ஆம் ஆத்மி எம்.பி. அளித்த புகாரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது

காணொளிக் குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
ஆம் ஆத்மி எம்.பி. அளித்த புகாரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது
பிரசுரிக்கப்பட்டது

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் தான் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் முன்வைத்த குற்றச்சாட்டு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமையான இன்று கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியதில் இருந்து இந்த முழு விவகாரமும் மே 13ஆம் தேதி காலை தொடங்கியது.

இந்த வழக்கில் வியாழக்கிழமை மாலை டெல்லி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, திங்கட்கிழமை காலை 9:34 மணியளவில் பெண் ஒருவர் அவசர உதவி அழைப்பு மூலம் அழைத்து முதலமைச்சரின் இல்லத்தில் தாம் தாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த அழைப்புக்குப் பிறகு, ஸ்வாதி மாலிவால் காவல் நிலையத்தைச் சென்றடைந்தார்.

அந்த அவசர அழைப்பின்போது போலீஸ் டைரியில் பதிவாகியுள்ள எண் ஸ்வாதி மாலிவாலுடையது. அந்த அழைப்பில் “தான் தற்போது முதல்வர் வீட்டில் இருப்பதாகவும், முதல்வரின் உதவியாளர் பிபவ் குமாரால் மோசமாகத் தாக்கப்பட்டதாகவும்" கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் அதிஷி வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

அப்போது பாஜக இதன் பின்னணியில் இருப்பதாக அதிஷி குற்றம் சாட்டினார்.

ஸ்வாதி மலிவால்

பட மூலாதாரம், ANI

’’ஸ்வாதியை கேஜ்ரிவாலின் வீட்டிற்கு பாஜக அனுப்பியது. கேஜ்ரிவால் மீது பொய் வழக்கு போடுவதே இந்தச் சதியின் நோக்கம். இந்தச் சதியின் முகம் ஸ்வாதி. எந்த முன்னறிவிப்பும் இன்றி ஸ்வாதி முதல்வர் இல்லத்தை அடைந்தார். ஸ்வாதி கொடுத்த புகாரில் தன்னைக் கொடூரமாகத் தாக்கியதாகவும் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறுகிறார். அந்தக் காயத்திற்குப் பிறகு வலியால் புலம்புவதாகவும் தனது உடைகள் கிழிந்ததாகவும் அவர் கூறுகிறார். ஆனால் சிசிடிவி காணொளியில் அவர் காவலாளிகளை மிரட்டுவதைக் காண முடிகிறது. ஸ்வாதி மாலிவாலின் குற்றச்சாட்டுகள் தவறானவை” என்றார்.

அதிஷியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஸ்வாதி மாலிவால், நேற்று கட்சிக்கு வந்த தலைவர்கள் 20 வருட உறுப்பினரை பாஜகவின் முகவராக அறிவிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, செய்தியாளர் சந்திப்பில் முழு உண்மையையும் கட்சி ஏற்றுக்கொண்டது. இன்று மீண்டும் வேறு கதையைச் சொல்கிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், இந்த விவகாரத்தில் பிபவ் குமார் மீது அரவிந்த் ஜேஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனக் கூறியிருந்தார். மேலும், ஸ்வாதி மாலிவாலை நாட்டிற்கும் சமூகத்திற்கும் நிறைய பணிகளைச் செய்தவர் என்றும் அவர் ஒரு மூத்த தலைவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை தொடங்கியதுமே பாஜகவை சேர்ந்தவர்கள் ஆம் ஆத்மி கட்சி மீதும், அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் கடும் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மாநிலங்களவை உறுப்பினரான தனது கட்சியின் பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் அமைதியாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது உண்மையில் நம்ப முடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சம்பவத்திற்கு கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “பெண்களை மதிக்கும் கலாசாரம் நம்முடையது. ஆம் ஆத்மி கட்சியில் என்ன நடந்தாலும் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியை நாடு மன்னிக்காது. ஒரு முதல்வர் சிறைக்கு அனுப்பப்பட்டதும் அவரது வீட்டில் ஒரு பெண் தாக்கப்பட்டதும் ஏமாற்றமளிக்கிறது" என்றார்.

இந்த நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்வாதி மாலிவால், நாட்டில் முக்கியமான தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்வாதி மாலிவால் முக்கியமானவரல்ல, நாட்டின் பிரச்னைகளே முக்கியமானது. பாஜகவினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)