இஸ்ரேல் - பாலத்தீனம்: “இந்த அளவுக்கு தாக்குதல் இருக்கும் என்று நினைக்கவில்லை” - இந்தியர் தரும் தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல் அங்குள்ள நிலைமையை முற்றிலும் மாற்றியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை அனைத்தும் அமைதியாகவும் இயல்பாகவும் சென்றுகொண்டிருந்தது.
ஹமாஸ் தாக்குதலை அடுத்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலில் பணிபுரியும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பள்ளிகொண்ட கிஷோர், இஸ்ரேலின் தற்போதைய நிலவரத்தை பிபிசியுடனான வீடியோ உரையாடலில் விளக்கினார்.
இந்த விவரங்கள் அவரது வார்த்தையிலேயே கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
"நான் ஏழு வருடங்களாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் வசித்து வருகிறேன். சனிக்கிழமை காலை ஆறரை மணியிலிருந்து ராக்கெட் தாக்குதல்கள் தொடங்கின. சரியாக ஆறரை மணிக்கு ராக்கெட் தாக்குதல் நடந்தது. அப்போது சைரன் ஒலித்தது."

"அதற்கு பின்னர் சைரன் ஒலிக்கு பதிலாக ராக்கெட் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.
20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் வீசப்பட்டது பின்னர் தெரிய வந்தது.
வெள்ளிக்கிழமை வரை எங்கள் வாழ்க்கை மிகவும் இயல்பாக இருந்தது. கவலையோ அச்சமோ இல்லை. நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் சனிக்கிழமை ராக்கெட் தாக்குதல்களின் சத்தம் கேட்டது.
முதலில் இதனை சாதாரணமான தாக்குதல் என்றே நினைத்தோம். ஏனென்றால் இந்த ஏழு வருடங்களில் பல ராக்கெட் தாக்குதல்களை பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அவை அயர்ன் டோம் எனப்படும் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால், அதை செய்திகளில் பார்த்து தெரிந்துகொள்வோம்.
ஆனால், சனிக்கிழமை நடந்தது அதுபோன்ற தாக்குதல் அல்ல. ராக்கெட்டுகள் தொடர்ந்து வந்தன. இங்கு வெடிகுண்டு வீச்சில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான அறைகள் உள்ளன. அதன் உள்ளே நாங்கள் சென்றுவிட்டோம். ஒவ்வொரு முறை சைரன் ஒலிக்கும்போதெல்லாம் அந்த அறைக்குள் சென்றுவிடுவோம் ."

பட மூலாதாரம், Getty Images
'அவசர நிலை பிரகடனம்'
"சனிக்கிழமை காலை 8 அல்லது 9 மணியளவில் இஸ்ரேல் பிரதமர் அவசர நிலையை அறிவித்தார். என்று கூறினார். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை யாரும், 10 பேர் கூட வெளியில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டன.
இங்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைதான் விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை வழக்கமான நாள்தான். நான் அன்றைய தினம் வேலைக்கு செல்லவில்லை.
ஹமாஸ் செய்த அட்டூழியங்களைப் பற்றி அறிந்த பிறகு, நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை உணர்ந்தேன். ஞாயிற்றுக்கிழமையும் சைரன்கள் ஒலித்ததால் பதுங்கு குழிகளுக்குள் சென்றோம். "

பட மூலாதாரம், Getty Images
'நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்'
"இங்கு தெலுங்கானாவை சேர்ந்த 600 பேர் வரை இருப்பார்கள். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறோம்.
நான் நலமாக இருக்கிறேன் என்பதை என் குடும்பத்தினரிடம் கூற விரும்புகிறேன். பயப்பட வேண்டாம்.
தெலுங்கு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எங்களிடம் ஒரு வாட்ஸ்அப் குழு உள்ளது. இஸ்ரேல் தெலுங்கானா சங்கம் உள்ளது. அந்தக் குழுவில் நாங்கள் ஒருவருக்கொருவர் நிலைமையைப் பற்றி பகிர்ந்து கொள்கிறோம்.
இந்திய தூதரகமும் எங்களுடன் தொடர்பில் உள்ளது. நிலைமை குறித்து அவர்கள் அவ்வப்போது எங்களை மொபைலில் அழைத்து தெரியப்படுத்துகின்றனர்.
ஆனால், வெளியில் இயல்பாக இல்லை என்பதுதான் உண்மை. சாலையில் ஆட்கள் யாரும் இல்லை.
மருந்து கடைகளையும், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே உள்ளன. வேறு கடைகள் திறக்கப்படவில்லை. இருந்தபோதும் எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் இப்போதைக்கு இங்கிருந்து வர விரும்பவில்லை. சூழல் சீராகும் என்று நம்புகிறோம்."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












