பிகார் தேர்தல் முடிவுகள்: மோதி, ராகுல் காந்தி, நிதிஷ் குமார் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சமீபத்திய நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 168க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்ஜேடி -காங்கிரஸ் 'மகா' கூட்டணி 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதை அக்கூட்டணியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோதி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மோதி கூறியது என்ன?

பிகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, மாலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வருகை தந்தார் பிரதமர் மோதி. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்தனர்.

அப்போது பேசிய மோதி, "பிகார் மக்கள் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டனர். பிகார் மக்களிடம் எனக்கு மகத்தான வெற்றியை வழங்குமாறு நான் கேட்டுக் கொண்டேன், மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர்." என்று கூறினார்.

"தேசிய ஜனநாயக கூட்டணியினர் மக்களின் ஊழியர்கள். எங்கள் கடின உழைப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறோம். மக்களின் இதயங்களை நாங்கள் திருடிவிட்டோம். அதனால்தான் பிகார் மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளது." என்றும் அவர் கூறினார்.

பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்ட மோதி, "நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் நலனுக்கான உணர்வு வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது." என தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, "பிகார் தேர்தல் முடிவுகள் பிரதமரின் அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பு. பிகார் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நன்றி" என கூறினார்.

'இந்தியாவின் மனநிலையை பிகார் மக்கள் பிரதிபலித்துள்ளனர்'

மத்திய உள்துறை அமித் ஷா, "பிகார் மக்களுக்கு நன்றி. நீங்கள் எந்த நம்பிக்கையுடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்தத் தீர்ப்பை வழங்கினீர்களோ, அதைக் காப்பாற்றும் வகையில் பிரதமர் மோதி தலைமையிலான என்டிஏ கூட்டணி அரசாங்கம், இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"பிகார் மக்களின் ஒவ்வொரு வாக்கும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளங்களுடன் விளையாடும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிரான மோதி அரசாங்கத்தின் கொள்கையின் மீதான நம்பிக்கையின் அடையாளமாகும். வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்." என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

"வாக்காளர் பட்டியலை முறைப்படுத்துவது அவசியம், அதற்கு எதிரான அரசியலுக்கு இடமில்லை என்ற முழு நாட்டின் மனநிலையையும் பிகார் மக்கள் பிரதிபலித்துள்ளனர். அதனால்தான், ராகுல் காந்தியின் தலைமையில், காங்கிரஸ் கட்சி இன்று பிகாரில் இத்தகைய நிலையை எட்டியுள்ளது." என்றும் அவர் கூறினார்.

நிதிஷ் குமார் கூறியது என்ன?

நிதிஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பிரதமர் மோதி மற்றும் பிற கூட்டணி தலைவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"2025 பிகார் சட்டமன்றத் தேர்தலில், மாநில மக்கள் எங்களுக்கு அமோக பெரும்பான்மையை வழங்குவதன் மூலம் எங்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக, மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

"அனைவரின் ஆதரவுடன், பிகார் மேலும் முன்னேறி நாட்டின் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும்." என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகா கூட்டணி கூறுவது என்ன?

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

''மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பிகார் மாநில லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

''தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது, நாம் வெற்றிப் பெற முடியாத இந்தத் தேர்தல், தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடைபெற்றது.''

"இது, அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் இந்த தேர்தல் முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவரும் மகா கூட்டணியின் துணைத் முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சாஹ்னி, "பெண் வாக்காளர்களை தவறாக வழிநடத்தி, சட்டவிரோதமாக அவர்களை கவர்ந்திழுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக" கூறினார்.

"இந்தத் தீர்ப்பை இப்போதைக்கு ஏற்றுக்கொள்கிறோம், வெற்றி பெற்றவர்களை நான் வாழ்த்துகிறேன். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாக்குகள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக விழுந்துள்ளன, அதனால்தான் அவர்கள் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுகிறார்கள்."

"மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, நாங்கள் இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். வரும் காலங்களில், தோல்விக்கான காரணம் என்ன என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்." என்று அவர் தெரிவித்தார்.

வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

"பிகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக விழுமியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பிகார் மக்கள் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோதி, அமித் ஷா மற்றும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர், "பிகார் மக்களின் இந்த முடிவு பிகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறேன்." எனக் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு