வரன் தேடித் தராத திருமண சேவை இணையதளத்திற்கு அபராதம் - திருப்பூரில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தனது 33 வயது மகனுக்கு திருமணப் பொருத்த (மேட்ரிமோனியல் ) இணையதளத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளாகப் பெண் தேடியும் கிடைக்காத இந்திராணி செய்தது என்ன தெரியுமா?
சேவையை முறையாக வழங்கவில்லை என்று கூறி இணையதளத்தின் மீது வழக்கு தொடுத்தார்.
தனது மகனின் வயது காரணமாக அவருக்குப் பெண் கிடைப்பது கஷ்டமாக உள்ளது என்று கூறியதற்காகவும், தான் செலுத்திய பதிவுக் கட்டணத்தைத் திரும்பச் செலுத்தாத காரணத்திற்காகவும் அந்தத் திருமணப் பொருத்த இணையதளத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் "சேவை குறைபாடு" மற்றும் அவருக்கு ஏற்பட்ட "மன உளைச்சல்" காரணமாக, இந்திராணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்க இணையதள உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிபிசி தமிழ் சம்பந்தப்பட்ட இணையதள நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முயன்றது. ஆனால், அவர்களிடமிருந்து 48 மணிநேரத்திற்கும் மேலாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
இதேபோன்ற பிரச்னைகளைச் சந்தித்ததாக பிபிசி தமிழிடம் பேசியவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட திருமணப் பொருத்த இணையதளங்களைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர்களிடம் இருந்தும் பதில் கிடைக்கவில்லை.

வரன் தேடித் தராத திருமண சேவை இணையதளத்திற்கு அபராதம்
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திராணி தனது 33 வயது மகனுக்காக பிரபல திருமணப் பொருத்த இணையதளம் ஒன்றில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.3766 செலுத்தி அவரது விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
இணையதளத்தை நடத்துபவர்கள், ஆதார் அட்டை விவரங்களைப் பெற்றுக்கொண்டு அவரது மகனை புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சில மாதங்களாகியும் பெண் கிடைக்காததால், இணையதளத்தை நாடியுள்ளார் இந்திராணி.
அப்போது அவரது மகனுக்கு வயதாகிவிட்டதால் அவருக்குப் பார்க்கப்படும் பெண், கணவரை இழந்தவராகவோ, விவாகரத்து ஆனவராகவோ இருப்பார் என்று கூறியுள்ளனர். அந்த இணையதளத்தின் சேவைகளைத் தொடர்ந்து பெற விரும்பாத இந்திராணி தான் செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். தருவதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் அவருக்கு பணத்தைத் தரவில்லை.
இணையதளம் வழங்கிய சேவை திருப்திகரமானதாக இல்லாததால் இந்திராணி சட்டப்படியான நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஆனால் எதிர் தரப்பில் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம், “சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் அவருக்கு ரூ.10 ஆயிரம், பதிவுக் கட்டணம் ரூ.3766 ஆகியவற்றை மூன்று மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்கு மேல் தாமதமாகும் காலத்துக்கு 8% ஆண்டு வட்டி கணக்கிட்டு வழங்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.

பட மூலாதாரம், Getty Images
திருமணப் பொருத்த இணையதள சேவைகளைப் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், நுகர்வோருக்கு இதுபோன்ற சிரமங்கள் சில நேரங்களில் ஏற்படுகின்றன.
திருமணப் பொருத்த இணையதளத்தின் மூலம் சந்தித்த சிரமங்கள் குறித்து பெற்றோர்களிடமும், இணை தேடும் நபர்களிடமும் பிபிசி தமிழ் பேசியது.
அப்படிப் பேசியபோது, நான்கு ஆண்டுகளில் தனக்கு வரன் தேடுவதற்காக சுமார் 20 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகக் கூறினார் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ்.
"ஒரு முறை பணம் செலுத்தினால் 10 பேர் முதல் 50 பேரின் தகவல்கள் கிடைக்கும். சில இணையதளங்களில் ரூ.1000 செலுத்த வேண்டியிருக்கும். பிரபலமான இணையதளங்களில் பதிவு செய்ய, ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கொடுக்கப்பட்ட விவரங்கள் திருப்திகரமானதாக இல்லை என்றால், மீண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதுப்பித்துக் கொண்டாலும் வழங்கப்படும் விவரங்கள் பெரும்பாலும் ஏற்கெனவே வழங்கப்பட்ட விவரங்களாக இருக்கும்," என்கிறார் விக்னேஷ்.
அதுமட்டுமின்றி, இதில் சில குளறுபடிகளும் நடப்பதாகக் கூறிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு திருமணப் பொருத்தம் பார்க்கும் நிறுவனத்தில் பதிவு செய்தபோது, பெண்ணின் பொய்யான புகைப்படத்தைக் காண்பித்து ஏமாற்றினர். நேரில் சென்று முறையிட்ட பிறகும், எந்தப் பதிலும் அளிக்கவில்லை" என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த கீதா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது அண்ணன் மற்றும் கணவரின் சகோதரருக்கு பெண் பார்த்து வருகிறார்.
பல திருமணப் பொருத்த நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட அவர், அவர்களின் சேவைகள் திருப்திகரமானதாக இல்லை என்கிறார்.
"கோவையில் நடைபெற்ற சுயம்வரத்துக்குச் சென்றோம். அதன் பிறகு பெண் வீட்டாரின் விவரங்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினர். ஆனால் ஒரு விவரம்கூட கிடைக்கவில்லை. சுயம்வரத்தில் பங்கேற்க ரூ.1000 கட்டணம் செலுத்தியிருந்தோம். வேறு சில இடங்களில் ரூ.2500 செலுத்திப் பதிவு செய்திருந்தோம்.
ஏற்கெனவே திருமணமான பெண்களின் எண்கள் கொடுக்கப்பட்டன. ஏன் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டன என்று கேட்டதற்கு, அவர்களுக்கு திருமணமானது தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்" என்றார்.
கோவையைச் சேர்ந்த வி.எஸ்.ராகவேந்திரன் தனது மகனுக்காக மூன்று ஆண்டுகளாகப் பெண் தேடி வருகிறார்.
"உங்களுக்குப் பொருத்தமான வரன்களின் விவரங்கள் வழங்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் எப்போதும் நமக்கு ஏற்ற பொருத்தங்கள் வழங்கப்படுவதில்லை” என்கிறார்.
சேவை வழங்கப்படாவிட்டால் புகார் அளிக்கலாம்

பட மூலாதாரம், EPA
இதுபோன்ற சிரமங்களுக்கு நுகர்வோர் தீர்வு காண முடியும் என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன்.
"உங்களுக்குப் பொருத்தமான 50 பேரின் விவரங்கள் வழங்கப்படும் என்று கூறி, அத்தனை விவரங்களை வழங்கவில்லை என்றால் நுகர்வோர் புகார் அளிக்க முடியும், வழக்கு தொடுக்கவும் முடியும். சில நேரங்களில் இணையதளத்தில் உங்களது விவரங்கள் பிறருக்குத் தெரியும்படியாக வைக்கப்பட்டிருக்காது. அது குறித்தும் புகார் அளிக்கலாம்" என்கிறார்.
இருப்பினும், இணையதளங்கள் சில பொறுப்புத் துறப்பு கூற்றுகளை வெளியிடுவதால், கூடுதல் பொறுப்பு நுகர்வோர் மீது சுமத்தப்படுவதாகக் கூறுகிறார் அவர்.
"ஒருவர் இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யும்போது, இது உண்மை என்று பதிவு செய்வோரின் ஒப்புதலை பெற்றுக் கொள்கின்றனர். மேலும், எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படிக் கூறினால் அந்த விவரங்களைப் பயன்படுத்துவோர் மீதே அதிக பொறுப்பு இருக்கும்" என்கிறார்.
நுகர்வோரின் உதவிக்கு வந்த நீதிமன்றங்கள்

பட மூலாதாரம், Getty Images
திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கியுள்ளது போன்ற தீர்ப்புகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வேறு சில மாநிலங்களிலும் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு, ஒருவர், திருமணப் பொருத்த இணையதளத்தில் பதிவு செய்து ரூ.51 ஆயிரம் செலுத்தியிருந்தார். இணையதளத்தின் மூலம், தனக்குப் பொருத்தமான வரன்களைத் தேடவும் சந்திக்கவும் அந்தக் கட்டணத்தைச் செலுத்தியிருந்தார். அதுகுறித்த வழக்கில், அவருக்குப் பொருந்தாத வரன்களை இணையதளம் வழங்கி, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதாக சண்டிகர் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோன்று, மகாராஷ்ட்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணப் பொருத்த இணையதளம் மூலம் சந்தித்த நபரிடம் ரூ.74 லட்சத்தை இழந்துள்ளார்.
பிரிட்டன் நாட்டவர் போல் ஏமாற்றி, சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நாடகமாடிப் பணம் பெற்றுள்ளார். சம்பந்தப்பட்ட நபரின் விவரங்களைச் சரி பார்க்காததால் திருமணப் பொருத்த இணையதளத்தின் மீது, அந்தப் பெண் வழங்கிய புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு சென்னையைத் தளமாகக் கொண்ட இந்தியாவில் பிரபலமான திருமணப் பொருத்த இணையதளத்தின் மீது கேரளாவை சேர்ந்தவர் வழக்கு தொடுத்தார்.
‘எலைட்’ பிரிவின் கீழ் ஓராண்டுக்கு சேவைகள் பெற ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்தியிருந்தார். ஆனால் அவருக்குப் பொருத்தமான வரன்கள் வழங்கப்படாததால் அந்த இணையதளத்தின் மீது வழக்கு தொடுத்திருந்தார்.
திருமணம் செய்து வைக்கும் உறுதியை இணையதளம் வழங்கவில்லை என்றும், வழங்கப்பட்ட தொடர்பு எண்களில் பெண் வீட்டார் பேசாததற்கு இணையதளம் பொறுப்பாகாது என்றும் இணையதளத்தின் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் குறிப்பிட்ட ஓராண்டுக்குள் 23 வரன்களின் விவரங்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் மட்டுமே பொருத்தமானவராக இருந்ததாகவும், அவரும் பதில் அளிக்கவில்லை என்றும் புகார் அளித்தவர் தெரிவித்திருந்தார். மேலும், விவரங்களை வழங்குவதற்கு முன்பாக அவை சரிபார்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றம், சேவை குறைபாடு காரணமாக இணையதளத்துக்கு அபராதம் விதித்தது.
நுகர்வோர் செய்ய வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Sudha Ramalingam
மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கியது வரவேற்கத்தக்க தீர்ப்பு என்கிறார். திருமணத்துக்கான உறவுகளைத் தேடுபவர் என்றாலும் சட்டத்தின் முன்னால் அவர் பணம் செலுத்தி ஒரு சேவையைப் பெறும் நுகர்வோராகப் பார்க்கப்படுவார் என்கிறார்.
"முப்பது வயதுக்கு மேலானவருக்கு திருமணப் பொருத்தம் பார்த்துக் கொடுக்க முடியாது என்றால், 30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு சேவை வழங்குவதாகக் கூறி கட்டணம் வசூலிக்கக் கூடாது" என்கிறார் அவர்.
இணையதளங்கள் தங்களுக்குப் பொறுப்பே இல்லை எனத் தட்டிக்கழிக்க முடியாது என வலியுறுத்தும் சுதா ராமலிங்கம், ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்குவதாகக் கூறி கட்டணம் வசூலிக்கும்போது, அந்தச் சேவையை வழங்க வேண்டும்," என்கிறார்.
மேலும், மழுப்பலான உத்தரவாதங்களைத் தருவதைத் தவிர்த்துவிட்டு, தாங்கள் வழங்கும் சேவைகளைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்துகிறார்.
வழக்கறிஞர்கள் மற்றும் நுகர்வோர் சங்கங்களிடம் பேசியபோது, நுகர்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் சிலவற்றை வலியுறுத்தினர். அவை,
- திருமணப் பொருத்தம் பார்க்கும் இணையதளத்தை நாடும்போது, அவர்கள் என்ன சேவை வழங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
- எத்தனை நபர்களின் விவரங்கள், எத்தனை நாட்களுக்கான சேவை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் பணம் செலுத்த வேண்டுமா என்ற விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும். பெரிய அளவிலான இணையதளங்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் சேவைகளை சம்பந்தப்பட்ட நபருக்கு விவரிக்கின்றனர்.
- சேவைக்கான பணம் செலுத்தும்போது அதற்கான அத்தாட்சியை கண்டிப்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- குறிப்பிட்ட சேவை வழங்கப்படவில்லை என்றால், முதலில் இணையதளத்தை தொடர்புகொள்ள வேண்டும். அவர்களின் பதில் திருப்திகரமானதாக இல்லை என்றாலோ, அல்லது சேவையைத் தொடர விரும்பவில்லை என்றாலோ, சம்பந்தப்பட்ட இணையதளத்திடம் மின்னஞ்சல் மூலமோ, நேரில் சென்றோ முறையாகத் தெரிவிக்க வேண்டும்.
- அதன் பிறகும் சிரமங்கள் இருந்தால், வழக்கறிஞர் அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக நாடலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)





















