7 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் காதலியை கரம் பிடித்த இந்தியர்
7 ஆண்டு கால போராட்டம் இது. எட்டாவது ஆண்டில்தான் எங்களுக்கான விசா கிடைத்துள்ளது. ஆனால் ஒருவழியாக இப்போது திருமணம் செய்துகொண்டோம் என்கிறார் நமன் லூத்ரா. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவருடைய காதல் மனைவியின் பெயர் ஷாலீன். இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் பகுதியைச் சேர்ந்தவர்.
ஆம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் நமன் லூத்ரா, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஷாலீன் ஜாவித்தை கரம் பிடித்திருக்கிறார். ஆனால் இந்த திருமணம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. இரண்டு குடும்பங்களும் கிட்டதட்ட 7 ஆண்டுகள் இந்த நாளுக்காக காத்திருந்தன.
ஷாலீனும், நமனும் சிறுவயதிலேயே நண்பர்களாக அறிமுகமாகியிருந்தனர். தங்களுடைய காதலுக்கு குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றுவிட்ட அவர்களுக்கு, விசா பெறுவதுதான் அடுத்த சவாலாக காத்திருந்தது. இறுதியாக வண்ணமயமான அவர்களது திருமண விழா தற்போது இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது.
”நான் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றிருந்தேன். அப்போது நமன் என்னுடன் வந்திருந்தான். அங்கேதான் அவர்கள் இருவரும் சந்தித்தனர். அவர்களுக்கு ஒருவரையொருவருக்கு பிடித்துவிட்டது. இதுகுறித்து நமன் என்னிடம் தெரிவித்தபோது, நான் ஷாலினின் வீட்டில் பேசினேன். எனது பேரனின் சந்தோஷத்திற்காக நான் அவர்களிடம் மன்றாடினேன். ஆனால் இவர்களது திருமணம் நடைபெறுவதற்கு 7 ஆண்டுகள் வரை ஆகும் என நான் நினைக்கவில்லை” என்கிறார் நமனின் தாய்வழி பாட்டியான கிருஷ்ணா மட்டு.
விசா நிராகரிக்கபட்டு வந்த சமயத்தில், நமனும் ஷாலீனும் கர்தார்ப்பூரில் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்களது குடும்பங்களும் உடனிருக்கும். விசா நிராகரிக்கப்பட்டு வந்தது எரிச்சலையும், சோர்வையும் ஏற்படுத்தியதாக இந்த காதல் தம்பதியினர் கூறுகின்றனர். ஆனால் தங்களது திருமணத்தில் அவர்கள் உறுதியாக இருந்ததால் அவர்கள் பொறுமையாக காத்திருந்தனர்.
பிபிசியிடம் பேசிய நமன் லூத்ரா, ”எங்களுக்கு விசா கிடைப்பதற்கு எங்கள் பகுதி எம்எல்ஏ உதவி செய்தார். சமீபத்தில் அவர் குஜராத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கூட, என்னை அழைத்து விசா குறித்த தகவல்களை கூறுவார். எங்களுடைய எம்.பி சன்னி தியோலும் எங்களுக்கு பெரிதும் உதவினார். வெளியுறவுத் துறை அமைச்சகம் வரையிலும் அவர் இதை எடுத்துச் சென்றார்” என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



