இலங்கையின் மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் - ரணில் விக்ரமசிங்க

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் 11ம் தேதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளெழுவதற்கு, இந்தியா வழங்கிய 'உயிர் மூச்சே' காரணம் என ரணில் விக்ரமசிங்க, தனது கொள்கை பிரகடன உரையில் இன்று கூறினார்.

9வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை இன்று (03) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக இந்திய பிரதமருக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்" என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாதாளத்தில் வீழ்ந்த நாட்டைதான் பொறுப்பேறுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டை பொருளாதார ரீதியில் முழுமையாக மீட்டெடுப்பதற்கு சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு கட்சி மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு, பொருளாதார நெருக்கடியை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

''நான் கஷ்டத்தில் விழுந்திருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன். கடுமையான பொருளாதாரப் பிரச்னை ஒருபுறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறுபுறம். எனினும் நாட்டுக்காக இந்த கடினமான சவாலை பொறுப்பேற்க நான் தீர்மானித்தேன். அதற்குக் காரணம் இருளுக்கு சாபமிட்டுகொண்டு இருப்பதை விட ஒரு விளக்கினையேனும் ஏற்றுவது நாட்டிற்காக நான் செய்யும் கடமை என நான் கருதியமையாகும்" என்றார்.

இலங்கைக்கு 1977ம் ஆண்டு புதிய பொருளாதார கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், காலத்திற்கு பொருந்தக்கூடிய வகையில், அதனை நவீனமயப்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

யுக்ரேன் யுத்தம் மற்றும் கோவிட் தொற்று ஆகியவை காரணமாக உலக பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டதாகவும், அந்த நெருக்கடிகள் இலங்கையை மேலும் சிக்கலுக்குள் தள்ளியதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன்போது கருத்துரைத்தார்.

''தற்போதுள்ள மின் வெட்டினை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. பயிர்செய்கைக்காக எதிர்காலத்தில் தேவைப்படும் உரத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சமையல் எரிவாயு பிரச்னை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுவரும் நிலையில்

உள்ளது. வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன," என ரணில் விக்ரமசிங்க கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டு எவ்வாறு தீர்க்கப்படும்?

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பேசிய ரணில் இந்த ஆண்டு இறுதிவரை அதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

''தற்போது நமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்னை எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவே நமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன்போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடு இறக்குமதிகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும். மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை

நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலம் திட்டம் என்ன?

''இந்த கஷ்டங்களிலிருந்து மீளுவதற்கு நாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் நமது நாட்டில் இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படாதவாறு பலமிக்க அடித்தளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம் மாற்றியமைத்தல் வேண்டும். அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம். நான் இன்று உங்கள் முன்னிலையில் தெளிவுபடுத்துவது எங்கள் எதிர்காலத்துக்கு அடிப்படையாகும் திட்டமிடல் சட்டகமாகும். இச்சட்டகத்தினுள் நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் என்பவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படும்." என அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொய்யான கருத்துக்களை வெளியிட்டமையினால், வெளிநாட்டு முதலீடுகளை தடை செய்து, நாட்டுக்கு ஏற்படுத்திய இழப்பு கணிப்பிட முடியாத அளவுக்கு விசாலமானது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்தியாவோடு ஒன்றிணைந்து, திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் போது, இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என கூறி அபிவிருத்தி திட்டங்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு அன்று சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் பட்சத்தில், எரிபொருள் வரிசைகளில் மக்கள் இன்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கும் பாரிய எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதாகவும், தாம் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அதனை செயற்படுத்தியமையினால், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைதியான போராட்டத்திற்கு தான் ஆதரவு வழங்குவதாகவும், போராட்டக்காரர்களை வேட்டையாட போவதாக கூறப்படும் கருத்து போலியானது எனவும் அவர் கூறுகின்றார்.

தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு?

''பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான காரணி ஒன்றாகும். யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அவர்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீர்க்க வேண்டிய காணிப் பிரச்னைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில்

வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையினை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: