பாஜக, காங்கிரசுக்கு பணம் கொடுத்தவர்கள் விவரம் எப்போது வெளிவரும்? எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

காணொளிக் குறிப்பு, தேர்தல் பத்திர விவகாரம்: எஸ்பிஐ மீது கோபப்பட்ட தலைமை நீதிபதி - காணொளி
பாஜக, காங்கிரசுக்கு பணம் கொடுத்தவர்கள் விவரம் எப்போது வெளிவரும்? எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
பிரசுரிக்கப்பட்டது

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் எஸ்.பி.ஐ நடந்து கொள்ளும் விதம் முற்றிலும் ஏற்புடையதல்ல என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் முழு விபரத்தையும் எஸ்.பி.ஐ வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மார்ச் 21ம் தேதிக்குள் அனைத்து தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் அரசமைப்புக்கு எதிரானது என கடந்த பிப்ரவரி 15ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் சமர்பிக்க எஸ்.பி.ஐக்கு உத்தரவிட்டது. தரவுகளை சமர்பிக்க முதலில் எஸ்.பி.ஐ கால அவகாசம் கோரியது. ஆனால் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் குறிப்பிட்ட விபரங்களை மட்டுமே எஸ்.பி.ஐ சமர்ப்பித்தது. அந்த தரவுகளை தேர்தல் ஆணையமும் அண்மையில் வெளியிட்டது. இருப்பினும் தேர்தல் பத்திரத்தில் உள்ள பிரத்யேக சீரியல் எண்களை எஸ்.பி.ஐ வழங்கவில்லை. இந்த எண்களைக் கொண்டே, எந்தெந்த நிறுவனங்கள் கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடைகளை வழங்கியுள்ளன என்கிற முழு விபரத்தையும் அறிய முடியும்.

இதையடுத்து எஸ்.பி.ஐக்கு கடந்த மார்ச் 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், பிரத்யேக சீரியல் எண்களை வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியதோடு வழக்கை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என தெளிவாக உத்தரவில் குறிப்பிடப்பட்டும், உச்சநீதிமன்ற தீரப்பை நடைமுறைப்படுத்துவதில் எஸ்.பி.ஐ.,க்கு என்ன தயக்கம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

"நீங்கள் கேட்பதை மட்டும் கொடுப்போம் என்கிற மனப்பான்மையில் எஸ்.பி.ஐ செயல்படுகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்.பி.ஐ உச்ச நீதிமன்றத்திடம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட விபரங்களை மட்டும் வெளியிடாமல், தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யக சீரியல் எண்கள் உள்பட அனைத்து விபரங்களையும் மார்ச் 21ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் சர்ச்சைகளை தவிர்க்கவும், எஸ்.பி.ஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து தரவுகளையும் சமர்பித்துவிட்டதாகக் கூறி மனுதாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினமே தேர்தல் ஆணையம் இந்த தரவுகளை அதன் இணையதளத்தில் பதவிவேற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேர்தல் பத்திர விவகாரம்: எஸ்பிஐ மீது கோபப்பட்ட தலைமை நீதிபதி - காணொளி

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, அரசியல் கட்சிகள் சீலிடப்பட்ட உறைகளில் சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியிட்டது.

பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, மார்ச் 3, 2017 முதல் ஜூலை 10, 2023 வரை தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருக்கிறது. இதேபோல, காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 1,334 கோடி நிதி பெற்றுள்ளது.

திமுக சமர்பித்துள்ள ஆவணங்களின்படி அந்த கட்சி தேர்தல் பத்திரம் மூலம் 2019 முதல் இதுவரை 656.6 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக 509 கோடி ரூபாய் மார்ட்டினுக்குச் சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் திமுகவுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அதிமுக, தேர்தல் பத்திரம் மூலம் 6.05 கோடி ரூபாய் நிதி பெற்றதாக தெரிவித்துள்ளது.. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் இருந்து மட்டும் 5 கோடி ரூபாயை அதிமுக நன்கொடையாக பெற்றிருக்கிறது. திமுக மார்ட்டினுக்குச் சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து நன்கொடை பெற்றதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது என தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை வாயிலாக எதிர்வினையாற்றியுள்ளார்.

"திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான்" என டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

"அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக' என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது.

பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா? 'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்" என டி.ஆர். பாலு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)