குமார்.
இதுதவிர, புளியை இரவெல்லாம் ஊற வைத்து புளி கரைசலை தயாரிப்பதற்குப் பதிலாக, உடனடி புளிப்புத்தன்மைக்காக சாப்பிடத் தகுதியற்ற சில உப்பு வகைகளும் சேர்க்கப்படுகின்றன.
ஆப்பிள் கிரீன் டை, துணிகளுக்கும் உலோகங்களுக்கும் பச்சை நிறம் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. சோப், ஷவர் ஜெல் போன்ற குளியலுக்குத் தேவைப்படும் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
சண்செட் யெல்லோ குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்பு துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வேதிப்பொருட்களை நெடுநாள் தொடர்ந்து உட்கொண்டால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கக்கூடும். உடலிலுள்ள சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் எண்ணிக்கை குறையலாம், கொழுப்புச் சத்து அதிகரிக்கலாம். கர்பிணிப் பெண்கள் உட்கொண்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் நரம்பு வளர்ச்சி நோய்கள் ஏற்படலாம். இந்த வேதிப்பொருட்கள் மரபணுப் பிறழ்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால், மிக அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய் உண்டாக்கவும் வாய்ப்புண்டு என எச்சரிக்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)