மெஸ்ஸிக்கு பெனால்ட்டி வாய்ப்பளித்த டெம்பாலே இணையத்தில் தூற்றப்பட்டது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களின் கன்னங்கள் நிச்சயம் கண்ணீரால் நனைந்திருக்கும். அவ்வளவு சிறப்பாக தொடங்கிவிட்டு கோப்பையோடு முடிக்காவிட்டால் அர்ஜென்டினாவுக்கு அதைவிட சோகம் வேறு ஏதும் இல்லை. ஆனால் அப்படி நடக்கவிடவில்லை மெஸ்ஸியின் படை.

என்ன ஒரு இறுதிப்போட்டி என காண்போரை ஆச்சரியக் கடலில் மூழகடித்துவிட்டது நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்தின் இறுதி யுத்தம். 3 - 3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்த ஆட்டத்தை 4 - 2 கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை உச்சி முகர்ந்திருக்கிறது அர்ஜென்டினா.

தனது கடைசி உலகக்கோப்பை தொடருக்கு 'உலகக்கோப்பை'யுடன் முடிவுரை எழுதியிருக்கிறார் நட்சத்திர நாயகன் மெஸ்ஸி.

மெஸ்ஸிக்கு பெனால்டி வாய்ப்பளித்த பிரான்ஸ் வீரர்

டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே செய்த மிகப்பெரிய தவறில் இருந்துதான் அர்ஜென்டினாவின் கை ஓங்கத் தொடங்கியது. 23வது நிமிடத்தில் டெம்பாலேவின் தவறால் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது.

அதை அற்புதமாக கோலாக மாற்றினார் மெஸ்ஸி. அர்ஜெண்டினா ஒரு கோல் முன்னிலை வகித்தபோதும் பிரான்ஸிடம் பெரிய எதிர்வினை ஒன்றும் தென்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பிரான்ஸ் மேலாளர் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே தவறிழைத்த டெல்பாலேவையும் கிரைவுடையும் வெளியேற்றி மாற்று வீரர்களை களத்திற்குள் அனுப்பினார்.

சமூக ஊடகங்களில் தூற்றப்பட்ட டெம்பாலே யார்?

80வது நிமிடம் வரை பிரான்ஸ் 2 கோல்கள் பின் தங்கியிருந்தது. ஏறத்தாழ அர்ஜென்டினாவின் வெற்றி உறுதி என்று நம்பிய ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடத் துவங்கிவிட்டனர். அதே சமயம், பிரான்ஸ் ரசிகர்கள் டெம்பாலேவை கடுமையாக விமர்சித்தனர்.

25 வயதான டெம்பாலே மெஸ்ஸியுடன் இணைந்து பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார். தற்போதும் அவர் அந்த அணிக்காக விங்கராக செயல்பட்டு வருகிறார். மெஸ்ஸி பல முறை தனக்கு நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் என டெம்பாலேவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் டெம்பாலே மெஸ்ஸி இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பிரான்ஸ் ரசிகர்கள் கடுமையாக அவரை சாடினர்.

அடுத்த GOAT எம்பாப்வேவா?

முடியாது என்பதை முடித்துக் காட்டுவதில் கில்லியாகவே செயல்பட்டிருக்கிறார் எம்பாப்வே. 2 நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை பதிவு செய்து அர்ஜெண்டினாவுக்கு மெகா ஷாக் கொடுத்த எம்பாப்வே அத்தோடு நில்லாது கூடுதல் நேரத்தில் 1 கோல், பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோல் என இறுதி ஆட்டத்தில் மொத்தம் 4 கோல்களை அடித்து ஆச்சரியப்படுத்தினார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம் கோல்டன் பூட் விருதையும் தட்டிச் சென்றார். பிரான்ஸ் தோல்வியைத் தழுவியிருந்தாலும் எம்பாப்வேவின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வரலாறு படைத்து விடைபெறுகிறார் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்தில் இறுதிப்போட்டியே எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என மெஸ்ஸி தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வரலாற்று வெற்றி அவரது ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைத்திருக்கும்.

பெனால்டி ஷூட் அவுட் உள்பட இன்றைய ஆட்டத்தில் 3 கோல்களை அடித்து அர்ஜென்டினாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய பெருமை மெஸ்ஸியை சாரும். இன்னும் எத்தனை உலகக் கோப்பை தொடர்கள் வந்தாலும் பிரான்ஸ் - அர்ஜெண்டினா; மெஸ்ஸி - எம்பாப்வே இடையிலான இந்த இறுதியுத்தம் கால்பந்து வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: