You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'5,000 நாய்களுக்கு ஒன்று வீதம் புதிய காப்பகங்களை அமைக்க வேண்டும்' - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியிருக்கும் உத்தரவை நடைமுறைபடுத்தினால் டெல்லி தெருக்களில் இனி தெருநாய்களே இருக்காது.
8 வாரங்களில் டெல்லியில் இருக்கும் தெருநாய்கள் அனைத்தையும் தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி அவற்றை அதற்கான காப்பகங்கள் அமைத்து அதில் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழிகாட்டல் அறிவியலுக்கு புறம்பானது என விலங்குநல ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
டெல்லியில் மொத்தம் 10 லட்சம் தெருநாய்கள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு காப்பகமும் குறைந்தது 5,000 நாய்கள் இருப்பது போன்று அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஏற்கெனவே தெருநாய்களை கட்டுப்படுத்த தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டு பிடித்த இடத்தில் விடுவதற்கான விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகள் இருக்கின்றன.
ஆனால் இப்போது, அப்படி திரும்பி கொண்டு வந்து விடாமல் நிரந்தரமாக அந்த காப்பகங்களிலேயே வைத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இப்போது ஏன் இந்த உத்தரவு? நாய்க்கடி மற்றும் ரேபிஸ் சம்பவங்கள் அதிகமாவது குறித்த ஊடக தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்திருக்கின்றனர்.
இந்த வழிகாட்டுதல் நொய்டா, குருகிராம் மற்றும் காசியாபாத்துக்கும் பொருந்தும்.
எந்த ஒரு காரணத்தினாலும் எந்த குழந்தையும் ரேபிஸால் பாதிக்கப்படக் கூடாது என சொல்லியிருக்கும் உச்ச நீதிமன்றம், தங்களோட இந்த முடிவு தெருநாய்கள் குறித்த பயமின்றி குழந்தைகள் சாலையில் நடமாடுவதற்கான நம்பிக்கையை கொடுக்கும் என கூறியிருக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு