You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோர விபத்தில் உயிர் பிழைத்து ஆம்புலன்சுக்கு நடந்தே சென்ற இவர் யார்? என்ன சொன்னார்?
242 பயணிகளுடன் ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்த ஒரே நபர் இவர். காயங்களுடன் சம்பவ இடத்தில் இருந்து அவர் நடந்து செல்லும் காட்சி இது.
விமானத்தில் 11 A இருக்கையில் இருந்த ஒருவர் உயிர்பிழைத்ததாக ஆமதாபாத் காவல் ஆணையர் கூறியிருந்தார். அதிகாரிகள் பட்டியலை பார்த்ததில் அந்த நபர் விஷ்வாஷ்குமார் ரமேஷ் என்பதும், அவர் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய ஊடகங்கள் மருத்துவமனையில் உள்ள விஸ்வாசிடம் பேசியுள்ளன. அந்த நபர் தனது போர்டிங் பாஸ் மற்றும் இருக்கை எண்ணை வழங்கியுள்ளார்.
விமானம் புறப்பட்ட முப்பது நொடிகளிலேயே திடீரென ஒரு பெரும் சத்தம் கேட்டதாகவும், விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
ரமேஷின் சகோதரர் நயன் குமார் ரமேஷ், பிபிசியிடம் பேசுகையில், "தான் எப்படி உயிர் பிழைத்தோம் என்று விஸ்வாஸ் குமாருக்கே தெரியவில்லை" என்று கூறினார்.
நயன் மேலும் பேசும் போது "அவர் [விஸ்வாஸ் குமார் ரமேஷ்] நன்றாக இருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார், ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த தனது மற்றொரு சகோதரர் அஜயைப் பற்றி அவர் கவலைப்பட்டார்.
"என்ன நடந்தது என்று கேள்விப்பட்டவுடன் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தோம். வாயடைத்துப் போனேன்," என்று அவர் கூறினார்.
"அவர் [விஸ்வாஸ் குமார் ரமேஷ்] எப்படி உயிர் பிழைத்தார், எப்படி விமானத்திலிருந்து வெளியேறினார் என்று தெரியவில்லை. அவர் எங்களை அழைத்தபோது, 'அஜயைக் கண்டுபிடி, அஜயைக் கண்டுபிடி' என்பது போல, என் மற்ற சகோதரனைப் பற்றி அவர் அதிக கவலைப்பட்டார்."
ரமேஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தவல் கமேட்டி, "அவரது உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தன. ஆனால் அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிகிறது" என்று கூறினார்.
இந்தியாவில் பிறந்து 2003-ஆம் ஆண்டில் பிரிட்டனில் குடியேறிவிட்ட தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் ரமேஷூக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.
லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு கிளம்பிச் சென்ற விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் மருத்துவர்கள் தங்குமிடம் ஒன்றின் மீது மோதியது. அந்த விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரை (விஸ்வாஸ் குமார் ரமேஷ்) தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது மோதியதைத் தொடர்ந்து, சுமார் 50 முதல் 60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) தெரிவித்துள்ளது.
ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், குறைந்தது இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் FAIMA சங்கம் கூறுகிறது.
அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருக்கும் பூனம் படேல், தனது மைத்துனி லண்டன் செல்லும் விமானத்தில் இருந்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார்.
"ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
விமானம் விபத்துக்குள்ளானபோது, தனது மகன் மதிய உணவு இடைவேளைக்காக மருத்துவர்களின் விடுதிக்குச் சென்றிருந்ததாக ரமிலா கூறுகிறார்.
அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் ஆதரவளிப்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது.
முழுமையான செய்தியைத் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு