கால்பந்து வீரரான 'கடன் ஆலோசகர்' - கேப் வெர்டே அணி ஸ்பெய்னுக்கு சவால் அளித்தது எப்படி?

லோபஸ் வேலைவாய்ப்பு இணைய தளமான லின்க்ட் இன் மூலம் கால்பந்து அணிக்கு தேர்வானவர்

பட மூலாதாரம், Ulrik Pedersen/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, லோபஸ் வேலைவாய்ப்பு இணைய தளமான லின்க்ட் இன் மூலம் கால்பந்து அணிக்கு தேர்வானவர்
    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கேப் வெர்டே - நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் அணி இதுதான். தங்கள் வரலாற்றின் முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே முன்னாள் சாம்பியன் ஸ்பெய்னுக்கு எதிராக டிரா செய்தது அந்த அணி.

திங்கள்கிழமை இரவு நடந்த போட்டியில் ஸ்பெய்ன் பல கோல்கள் அடித்து எளிதாக வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால், 90 நிமிடங்களில் ஸ்பெய்ன் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டம் முழுவதும் துடிப்பாக டிஃபண்ட் செய்து தங்கள் முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே ஒரு புள்ளியைப் பெற்றது கேப் வெர்டே.

யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக செயல்பட்டதால் அந்த அணியின் செயல்பாடு கால்பந்து வட்டாரத்தில் பெருமளவு விவாதிக்கப்பட்டு வருகிறது.

வோசின்ஹா ஸ்பெய்ன் அணியின் 7 கோல் வாய்ப்புகளைத் தடுத்தார்

பட மூலாதாரம், Maddie Meyer - FIFA/FIFA via Getty Images

படக்குறிப்பு, வோசின்ஹா ஸ்பெய்ன் அணியின் 7 கோல் வாய்ப்புகளைத் தடுத்தார்

குறிப்பாக அந்த அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா அந்த அணியின் கதாநாயகனாக உருவெடுத்திருக்கிறார். அந்தப் போட்டியில் ஸ்பெய்ன் அணி கோல் நோக்கி அடித்த 7 ஷாட்களை 'சேவ்' செய்தார் அந்த 40 வயது கோல்கீப்பர். இந்த செயல்பாட்டுக்காக ஆட்ட நாயகன் விருதும் வென்றார் அவர்.

அதேசமயம் டிஃபண்டர் ராபர்டோ லோபஸ்-ம் பெருமளவு கால்பந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறார். அவரது செயல்பாடும் கேப் வெர்டே அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதையும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

கேப் வெர்டேவின் முதல் உலகக் கோப்பை

கேப் வெர்டே

பட மூலாதாரம், FIFA/FIFA via Getty Images

ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அட்லான்டிக் பெருங்கடலில் இருக்கும் 10 தீவுகள் தான் கேப் வெர்டே. 1975 வரை போர்ச்சுகீசிய காலனியாக இருந்த இந்த தேசம், 2002 முதல் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆனால், கடந்த 6 தொடர்களுக்கும் அந்த அணியால் ஆப்பிரிக்காவில் இருந்து தகுதிபெற முடியவில்லை.

சொல்லப்போனால் 'ஆப்பிரிக்கா கப் ஆஃப் நேஷன்ஸ்' (AFCON - ஆஃப்கான்) தொடருக்குக் கூட இதுவரை 4 முறை மட்டுமே அந்த அணி தகுதி பெற்றிருக்கிறது. சமீபத்திய 2025 ஆஃப்கான் தொடருக்குக் கூட அந்த அணி தகுதி பெறத் தவறியது. 2024ல் நடந்த அந்த தகுதிச் சுற்றில் 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றது அந்த அணி.

ஆனால், உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அந்த அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. லிபியா, அக்கோலா, மொரீஷியஸ், எஸ்வாடினி, கேமரூன் அணிகள் அடங்கிய பிரிவில் முதலிடம் பிடித்து (10 போட்டிகளில் 7 வெற்றிகள்) முதல் முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது அந்த அணி. அவர்களை விட பலம் வாய்ந்த கேமரூன் அணிக்கெதிராக அவர்கள் வெற்றி பெற்றபோதே, கால்பந்து உலகத்தின் கண்கள் இந்த அணியின் மீது விழுந்தது.

கால்பந்து உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகளிலேயே மூன்றாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட அணி கேப் வெர்டே தான்.

அரண் போன்ற டிஃபன்ஸும் ராபர்டோ லோபஸும்

கேப் வெர்டே

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த சில மாதங்களாகவே கேப் வெர்டே அணியின் டிஃபன்ஸ் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றின்போது அவர்கள் தங்கள் 'ஹோம் கிரவுண்டில்' விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட அவர்கள் கோல் விடவில்லை.

மே 31 செர்பியாவுக்கு எதிரான நட்புறவு போட்டியை 3-0 என வென்ற அந்த அணி, ஒரு கோல் கூட விடாமல் 'கிளீன் ஷீட்' பதிவு செய்தது. அனுபவமிக்க அந்த டிஃபன்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டது.

ஸ்பெய்னுக்கு எதிராகவும் அவர்கள் அதே செயல்பாட்டை வெளிக்காட்டினார்கள். ஸ்பெய்ன் அணி தொடர்ச்சியாக வாய்ப்புகள் உருவாக்கிக்கொண்டே இருந்தபோதும், அதை அவர்கள் எளிதாக கோல் நோக்கி அடிக்க முடியாத அளவுக்கு தடுத்தார்கள் கேப் வெர்டே டிஃபண்டர்கள்.

அதைவிட முக்கியமான விஷயம், அவர்கள் களத்தில் காட்டிய ஒழுக்கம். பொதுவாக ஒரு முன்னணி அணிக்கு எதிரான போட்டியில் தடுப்பாட்டத்தில் ஈடுபடும் அணிகள், நிறைய ஃபவுல்கள் செய்வார்கள். அதனால், ஃப்ரீ கிக், பெனால்டி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்பெய்ன் அணிக்கு இந்தப் போட்டியில் அது பெரிதாகக் கிடைக்கவேயில்லை. 90 நிமிடங்களில் அந்த அணி செய்தது ஒரேயொரு ஃபவுல் தான்.

முன்னணி கால்பந்து தரவு நிறுவணமான ஆப்டாவின்படி 1966 ஃபிஃபா உலகக் கோப்பைக்குப் பின் ஒரு அணி 90 நிமிடங்களில் பதிவு செய்த மிகக் குறைந்த ஃபவுல் எண்ணிக்கை இதுதான். அந்த அளவுக்கு இருந்தது கேப் வெர்டே டிஃபன்ஸின் ஒருங்கிணைப்பும் ஒழுக்கமும்.

அப்படி சிறப்பாக செயல்பட்ட டிஃபன்ஸின் மிகமுக்கிய வீரர் தான் ராபர்டோ லோபஸ். இஎஸ்பிஎன் தரவுகளின்படி, ஸ்பெய்னுக்கு எதிராக 90 நிமிடங்கள் களத்தில் இருந்த அவர் 17 டிஃபன்ஸிவ் பங்களிப்புகளைக் கொடுத்தார். குறிப்பாக ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் ஸ்பெய்னுக்குக் கிடைத்த மிகப் பெரிய கோல் வாய்ப்பையும் தடுத்தார் அவர். பெனால்டி ஏரியாவில் இருந்து மிகேல் ஒயார்சபால் அடித்த பந்து அதிவேகமாக கோல் நோக்கிச் சென்றது. ஆனால், ஒயார்சபாலுக்கு மிகவும் அருகிலேயே நின்றிருந்த லோபஸ், தன் உடலை பந்தின் முன் செலுத்த, பந்து அவர்மீது பட்டு வெளியே சென்றது. லோபஸ் அப்படி 'பிளாக்' செய்யாமல் இருந்திருந்தால் அது நிச்சயம் கோலாக மாறியிருக்கும்.

இது மட்டுமல்ல, ஆட்டம் முழுவதுமே தன் அணியின் டிஃபன்ஸை சிறப்பாக ஒருங்கிணைத்து ஸ்பெய்னுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தார் அவர்.

லின்க்ட்இன் மூலம் வந்த அழைப்பு

கேப் வெர்டே

பட மூலாதாரம், Simon M Bruty/Getty Images

33 வயதான ராபர்டோ 'பிகோ' லோபஸ் அயர்லாந்தில் பிறந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து லீகில் பங்கேற்கும் போஹீமியன்ஸ் அணிக்காக பகுதி நேரமாக விளையாடிக்கொண்டே, புதிதாகத் தகுதி பெற்ற வீட்டுக்கடன் ஆலோசகராகவும் இருந்தார் அவர்.

பின்னர், 2017-ம் ஆண்டு, ஷாம்ராக் ரோவர்ஸ் லோப்ஸ் அணி அவருக்கு வாய்ப்பு வழங்க, தனது பகுதி நேர வேலையை விட்டுவிட்டு, முழு நேர கால்பந்து வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அவர். இவர் 19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து அணிக்காகவும் விளையாடியிருக்கிறார்.

இந்நிலையில் 2018ம் ஆண்டு கேப் வெர்டே அணிக்காக பங்கேற்பதற்கான அழைப்பு அவருக்கு வந்திருக்கிறது. அவரது தந்தை கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் அயர்லாந்து சீனியர் அணிக்கு விளையாடியதில்லை என்றாலும் ஃபிஃபா விதிப்படி அவர் கேப் வெர்டே அணிக்கு ஆடும் தகுதி பெற்றார்.

2018ல் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ரூய் அகாஸ், லோபஸ் கேப் வெர்டே அணிக்கு ஆட விருப்பப்படுகிறாரா என்று கேட்டு லின்கிட்இன் தளத்தில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அந்த செய்தி போர்ச்சுகீசிய மொழியில் இருந்திருக்கிறது. அயர்லாந்தில் பிறந்து வளர்ந்திருந்த லோபஸுக்கு அப்போது போர்ச்சுகீசிய மொழி தெரியவில்லை. அதனால், அவர் அது ஏதோ 'ஸ்பேம்' மெசேஜ் என்று நினைத்து அதைத் தவிர்த்துவிட்டார். ஆனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவருக்கு மறுபடியும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதுபற்றி பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசிய ராபர்டோ லோபஸ், "நான் அதை ஒரு ஸ்பேம் மெசேஜ் என்று நினைத்து அலட்சியப்படுத்திவிட்டேன். பின்னர் சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர் எனக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பி, 'ஹாய் ராபர்ட்டோ, நான் உங்களிடம் சொன்னதைப் பற்றி யோசிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?' என்று கேட்டார். பல மாதங்களுக்கு முன்பு அவருக்குப் பதில் அளிக்காததற்காக நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்.நான் அந்த மெசேஜை கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் போட்டேன். அதில் தோராயமாக, 'கேப் வெர்டே அணியில் புதிய வீரர்களைச் சேர்க்க பார்த்துக்கொண்டிருக்கிறோம், நீங்கள் கேப் வெர்டே அணிக்காக விளையாட விருப்பமாக உள்ளீர்களா?' என்று இருந்தது. நான் மிகுந்த உற்சாகமடைந்தேன்" என்று கூறினார்.

இப்படியாக கேப் வெர்டே அணிக்கு 2019ம் ஆண்டில் அறிமுகமானார் லோபஸ். இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட போட்டிகளில் அந்த அணிக்கு விளையாடியிருக்கும் அவர், தன் வாழ்நாளின் மிகச் சிறந்த செயல்பாடுகளுள் ஒன்றை, மிகப் பெரிய மேடையில் அரங்கேற்றியிருக்கிறார்.

போட்டிக்குப் பிறகு பேசிய அவர், "இந்த செயல்பாடு எங்களது கடந்த சில வார உழைப்பின் வெளிப்பாடாகும், அதற்கு ஏற்ற பலன் எங்களுக்குக் கிடைத்துள்ளது. ஸ்பெய்ன் போன்ற ஒரு வலிமையான அணிக்கு எதிராக ஒரு புள்ளியைப் பெறுவது, நாம் ஏன் இந்த விளையாட்டை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இது எனக்குக் கனவு நனவானது போன்றது, என் கனவை வாழ்வது எனக்குக் கிடைத்த பெரும் மகிழ்ச்சி" என்று கூறினார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு