You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் 7 பேரை பலி கொண்ட கார் பந்தய விபத்து நிகழ்ந்தது எப்படி?
இலங்கையில் இருக்கும் தியத்தலாவை என்ற பகுதியில் நேற்று (ஞாயிறு, ஏப்ரல் 21) 'ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் 2024' (Fox Hill Supercross 2024) என்ற கார் பந்தயம் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்துள்ளனர்.
தியத்தலாவையில் நரிய கந்தா (Fox Hill) என்ற பகுதியில் நடந்த கார் பந்தயத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 8 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்ததாக மேஜர் ஜெனரல் ரசிகா குமாரா, பிபிசி சிங்களத்துக்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார்.
"ஃபாக்ஸ் ஹில் பந்தய டிராக், ராணுவத்திற்குச் சொந்தமானது. இந்தக் கார் பந்தயம் இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், அங்கு பணியில் இருந்த நான்கு டிராக் மார்ஷல்களும், மூன்று பார்வையாளர்களும் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 8 வயது சிறுமியும் அடக்கம்,” என ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான ரசிகா குமாரா தெரிவித்தார்.
காவல் துறை செய்தித்தொடர்பாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவா இந்த விபத்து குறித்து பேசுகையில், “ஃபாக்ஸ் ஹில் பந்தயத்தின் போது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகி, பார்வையாளர்கள் இருந்த பகுதிக்குள் அதி வேகமாக பாய்ந்தது,” என்றார்.
“அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது,” என்றார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக தியத்தலாவை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது, என்றும் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)