பாகிஸ்தான் இந்து சிறுமி கடத்தப்பட்டு அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதா?

பாகிஸ்தான்

பட மூலாதாரம், @NARAINDASBHEEL8

படக்குறிப்பு, மூன்று பேர் தங்கள் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தங்கள் மகளை அழைத்துச் சென்றதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • எழுதியவர், ஹூமைலா கான்
    • பதவி, கராச்சியிலிருந்து (பாகிஸ்தான்), பிபிசி இந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில் மைனர் இந்துப் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தங்கள் மகள் மைனர் என்றும் கடத்தப்பட்ட பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர்.

ஆனால் சிறுமிக்கு 19 வயது என்றும், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் திருமணம் செய்து கொண்டார் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

சிந்து மாநிலம் மிர்புர்காஸ் மாவட்டத்தில் உள்ள நௌகோட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆயுதம் ஏந்திய மூன்று நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கரிஷ்மா பீலின் தந்தை ரமேஷ் குமார் பீல் கூறினார்.

அதன் பிறகு அவர் மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறுகிறார்.

தனது மகள் கரிஷ்மாவுக்கு 16 வயது என்று ரமேஷ் குமார் பீல் தெரிவித்தார்.

மகள் கடத்தப்பட்ட உடனேயே தான் நௌகோட் காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், அங்கு போலீஸார் தன்னை இரண்டு மணி நேரம் உட்கார வைத்ததாகவும் அவர் கூறுகிறார்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் தந்தையும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.

அவரது மகள் மீட்கப்படுவார் என்று காவல்நிலையத்தில் ரமேஷ்குமார் பீலுக்கு உறுதி கூறப்பட்டது.

ஆனால், பின்னர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பாகிஸ்தான்
படக்குறிப்பு, கரிஷ்மா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், காவல்துறை அவருக்கு நீதி வழங்கவில்லை என்றும் சிறுமியின் தந்தை ரமேஷ் பீல் கூறியுள்ளார்.

தனது மகள் மைனர் என்றும், அவரது திருமணம் சட்டவிரோதமானது என்றும் கரிஷ்மா பீலின் தந்தை கூறுகிறார்.

கரிஷ்மா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், காவல்துறை தனது மகளுக்கு நீதி வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கரிஷ்மா பீல் ஒரு முஸ்லிம் என்ற சான்றிதழும் வெளியாகியுள்ளது. இந்த சான்றிதழில் கரிஷ்மாவின் வயது 19 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரிஷ்மா 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றும் இப்போது அவரது முஸ்லிம் பெயர் கன்வல் என்றும் சான்றிதழில் எழுதப்பட்டுள்ளது.

அதே தேதியில் அதாவது பிப்ரவரி 18 தேதியிடப்பட்ட திருமணச் சான்றிதழும் வெளிவந்துள்ளது. அதிலும் வயது 19 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளின் பிறந்த தேதி 2006 மார்ச் மாதம் என்று கூறும் பள்ளிச் சான்றிதழ் தன்னிடம் இருப்பதாக கரிஷ்மாவின் தந்தை ரமேஷ் பீல் கூறுகிறார்.

அதன்படி, கரிஷ்மாவின் வயது 16. அவருக்கு மார்ச் மாதம் 17 வயது ஆகும்.

பாகிஸ்தான்
படக்குறிப்பு, பள்ளி சான்றிதழின் படி, கரிஷ்மா மார்ச் 2006 மார்ச் மாதம் பிறந்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிந்து சட்டத்தின்படி திருமணம் செய்ய குறைந்தபட்ச வயது 18. இப்போது இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ வயதுக்கு முன் திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

"கரிஷ்மா, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த ஒரு பையனுடன் தொடர்பு வைத்திருந்தார். பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை கரிஷ்மா அவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். இருவரும் சமாரோ பகுதியில் ஒரு இஸ்லாமிய மதகுரு அயூப் ஜான் சர்ஹிந்தியிடம் சென்றனர். அங்கு சிறுமி மதம் மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்,” என்று நௌகோட் காவல் நிலையத்தின் காவல்துறைத் தலைவர் அஸ்லம் ஜமாலி பிபிசியிடம் தெரிவித்தார்.

மதமாற்றம் மற்றும் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ்கள் தன்னிடம் இருப்பதாக அஸ்லம் ஜமாலி மேலும் கூறினார்.

இதனிடையே கரிஷ்மாவின் அறிக்கை உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தன்னை யாரும் தவறாக வழிநடத்தவில்லை என்றும் கரிஷ்மா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறுமியின் தந்தை தன்னிடம் வந்ததை காவல் நிலையத் தலைவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவரது புகாரின் மீது எப்ஐஆர் ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பதை அஸ்லம் ஜமாலியால் தெளிவாக விளக்க முடியவில்லை.

பாகிஸ்தான்
படக்குறிப்பு, கரிஷ்மா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இது என்று கூறப்படுகிறது.

தற்போது உள்ளூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கரிஷ்மாவின் பெற்றோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

போலீஸ் உட்பட எல்லா தரப்பினரையும் பிப்ரவரி 27-ம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் நிலைய தலைமை அதிகாரி கூறுகிறார்.

பாகிஸ்தான்
படக்குறிப்பு, நௌகோட்டின் இந்து சமூகத்தினர் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்

மறுபுறம் சிந்துவில் உள்ள இந்து சமூகத்தின் அமைப்பான பாகிஸ்தான் தாராவர் இத்திஹாத் மற்றும் கரிஷ்மாவின் குடும்பத்தினர், நௌகோட் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கரிஷ்மா கடத்தல் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். சட்டப்பூர்வ வயதுக்கு முன் திருமணம் செய்ததற்காக வழக்கு பதிவு செய்து, கரிஷ்மாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: