ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போட்டியில் இருந்து விலகுகிறதா ஒபிஎஸ் அணி?

பட மூலாதாரம், AIADMK OFFICIAL FACEBOOK PAGE
ஈரோடு கிழக்குத் தொகுதியில், அதிமுக சார்பில், இடைத்தேர்தல் வேட்பாளராக தென்னரசு என்பவரை ஆதரிப்பதாகக் கூறும் விண்ணப்பம் ஒன்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பாக எட்டப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் என இரண்டு அணிகளில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை நிரப்பி நாளை(பிப்ரவரி5) மாலை 7 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அதிமுக சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து ஒரு நல்ல முடிவு இன்று மாலை வெளியாகும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், தீர்ப்பு வருவதற்கு முன்னதாக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வந்துவிட்டதால், இடைத்தேர்தல் வேட்பாளரைப் பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, அதிமுகவின் இரண்டு அணிகளில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் ஒரு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில், இபிஎஸ் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தென்னரசுவின் பெயர் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. ஓபிஎஸ் சார்பில் முடிவுசெய்யப்பட்ட செந்தில் முருகனின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட இரண்டு அணிகள் சார்பாகவும் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முதலில் இரண்டு அணிகளும் பாஜகதான் வேட்பாளர் முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால் பாஜக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்பதால், இருவரும் தங்களது சார்பாக வேட்பாளரை அறிவித்தனர். ஓபிஎஸ் மட்டும், பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்துவதாக முடிவு செய்தால், தான் அறிவித்த வேட்பாளரை பின்வாங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
''கூட்டணி தர்மத்திற்காக பாஜக போட்டியிடவில்லை''
இரண்டு நாட்களுக்கு முன்னர், டெல்லியில் தனது கட்சித் தலைமையைச் சந்தித்த பிறகு முடிவை தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லி பயணத்தில் இருந்து திரும்பி வந்ததும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரண்டு தலைவர்களையும் நேற்று சந்தித்தார். பாஜகவின் முடிவைப் பற்றி இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, அதிமுக ஒற்றை வேட்பாளரை நிறுத்துவதைத்தான் பாஜக விரும்புகிறது என்றும் பாஜக சார்பாக தனியாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படமாட்டார் என்றும் தெரிவித்தார்.
''கூட்டணி தர்மத்தின்படி, அதிமுக தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவேண்டும். அதிமுக சார்பாக ஒரு வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தினால்தான் வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என்பதை இரண்டு தலைவர்களிடமும் தெரிவித்தோம்.
நாங்கள் ஒரு தேசிய கட்சி என்பதால், அதிமுகவில் உள்ள உள்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, பலமான வேட்பாளராக, மக்களுக்குப் பரிச்சயமான வேட்பாளரை நிறுத்தினால்தான் சரியாக இருக்கும் என்பது எங்கள் கட்சியின் முடிவு,'' என பாஜகவின் முடிவு குறித்து அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக ஏன் ஈரோடு கிழக்கு தொகுதியில் தனியாகப் போட்டியிடவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பாஜக தனது சொந்த பலத்தில் வளரவேண்டும் என்றும் அதிமுகவில் உள்ள உள்கட்சி பிரச்னை காரணமாக அந்தக் கட்சியில் நிலவும் பலவீனத்தைக் கொண்டு பாஜக வளரவிரும்பவில்லை என்றார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான போட்டியாளரை நிறுத்துவதுதான் தற்போது சரியான முடிவாக இருக்கும் என்பதால் பாஜக தனியாகப் போட்டியிடவில்லை என்றார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்தான் தங்களுக்கான தேர்தல் என்றும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலை கூட்டணிக் கட்சியாக இருந்து போட்டியிடுவதுதான் சரி என்று கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இபிஎஸ் அறிவித்துள்ள வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்று ஓபிஎஸ்சிடம் கேட்டபோது அவர் சில நிபந்தனைகளை வைத்தார் என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து இன்று மாலை நல்ல முடிவு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக தலைவர்கள் அதிமுகவின் தலைமை பற்றி முடிவு செய்வதாக, பலவிதமான கருத்துகளை அதிமுக தலைவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுவது அதற்கு பாஜக தலைவர்கள் விமர்சித்து பதில் அளிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதிமுக மற்றும் பாஜகவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள், சமூக ஊடகங்களில் கட்சியின் முடிவுகளைத் தெரிந்துகொள்ளாமல் பதிவிடும் செய்திகள் தனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
ஓபிஎஸ் அணியினர் சொல்வது என்ன?
அதிமுக தலைமை தொடர்பான வழக்கில், ஈரோடு தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒற்றுமையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் அணியினர் கருதுகின்றனர்.
இபிஎஸ் நிறுத்தியுள்ள வேட்பாளரின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ள விண்ணப்பம் ஒன்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், விண்ணப்பத்தில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளரான, செய்தி முருகன் பெயர் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேட்டபோது, அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம், அந்த விண்ணப்பம் தங்கள் அணியினருக்குக் கிடைக்கவில்லை என்றார்.
''இதுவரை எங்களுக்கு அந்த விண்ணப்பம் கிடைக்கவில்லை. தற்போது வரை பொதுக்குழு நிறுத்தும் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கவில்லை. வேட்பாளர் எந்த அணியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை என்றும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்பதும் தான் எங்கள் எண்ணம்,'' என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் அளித்துள்ள அறிக்கை ஒன்றை வாசித்த வைத்தியலிங்கம், ''இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை. பொது வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒற்றுமையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறப் பாடுபடுவோம்,'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























