பப்புவா நியூ கினி நிலச்சரிவில் 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்தனர் - மீட்புப் பணியில் என்ன சிரமம்?
பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் குறைந்தது 2,000 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்த நிலையில், புதைந்து போனவர்களின் உடல்களைத் தேடும் பணி ஒரு வாரமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மண்ணுக்குள் புதைந்தவர்களின் நிலை குறித்து பெரும் அச்சம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டின் எங்கா மாகாணத்தில் மே 24ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. 650 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக முதலில் ஐநா தெரிவித்த நிலையில், பின்னர் இந்த எண்ணிக்கை 2,000-க்கும் அதிகம் என பப்புவா நியூ கினி அரசு தெரிவித்தது.
சம்பவம் நடந்தது முதல் அவசரகால மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தாலும், மே 30-ம் தேதி வரை 11 உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிர் பிழைத்த பொதுமக்களும் மண்ணுக்குள் புதைந்த தங்கள் உறவுகளை குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய முள்கரண்டிகள் கொண்டு தேடி வருகின்றனர். சில இடங்களில் 8 மீட்டர் வரை நிலச்சரிவு இடிபாடுகள் உள்ளன. பெரிய கற்பாறைகள் கிடப்பதால் மண்ணுக்குள் புதைந்தவர்கள் உடல்களை மீட்பதில் சிக்கல் இருப்பதாக இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகிறார்.
உயிர் பிழைத்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாகவும், அவை தாமதமானால் இங்கிருப்பவர்களின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என இந்த மக்களின் தலைவர் யுரி யாபரா கூறினார்.
பப்புவா நியூ கினிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் மனிதாபிமான உதவிகளை அறிவித்துள்ளன. இந்தியா பத்து லட்சம் அமெரிக்க டாலர் உதவி அறிவித்துள்ளது. அண்டை நாடான ஆஸ்திரேலியா விமானம் மூலம் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களை மே 31 வெள்ளிக்கிழமை பிரதமர் ஜேம்ஸ் மராப்பே சந்தித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனத் தெரிவித்த அவர், இந்தப் பகுதியில் நிலம் நிலையற்று இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, இயந்திரங்கள் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டால் அது மற்றுமொரு நிலச்சரிவுக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



