கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் குறித்த குற்றச்சாட்டு: ஆளுநர் ரவிக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப. உதயகுமார்

கூடங்குளம்
படக்குறிப்பு, சுப. உதயகுமார்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது தொடர்பாக அந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னையில் ஏப்ரல் ஆறாம் தேதியன்று இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். அப்போது, “தென் தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டத்துக்கான வேலையைத் தொடங்கும்போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்ற தாக்கம், அணு உலை வெடிக்கலாம், மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி, பட்டினியோடு போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களின் பின்னால் இருப்பவர்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது” எனக் கூறியிருந்தார்.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், "கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக தாங்கள் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

எனது கட்சிக்காரரின் மரியாதைக்கு ஊறு விளைவிக்கவே தவறான தகவலை தெரிவித்துள்ளீர்கள். உங்களின் பழிசாட்டுதல் உண்மைக்குப் புறம்பானது என்பதால் அது அவதூறின் கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் எனும் முறையில் கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், அணுவுலைக்கு எதிராக போராடிய மக்களுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த தவறான கருத்துக்களை உடனடியாகத் திருத்த வேண்டும். இல்லையெனில் சட்டத் தீர்வுகளை நாடுவோம்” என கூறப்பட்டுள்ளது.

"ஆளுநரின் கருத்து அபாண்டமானது"

கூடங்குளம்

இது குறித்து பிபிசியிடம் பேசிய சுப. உதயகுமார், "ஆளுநர் சொல்வது அபாண்டமானது. அவர் தனது கருத்துக்கு ஆதாரம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு முன்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி ஆகியோரும் இதையே சொன்னார்கள்.

மக்களுக்கு என்ன தெரியும், நாம் சொன்னால் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் இப்படி தொடர்ந்து பேசுகிறார்கள். எல்லா கட்சிகளுமே அப்படித்தான் நினைக்கின்றன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி பேசுகிறார்கள். ஆளும் கட்சியாகி அதிகாரத்திற்கு வந்த பிறகு மாறி விடுகிறார்கள்" என்றார்.

இதற்கு முன்பாக தங்கள் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாராயணசாமி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

"ஆனால், யாரும் அதை எதிர்கொண்டு பதில் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு சட்டம் அளித்திருக்கும் பாதுகாப்பிற்குப் பின்னால் ஒளிந்துகொள்வார்கள். இவர்கள் ஒவ்வொரு முறை குற்றச்சாட்டு சொல்லும்போது நாம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகிவிடும். ஆனால், நாம் அனுப்பும் நோட்டீஸிற்கு பதிலே சொல்ல மாட்டார்கள். இதுதான் தொடர்ந்து நடக்கிறது" என்கிறார் உதயகுமார்.

கூடங்குளம் போராட்டம்

கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நடக்கத் துவங்கியது. இந்தப் போராட்டம் கூடங்குளத்திற்கு அருகில் உள்ள இடிந்தகரையை மையமாகக் கொம்டு நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டங்களில் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இதனை அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முன்னெடுத்து நடத்தியது. இப்போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சுப. உதயகுமார் இருந்தார்.

கூடங்குளம் பகுதியில் அணு உலை அறிவிக்கப்பட்டதிலிருந்தே அந்த அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தன என்றாலும், மின் உற்பத்தி செய்வதன் முதற் கட்டமாக எரிபொருள் நிரப்பும் பணி அணு உலையில் துவங்கவிருக்கிறது என அரசு அறிவித்ததை அடுத்து சூடுபிடித்தது. 2014ஆம் ஆண்டுவாக்கில், இடிந்தகரையில் இருந்து போராடுவது நிறுத்திக்கொள்ளப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: