You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாற்று சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த மகளை கொன்று எரித்த பெற்றோர்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மாற்று சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்த மகளை பெற்றோரே ஆணவக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மகளை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் மறுத்ததால் கொலை செய்ததாகவும் பெற்றோர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மகன் நவீன். இவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், பக்கத்து கிராமமான நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா(19) என்ற பெண்ணை தான் திருமணம் செய்திருந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரித்துவிட்டதாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் தந்தை பெருமாள் மற்றும் அவரது மனைவி ரோஜா ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து, கைது செய்துள்ளனர். பெருமாளும், அவரது மனைவியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பிபிசியிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், “பெண்ணின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் அந்தப் பெண்ணை தூக்கிலிட்டு, பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அவர் கூறிய வாக்குமூலத்தை, மற்றவர்களின் வாக்குமூலங்களோடு ஒப்பிட வேண்டும்.
இதில், வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா, இது முன்னதாகவே திட்டமிடப்பட்டு நடந்ததா உள்ளிட்டவையை விசாரித்து வருகிறோம். இது திட்டமிடப்பட்டு இருந்தால், கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்படும். ஆனால், அதனை தற்போதே முடிவு செய்ய முடியாது,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)